Thursday, September 16, 2021

சதிராடும் மேகங்கள்

 



(உச்சநீதிமன்றத்தில் LGBT உறவுகளுக்கான சட்டபூர்வ அனுமதி கிடைத்ததை ஒட்டி 2010ல் எழுதிய இந்தக்கதையை இன்று பதிகிறேன்)

அப்போது எனக்கு நான்கு வயது தான் இருக்குமென நினைக்கிறேன், நாகர்கோவில் பக்கம் தென்னையும், மாவும் அடர்ந்த தோட்டம் அமைந்த ஒரு தனி வீட்டில் குடி இருந்தோம். எப்போதுமே எனக்கு அந்த வீடு பிடிக்கும். அந்த வீடு மட்டுமல்ல, எதிர்த்த வீட்டு லைப்ரேரியன் மாமா, சுமதியக்கா, அப்புறம் அவர்கள் வளர்த்த பச்சைக்கிளி எல்லாம் பிடிக்கும். அந்தக் கிளியை ரதி என்று தான் கூப்பிடுவார்கள். அது என்னிடம் மட்டும் வரவே செய்யாது. நான் கையை நீட்டினால் தலையை சிலுப்பிக் கொண்டு கடிக்க வரும். பழம் ஏதும் குடுத்தால் கூட கடிக்க வரும். ஆனாலும் அது அழகாக இருக்கும். அவர்கள் வீட்டில் உட்கார்ந்து அதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். சுமதி அக்கா சொல்வாள் அது மந்திரக் கிளியென்று. ஒரு மனிதரை முற்றிலும் வேறு ஒருவராக மாற்றும் வித்தை அதற்குத் தெரியுமென்றும் சொன்னாள். அதைக் கேட்ட பிறகு அந்தக் கிளியின் மேல் எனக்கு கொஞ்சம் பயம் தான். பக்கத்திலே போகாமல் தூரமாக நின்றே அதன் விளையாட்டைப் பார்ப்பேன். எங்கள் வீட்டைச் சுற்றிலும் தோட்டம். வெயிலே தெரியாது. விசாலமான மொட்டை மாடி. யார் வந்தாலும் ஓடியாடி விளையாடலாம். இருட்டில் தான் கொஞ்சம் பயம். மரப்பட்டி வருமாம். பகலில் மரப்பட்டி பாதாள உலகத்தில் சென்று ஓய்வெடுக்குமாம். அதனால் பகலில் மட்டும் தான் நான் மாடிக்குச் செல்வேன். வசந்தகாலம் தொடங்கிவிட்டால் போதும், வீட்டைச் சுற்றியும் மொட்டை மாடி தரை முழுவதும் அத்தனை மாம்பூக்கள் கொட்டி பரப்பியிருக்கும். அவற்றை கையால் அள்ளியெடுத்து வானத்தில் வீசி எனக்கு நானே பூமாரி பொழிந்து கொள்வேன். கைக்கெட்டும் கிளைகளில் இருந்து மாம்பூக்களைப் பறித்து வாயில் போட்டு மெல்லுவதும் உண்டு. துவர்ப்பாக இருக்கும். அந்த ருசியும் மணமும் எனக்குப் பிடித்திருந்தது.

பின் கட்டில் அடுக்குச் செம்பருத்தி அழகாக பூத்ததைப் பார்த்ததும் கிள்ளியெடுத்துக் கொண்டு சுமதியக்கா வீட்டிற்குச் சென்றேன். அவளுக்கு அந்தப் பூவின் மேல் அதிக பிரியம் உண்டு. அவள் வீட்டுக்கு நுழையுமுன், லைப்ரேரியன் மாமா வேகமாக கதவை தள்ளிக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்பாவிடம் அழுது கொண்டே சத்தமாக பேசினார். பேச்சை விட அதிகமாக அழுதார் என்றே சொல்லவேண்டும். பறித்து வைத்த செம்பருத்தி ஒரு வாரத்தில் காய்ந்து சருகாகி விட்டது. கல்லூரிக்குப் போன சுமதியக்கா திரும்ப வரவேயில்லை. சுமதியக்காவிற்கு பைத்தியம் என்றும், பனையேறி ஒருத்தனுடன் ஓடிப்போனதாகவும், அவள் இறந்து போனதாகவும், தெருவில் என்ன என்னமோ பேசிக்கொண்டார்கள். அந்த மந்திரக் கிளி அவளை உருமாற்றியதாக யாருமே சொல்லவில்லை. கிளி அவளை ஒரு வண்ணத்துப் பூச்சியாகத் தான் உருமாற்றியிருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்பினேன்.

