Thursday, September 16, 2021

மரணம் எனும் OCD



தற்கொலை எண்ணமும் மரணத்தை fantasize செய்வதும் எனக்கு ஒரு OCDயாக இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் நான் எழுதும் ஒவ்வொரு கவிதையிலும் பொந்திட்டு, வயக்காட்டு எலி போல மரணம் நுழைந்து நாசம் செய்து கொண்டிருந்தது. நான் எழுதுவது எனக்கே பிடிக்காமல் போனது. பல ஆண்டுகள் கவிதையைப் பற்றி யோசிப்பதையே தவிர்த்து வந்தேன். அண்மையில் என் வயதை ஒட்டிய பலரின் இறப்பு / தற்கொலை இக்கவிதைகளை மீளக் கொண்டு வந்து நிறுத்துகிறது.

~*~*~*~*~

உலகின்

முதல் தற்கொலைக்கு முயன்றவனுக்கு

மலை உச்சியில் இருந்து வீழ்கையில்

இறக்கைகள் முளைத்திருந்தால்

இன்றும்

ஏதோவொரு மரத்தின்

உச்சிக்கிளையில் அமர்ந்து

மரணத்தைப் பாடிக்கொண்டிருப்பான்

~*~*~*~*~

இந்த இரவின்

ஒட்டுமொத்த இருளும்

ரத்தம் சொட்டச் சொட்ட

சிலுவையில் அறையப்பட்டுக்கொண்டிருக்கிறது

~*~*~*~*~

இறந்துகொண்டிருக்கும் மீனின்

இறுதி மூச்செனக் கசிகிறது இவ்விரவு

~*~*~*~*~

இறப்பவரெல்லாம் சாமியாகிவிடுகிறார்கள்

இருப்பவர்களை

நாத்திகர்களாக்கிவிட்டு

~*~*~*~*~

இறப்பதற்கு சற்றுமுன்

கண்ட கனவின் மிச்சத்தை

மீண்டும் எப்போது காணுவது ?

~*~*~*~*~

அகாலத்தில் உறையும்

ஊதப்படாத குழலொன்றின் துளையில்

உயிர்விட உத்தேசித்திருக்கிறேன்

என் மரணத்தின் இசையை

மீட்டப்போவது யார் ?

~*~*~*~*~

சூலறுத்த நிசியின்

தனத்தில் கசியும்

பால்நிலவு எனதுயிர்

வளரும் கரையும்

ஒருநாள் மறையும்

~*~*~*~*~

எனது உயிரை

ஒரு பண்டமாக்க முடிந்தால்

அது கருநீலத் திரவமாக

நஞ்சைப்போன்று ஒளிரக்கூடும்

ஒழுகிவிடாத கிண்ணங்கள்

இரண்டு எடுத்து

நாக்குகள் குளிரக்குளிர

நாம் பகிர்ந்து அருந்தலாம்

நீலநதி மேல் நடக்கும்

அணடத்தின் ஒளியை

கிழித்துத் துள்ளும்

எரி நட்சத்திர மீன்களை

அவதானித்தபடியே

~*~*~*~*~

நான் மண் தான்

தொல் உதிரம் உண்டு

பிணம் செரிக்கும் மண்

~*~*~*~*~

மென்சிறகுப் பறவையாக வேணும் இருந்திருக்கலாம்

கண்ணாடிக் கோபுரங்களில் மோதிச் செத்தாலும் பரவாயில்லையென

~*~*~*~*~

கடலையும் கரை மணலையும்

பொன்னாக்கும் ரசவாத அந்தியின்

முடிவில் பூக்கும் இருளில்

உறைந்த சடலத்தின் தணுப்பு

~*~*~*~*~

தூண்டிலின் தியானத்தை

கலைக்கும் மீன்கள்

பெரும் ஒற்றை வரம்

மரணம்

~*~*~*~*~

நான் விழுந்து மரிக்க விரும்பும் மலையுச்சியில்

ஆன்மாவை மயக்கும் மலரைப் பூக்கச் செய்தது யார் ?

~*~*~*~*~

மலையுச்சியில் இருந்து விழுந்தாலும்

மரிக்காத அருவி போல

மனசு வேண்டும்

~*~*~*~*~

என் சதையைச்சுடும் தீயின் மீது

சத்தியத்தின் பெயரால் உமிழ்கிறேன்

அது இன்னும் ஆர்ப்பரித்து எரிகிறது

நெருப்படங்கியபின்னும் அமைதியில்லை

~*~*~*~*~

இருத்தலின் அசைவுகள்

ஏதுமற்றுக் கனக்கும்

இந்த வாழ்க்கையை

யாரிடம் கைமாற்ற ?

~*~*~*~*~

இறந்த பறவையின் கண்களில்

அசைவற்ற ஆகாயத்தின் பிம்பம்

இறகு வடிவ மேகம் மெல்ல நகர்கிறது

~*~*~*~*~

முன்னும் பின்னும் பிரட்டவியலாத

யானையின் பிணம் போல

காலம் நமக்கிடையில்

செத்தழுகிக் கிடக்கின்றது

~*~*~*~*~

எண்ணங்கள் தொலையும் யன்னலே மரணம். வாழ்வின் மீதான நம்பிக்கையைப் போன்ற பெரும் சூழ்ச்சி வேறேதுமில்லை. அன்பும் நேசமும் அலங்கரிக்கப்பட்ட மரணப்பொறிகள்

~*~*~*~*~

அத்தனை அழுகைகளுக்கு மத்தியிலும்

அத்தைகளின் கோபம்

மாமாக்களின் மிரட்டல்

சித்தப்பாக்களின் சலம்பல்

தள்ளி வைத்த தங்கையின் விசும்பல்

சின்னக்குழந்தையின் சிணுங்கல்

தேநீர் தித்திப்பாக இல்லை என்று

எட்டி நிற்கும் யாரோ ஒருவருடைய சலிப்பு

திண்ணையில் இருந்து

குதித்தாடும் சிறுவர்களின் சிரிப்பென

பன்னீர் ரோஜாக்கள் சிதறிய இழப்பு வீட்டில்

எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடிகிறது

இறப்பைத் தவிர…

~*~*~*~*~

ஒவ்வொரு மரணமும் வாழ்கிறவர்களுக்கு ஒரு நினைவூட்டல் - எங்கோ படித்ததா ? நானே எழுதியதா ? கலங்கலாக இருக்கிறது நினைவுக்குளம். எவருடைய கால்தடமும் பதியாது, பாசி படிந்த மனம். எண்ணங்கள் வழுக்குவது இயல்பு தானே !

தற்கொலையைப் பற்றிய கவிதைகள் ஒவ்வொன்றும் அர்த்தமற்றவை என்பதை நான் இப்போது உணர்கிறேன். மரணம் என்பது மரணம் அவ்வளவு தான். அதில் எந்த கவித்துவமும் இருக்கவில்லை.

No comments:

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.