பூக்கும் காலம் தான் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் விடுமுறைக்காலமாக இருக்க வேண்டும். அப்போது தான் மரங்களுக்கும் செடிகளுக்கும் அவை இன்பச்சுற்றுலா வந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். அவற்றின் வண்ணங்களுக்கு ஏற்ற வகையில் பெயர் வைத்து அழைப்பேன். வரிப்புலியும், கருஞ்சிறுத்தையும் அடிக்கடி வந்து சிறகை படபடத்து மாமரத்துப்பூக்களில் ஒய்யாரமாய் அமர்ந்து களைப்பை போக்கிக் கொள்ளும். தினமும் அந்திப் பொழுதுகளில் அவற்றை அவதானித்திருப்பதே என் பெருவிருப்பப் பொழுதுபோக்கு. அதன் வண்ணங்களும் சிறகமைப்பும் சிறந்த சிற்பங்களையும் ஓவியங்களையும் விஞ்சிவிடுவதாக இருந்தது. நான் கவனித்த வரை அந்த மாமரம் காய்த்ததே இல்லை. பூக்க மட்டுமே கற்றிருந்த அம்மரத்தை வெட்டியெறிந்தார் அப்பா. அடர்ந்து படர்ந்த அந்த மாமரம் இல்லாமல் வீடே வெறிச்சிட்டது. மாடியிலும் பூக்கள் இல்லை. வண்ணத்துப்பூச்சிகளின் வரவும் அற்றுவிட்டது. ஆனாலும் மாம்பூக்களின் வாசனை என் நாசியை விட்டகல வெகுநாளானது.

அதன் பின் சென்னைக்கு மாறினோம். அடுக்கு வீடுகளில் வாசம். அங்கு மரங்களும் இல்லை, வண்ணத்துப்பூச்சிகளும் இல்லை. ஒரு சில வீடுகளின் வாசலில் தொட்டியில் வளரும் ரோஜாச் செடிகள் இருந்தன. அருகில் சென்று பார்த்தால் தான் தெரிகிறது அது ஒரு ரசாயன காகிதச்செடி. பதியன் போட வேண்டாம். முட்டை ஓட்டை நொறுக்கித் தூவ வேண்டாம். வேப்பம் புண்ணாக்கு விதைக்க வேண்டாம். தண்ணி கூட ஊற்ற வேண்டாம். இந்த ஊரில் எனக்கு பொழுது போக்க ஒன்றுமே இல்லை. ஒரு நாள் சூரியன் சாயும் வேளையில், மாடியில் காய்ந்த துணிகளை எடுக்கச் சென்றேன். அப்போது தான் அதை கவனித்தேன். ஆச்சரியமாக இருந்தது. அந்திப் பொழுது, கிரணங்களின் தூரிகையால் தீட்டப்பட்டு ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகை விரித்து மலரில் அமர்ந்திருப்பதைப் போல காட்சி அளித்தது. எனக்குத் தெரியும். அது நான் மாமர வீட்டில் பெயரிட்டு அழைத்து, சினேகித்து மகிழ்ந்த அதே வண்ணத்துப்பூச்சி தான். இப்போது அது மேகமாக மாறிவிட்டது. எனக்கு எல்லாமே அற்புதமாகத் தோன்றியது. நேரத்திற்கு நிறம் மாறும் வானம் அதில் நிமிடத்திற்கு உருமாறும் மேகங்கள். பலவாறான அபிநயங்களுடன் மாய வித்தைகள் காட்டும் அவை சதிராடும் மேகங்கள். நான் அப்போது சொல்லிக்கொண்டேன். நானும் ஒரு நாள் அந்த மேகமாக மாறிவிடுவேன். நினைத்த உருப்பெற்று எல்லைகளற்ற விண்ணில் விருப்பத்துடன் வலம் வருவேனென்று.

புது வசிப்பிடம் வேறு உலகத்தைப் போலத் தோன்றியது. வேற்றுக்கிரக வாசிகளுக்கு மத்தியில் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தேன். எந்த ஊரிலும் இரண்டு வருடங்களுக்கு மேல் சேர்ந்தாற்போல இருந்ததில்லை. பெற்றெடுத்தவர்களின் பிழைப்பு அப்படி. இருவரும் வேலைக்கு சென்றால் இரவு தான் வருவார்கள். நான் அப்போது தூங்கிக் கொண்டிருப்பேன். காலையில் உணவு செய்துவிட்டு கிளம்பி விடுவார்கள் அப்போதும் நான் தூங்கிக் கொண்டுதான் இருப்பேன். இதில் அடிக்கடி மாற்றல்கள் வேறு. ஆகக்கூடி வருடத்திற்கு ஒரு பள்ளியாக மாறி மாறி படித்து வந்தேன். இப்போது குடியிருக்கும் அடுக்கு மாடி வீட்டில் பக்கத்து குடித்தனத்தில் ஒரு குடும்பம் இருந்தது. அவர்களும் என் பெற்றோரைப் போல தான் எப்போதாவது தான் கண்ணில் தென்படுவார்கள். அந்த வீட்டில் ஒரு தாத்தா இருந்தார். அவர் பெயர் தெரியாது. என்னிடம் அடிக்கடி மணி என்ன என்று கேட்பார் அதனால் அவரை மணி தாத்தா என்று கூப்பிட ஆரம்பித்தேன். நாட்கள் செல்ல செல்ல, அவருடன் நெருங்கிவிட்டேன். பள்ளியில் நடந்த கதைகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் அவரிடம் ஒப்பித்துவிடுவேன். அவர் எப்போதும் அவரின் சொந்த ஊரைப் பற்றிய கதைகளாகத்தான் சொல்லுவார். புதிய கதை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஏற்கனவே பலமுறை சொன்ன கதைகளைத்தான் சொல்லுவார். நானும் இது பழைய கதை என்று அவரிடம் சொல்ல மாட்டேன். இருவரின் தனிமைத் தவிப்புக்கு அந்த பழைய கதைகள் தான் பொழுதுபோக்கு. இப்படியாக நான் பொழுதைப் போக்கினாலும் விதி என்னை வெல்ல நாள் பார்த்துக் கொண்டிருந்தது. படிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக சரிவு ஏற்பட தொடங்கியது. காரணங்களை ஆராய முற்பட்டால் விஞ்ஞான மூளை விபரீதமான விபரங்களை விட்டெறிந்தது. நான் என்னில் இருந்து வேறுபட்ட, என் வாழ்வின் முக்கியமான காலகட்டம் அது. நான் வாழ்வதே முக்கியமா என்று முடிவு செய்ய முடியவில்லை. ஆனாலும் அது முக்கியமான காலகட்டம். என்னதான் மாற்றங்களுக்கு மனம் பழக்கப்பட்டிருந்தாலும் அந்த மாற்றம் என்னை அதிக சஞ்சலத்திற்கு உள்ளாக்கியது. சிக்கலான சிலந்திவலையைப்போல என் உடற்கூறுகளில் என்னையும் அறியாமல் சில மாறுபாடுகள். என் பாலினத் தராசுமுள் நடுநிலையை நோக்கி அடங்காமல் நடந்து சென்றதை தடுக்க முடியாத இயலாமையுடன் உணர்ந்து கொண்டேன். வெளியில் சொல்லமுடியவில்லை. மணி தாத்தாவிடம் கூட சொல்லவில்லை. அவரைப் பார்ப்பதையே தவிர்த்துவந்தேன். உள்ளுக்குள்ளேயே உளைந்து உளைந்து களைத்துப் போனேன். உள்ளத்திற்கு இரும்புத்திரை போட்டேன்.

ஒரு நாள் என் பாலினக் குழப்பங்களைப் பற்றியும் என் மனவேதனையைப் பற்றியும் நான் எழுதி வைத்திருந்த கவிதையைப் படித்த, என் சக மாணவன் ஒருவன் என் ரகசியங்களை அறிந்து கொண்டான். உடனே எல்லாரிடமும் பறையடித்துப் பரப்பிவிட்டான். எப்போதுமே என் வகுப்பில் என்னைத்தான் அதிகம் கேலி செய்வார்கள். இந்த லட்சணத்தில் இது வேறு கிடைத்து விட்டது. எதிர்பார்த்தபடியே எல்லா மாணவர்களும் வகுப்பு வாசலுக்கு வந்து 'ஒம்போது, ஒம்போது' என்று கூச்சலிட்டனர். எவ்வளவுதான் காதை அழுத்தி மூடினாலும் அந்த கூச்சல் கேட்கவே செய்தது, உலையில் கொதிக்கும் மெர்குரியை உருக்கி ஊற்றியது போல இருந்தது. என்னைச் சுற்றி பிரளயமே நடப்பதாகத் தோன்றியது. கோபமும் அவமான உணர்ச்சியும் ஒருசேர வந்ததால் பரப்பியவனைப் பிடித்து முரட்டுத்தனமாய் தாக்கினேன். என் இரும்பு ஸ்கேலின் முனை அவன் முன் தலையில் குத்தி நின்றது. இளஞ்சூட்டில் ரத்தம் கொட்டியது. பள்ளியில் இருந்து வெளியேற்றப் பட்டேன். அதன் பிறகு தான் என் வீட்டிற்கே தெரிந்தது. அப்பாவும் அம்மாவும் அழுதனர். என்னைத் தேற்றவில்லை. என்னால் அவர்களுக்கும் அவமானம். மருத்துவர்களிடம் கூட்டிப் போக அப்பா கூசினார். அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா ஒரு நாள் என்னை மருத்துவரிடம் அழைத்துப் போனார். என்ன என்னமோ பேசினார்கள். எனக்கு எதுவும் கேட்கவில்லை. அப்பாவிடம் அம்மா அழுது பெரிய மருத்துவமனைகளில் பார்த்தோம். பல நாட்கள் பரிசோதனையிலேயே கடந்தது. அதிகப் பணம் தான் செலவானது. அப்பாவுக்கு வீட்டுக்கு வரவே எரிச்சல் உண்டானது. என்னை மையமாக வைத்தும் வைக்காமலும் வீட்டில் அடிக்கடி சண்டைகள். என்னை என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. வீட்டிலேயே அடைந்து கிடந்தேன். மணி தாத்தாவிற்கு ஒரு நாள் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. எனக்கு மனது கிடந்து அடித்துக் கொண்டது. அம்மா போகாதே என்றாள். எனக்கு மனது கேட்கவில்லை. அம்மாவிடம் சொல்லாமல் தாத்தாவைப் பார்க்கப் போனேன். அங்கு எதிர்பார்த்தது போலவே தாத்தாவின் உறவினர்கள் என்னை உதாசீனம் செய்து கேவலமாக நடத்தினர். அதன் பிறகு வீட்டில் வெளியில் எங்கும் விடுவதில்லை. வெளியில் சென்றால் அதன் பின் திரும்பி வந்துவிடாதே என்று அம்மா சொன்னாள். என் அப்பா வெளியில் எங்காவது தொலைந்து போ இங்கு இருக்காதே என்று ஒவ்வொரு நாளும் கத்தினார். எனக்கு என்ன செய்வதென்று முடிவெடுக்கத் தெரியவில்லை. ரத்த உறவுகளும், பெற்ற உறவுகளும் கைவிட்ட நிலையில் அறுபட்ட காற்றாடியாக காற்றின் சுழற்சியில் அலைக்கழிந்தேன்.

பிணத்தைப் போல வீட்டில் கிடந்த நான், ஆந்தைகள் அலறிய ஒரு இரவில் வீட்டினோடு கொண்டிருந்த ஆதார வேர்களை வலுக்கட்டாயமாக அறுத்தெறிந்து வெளியேறினேன். செல்லும் வழியில் மிகுந்த மனக்குழப்பம். ஏதேதோ எண்ணங்கள் மாறி மாறி அடித்தன. திரும்பி செல்லலாமா என்று கூட யோசித்தேன். ஆனால் ஒரே இடத்தில் பிணமாகக் கிடப்பதற்கு எங்காவது கண்காணாத தூரம் சென்று விடலாம் என்று முடிவு செய்து கொண்டேன். ஆயிரம் விதமான வேலைகள் இருக்கும் போதும் இரண்டு மட்டுமே எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றில் ஒன்றைக் கூட செய்வதற்கு என் மனம் ஒப்பவில்லை. என்னால் யாருக்கும் பயனில்லை. காய்க்காத அந்த மாமரமாக மாறிவிட்டேன். அன்பை போதிக்கும் எந்த மதமும் எனக்கு ஆதரவளிக்கத் தயாரில்லை. ஒரு சமயம் என்னை ஈர்த்த இந்த சமூகம் எனக்கு வெறுப்பளிக்கத் தொடங்கியது. என்னை மதிக்காத இந்த சமூகத்தை எனக்கும் மதிக்கப் பிடிக்கவில்லை. எல்லோர் மேலும் கடும் வெறுப்பு வந்தது. வேறுபாடுகளின்றிப் போனதால் பிறந்த மண்ணுக்கும் பாரமாகிப் போனேன். வேறுபாடுகளைத்தான் கல்லாலும் மண்ணாலும் உருவான இந்த உலகம் விரும்புகிறதா ? எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் வானத்து மேகம். இந்த பைத்தியக்கார உலகத்துக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

கால் போன போக்கில் நாட்கணக்காக சுற்றித் திரிந்ததில் நெடுஞ்சாலை ஓரத்தில் ஊரென்று சொல்ல முடியாத ஒரு இடத்தில் தங்கிவிட்டேன். முன் எப்போதோ ஒரு காலத்தில் செழித்திருந்திருக்க வேண்டும். பாழடைந்து போய் பல வீடுகள் இருந்தன. நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் தாகம் தணிக்க ஒரே ஒரு சாயாக்கடை, ஒரு சாராயக் கடை, அது போக ஐம்பது வீடுகள் அவ்வளவுதான். சனநடமாட்டம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லாததால் அங்கேயே இருந்துவிட முடிவு செய்தேன். கொஞ்ச தூரத்தில் சவுக்குத்தோப்பும், மேலே நடந்தால் பரந்து விரிந்த கடலுமாக நான் தங்குவதற்கு ஏற்ற இடமாக இருந்தது. முன்னரே என் விதியை அறிந்து, எனக்காகவே பாழடைந்து கிடந்த வீடுகளில் தங்கிக்கொண்டேன். பகல் பொழுதுகளில் நெடுஞ்சாலை ஓரத்திலும், சவுக்குத் தோப்புகளிலும், கடற்கரையிலும் அலைந்து திரிந்து நேரத்தை ஓட்டிவிடுவேன். எப்படியாவது பொழுது போகத்தான் செய்கிறது ஆனால் இந்த பாவம் செய்த வயிறு மட்டும் வேளா வேளைக்கு தவறாமல் பசித்து விடுகிறது. திருட்டுத் தொழிலும் முறையாக கற்றிருக்க வேண்டும் போல. பெரும்பாலும் திருடும் சமயம் மாட்டிக் கொள்வேன். அடிகளும் வசவுகளும் தாங்க முடியாததாகத்தான் இருக்கும். ஆனால் திருடிய பொருள்களை நான் திருப்பித்தருவதில்லை. உணவுப் பொருட்களைத் தவிர வேறெதையும் திருடியதும் இல்லை. பிழைத்துக் கிடக்க வேண்டும். இரவு வந்தால் ஏதாவது ஒரு பாழடைந்த வீட்டின் மாடிகளில் படுத்துறங்குவேன். கடந்து செல்லும் மேகங்களை ஒரு காவலாளியைப் போல கண்காணித்துக் கொண்டே கண்ணயர்ந்துவிடுவேன். சில சமயங்களில் நடு இரவில் பித்து பிடித்தாற்போல எழுந்து உட்கார்ந்து, மனதிற்கு பிடித்த பாடல்களை உரத்த குரலில் பாடுவேன். ரசிப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். சில கூகைகளும் வவ்வால்களும் மட்டுமே பதில் குரல் கொடுக்கும். பாடல் வரிகள் மறந்து போனாலும் நானாக வரிகள் அமைத்து பாடுவேன். அது இனிமையாகவே இருந்தது. பழைய நினைவுகள் எப்போதாவது வந்து உறுத்தும். அப்போது மட்டும் மௌனமாக அழுவதுண்டு. ஆனால் சமீபகாலமாக நான் பழையது எதையும் எண்ணிப் பார்ப்பதில்லை.

சவுக்குத் தோப்பில் அமர்ந்து மரங்களை எண்ணுவதை பழக்கமாக வைத்துக் கொண்டேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணக்கு வரும். சலிக்காமல் தினமும் அவ்வாறே எண்ணிக்கொண்டிருப்பேன். அப்படி சிரத்தையுடன் சவுக்கு மரங்களை எண்ணிக்கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில் சாயாக்கடையில் வேலை பார்க்கும் சிறுவன் என்னைத் தேடி வந்தான். என்னைத்தான் தேடுகிறார்களாம். என்னைத்தேடி என்ன செய்ய போகிறார்கள். அங்கு சென்ற பின் தான் விபரம் தெரிந்தது. சாயாக்கடை கல்லாவில் இருந்து ஆயிரம் ரூபாயை காணவில்லையாம். காலையில் இருந்து கடைப்பக்கம் நான் மட்டுமே சென்று வந்ததால் இம்மியளவும் சந்தேகமோ கேள்வியோ இன்றி களவாடியது நான் தான் என்று ஒரு மனதாக முடிவு செய்திருந்தார்கள். இருபது இருபத்தைந்து பேர்கள் கூடியிருந்தார்கள். அத்தனை பேரும் மூடர்கள். ஆயிரம் ரூபாயை வைத்து நான் என்ன ரொட்டியை வாங்கி மலையாக குவித்து வைக்கப்போகிறேனா ? சரியான மூடர்கள் தான் அவர்கள். எடுக்கவில்லை என்று முடிவாகக் கூறினேன். அவர்கள் கேட்பதாக இல்லை. பேசிக்கொண்டிருக்கும் போதே ஒருவன் மேசைக்கட்டையை வைத்து முதுகில் அடித்தான். அதில் இருந்த ஆணி தோலில் சிக்கிக் கிழித்தது. பின் மற்றவர்களும் கைக்கு கிடைத்ததை வைத்து அடிக்க ஆரம்பித்தனர். எல்லாரும் அடித்து ஓய்ந்தபின் சாயாக்கடை முதலாளி சுடுதண்ணியை மேலே ஊற்றினார். என் கதறல் கண்ணில் சிக்காத அந்த கடவுளுக்கும் கேட்கவில்லை, சாத்தானுக்கும் கேட்கவில்லை, அங்கு கண்முன் கூடியிருந்த ஒரு முட்டாளுக்கும் கேட்கவில்லை. அடியில் கிழிந்த உடைகளுடன் மிகுந்த அவமானத்துடன் அரைநிர்வாணமாக நான் ஓடுவதைப்பார்த்து அந்த விலங்குகள் சிரித்தன. ஒரு சிலர் அருவருப்பு அடைந்து முகத்தை திருப்பிக் கொண்டனர். வாழ்வதில் இருந்த கொஞ்ச நஞ்ச பிடிப்பும் அத்துடன் அற்றுப்போனது.

சவுக்குத்தோப்பில் கிடந்து அந்தி சாயும் வரை அழுதேன். வாழ்க்கையில் மொத்தத்திற்கும் சேர்த்து வைத்து அழுதேன். இதோடு பழைய நினைவுகளும் சேர்ந்து கொண்டன. மணி தாத்தாவை பார்க்க வேண்டும் போல இருந்தது. பலவித நினைவுகளும் ஒன்றாக சேர்ந்து கொண்டு பெரும் மலையாக என்னை அழுத்தியது. ஒருமுடிவுடன், இருட்டிய பிறகு சாராயக்கடைப் பக்கம் சென்றேன். யாரோ இரண்டு இரண்டு சாராய போத்தல்கள் வாங்கி காரின் மேல் வைத்திருந்தார்கள். அவை இரண்டையும் எடுத்துக் கொண்டு கடற்கரைப் பக்கம் ஓடிவிட்டேன். வாழ்வில் முதன்முறை மதுவின் வாசனை. வாடையிலேயே கசப்பு. கண்ணை மூடிக்கொண்டு ஒரு போத்தல் முழுவதையும் குடித்து விட்டேன். காலி பாட்டிலை உடைத்து நொறுக்கி பொடியாக்கினேன். அதோடு கடல் மணலையும் கலந்தேன். கண்ணீர்த்துளி இரண்டு அதில் விழுந்து கலந்தது. அரைத்த மணலை இரண்டாவது போத்தலில் போட்டு அதையும் குடித்துவிட்டேன். இரவு முழுவதும் நகரும் ஒவ்வொரு நொடியும் மிக மிகக் கொடுமையாக நரகவேதனை. எரிதழலில் இட்ட எறும்புகளாக உடலின் ஒவ்வொரு அணுவும் துடிதுடித்தன. உடம்பின் சதைகள் நெருப்பில் தீய்ந்து கருகுவதைப் போன்ற கொடூரமான காட்சிகள் கண்முன் வந்து சென்றன. விடியும் நேரம். முனகிக் கிடந்த நான் முழித்துக் கொண்டேன். இன்னும் சிறிது நேரம் தான் விடுதலை பெற்று விடுவேன். அதோ தெரிகிறதே முகில்கள். வண்ணத்துப் பூச்சிகள் சிறகை விரித்துக் கிடப்பதாக, ஆலகாலம் அருந்திய கடலின் நுரைத்த அலையாக, கதிரவனின் கசிந்த உதிரத்தை துடைத்த பஞ்சாக, அவற்றுடன் நான் கலந்துவிடுவேன். நொடிக்கோர் அபிநயத்துடன் மாய வித்தைகள் காட்டும் அவை சதிராடும் மேகங்கள்.

No comments:

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.