Wednesday, August 19, 2009

அடுத்த எம்.பி

வரிசைல நின்னு டிக்கெட் வாங்கி, வரிசைல நின்னு ரயில்ல ஏறி, வைகை எக்ஸ்பிரஸ்க்கு உள்ளாரவும் வரிசையாவே நின்னு ஒரு வழியா 300 மைல் தாண்டி மதுரை மண்ணுல கால வச்சதுகு அப்புறம் தான் மூச்சே வந்தது. நிம்மதிப் பெருமூச்சு. நாலு வருசம் படிச்சு, கிழிச்சு, ஒரு வருசம் வேலை தேடி நாயா பேயா, அலைஞ்சு திரிஞ்சு இப்போதைக்கு சொல்லிக்கிற மாதிரி ஒரு வேலை வாங்கிட்டு வாரேன்ல அந்த நிம்மதி.

மதுரையே குலுங்கி குலுங்கி கூத்தடிச்சிட்டு இருந்தது. அப்புறம் சித்திரைத் திருவிழான்னா சும்மாவா ? மாசி வீதிகள்ல கூடியிருந்த சனக்கூட்டத்துக்கு மத்தில நீந்தி போய்ட்டு இருந்தேன். எப்புடியாச்சும் இந்த மொறை அவ சூடம் சுத்தும் போது சாமிக்கும் அவளுக்கும் நடுவுல நின்னுக்கனும். எல்லா பேரும் சாமிய பாக்க நான் மட்டும் அவள நோக்கன்னு ஒரே ரவுசா இருக்கனும்னு முடிவு பண்ணிக்கிட்டேன்.

புள்ளையாரு, முருகனெல்லாம் முன்னாடி போய்ட்டாங்க. மீனாட்சிக்கு தான் எல்லாம் காத்திருந்தாய்ங்க. அங்க அங்க கதற கதற சின்னப்புள்ளைங்கள ஆனைல ஏத்தி விட்டு கொடுமை பண்ணிட்டு இருந்தாய்ங்க. சில வீட்டு பொம்பளைங்க எல்லாம் புருசன் கிட்ட கேக்காதத எல்லாம் பூம்பூம் மாட்டுக்கிட்ட கேட்டுட்டு இருந்துச்சுங்க. அத்தனை ஆரவாரத்துக்கு நடுவுல நான் மட்டும் அவள தேடிட்டு இருந்தேன். இருவதடி தூரத்துல பச்சை தாவணி அவள மாதிரியே இருந்தது. புதுசு போல. நடுவுல ரெண்டு பலூன் கடை, ஒரு சவ்வு மிட்டாய் கடை வேற. நண்டு சிண்டெல்லாம் தாவிக்கிட்டு இருந்தது. நெருங்கி போக கொஞ்சம் செரமமா இருந்தது. சட்டுன்னு பின்னாடி இருந்து ஒரு மொரட்டுக்கை என் தோளப் புடிச்சு நிப்பாட்டுச்சு. ஒருவேளை அவங்கப்பாரு பாத்திருப்பாரோ. ஏற்கனவே அடி வாங்குனது போதாதான்னு கேப்பாரே. பயத்தோட தான் திரும்பிப் பார்த்தேன். அட நம்ம வினோத்.

மொட்டையா வினோத்துன்னு சொல்லக் கூடாது ஏன்னா அந்த பேர்ல எனக்கு ஏகப்பட்ட கூட்டாளிங்க. ஒவ்வொருத்தனுக்கு ஒரு அடைமொழி வச்சுதான் கூப்புடுவோம். வக்கீல் மவன் வினோத், வளையல் கடை வினோத், வித்யாவை கழட்டி விட்ட வினோத், விக்டோரியா டுட்டோரியல் வினோத்.

நந்தி நடுவுல நிக்கும்பாங்க. எனக்கு பின்னாடி நின்னுட்டு இருந்திருக்கு. இவன் விக்டோரியா டுட்டோரியல் வினோத். பார்த்து நாலஞ்சு வருசம் இருக்கும். என் செட் தான். அஞ்சு பாடத்துல அவுட்டு. எனக்கு தெரிஞ்ச வரை மூணு வருசம் டுட்டோரியல்ல படிச்சான். பாஸ் ஆனான்னானு கேட்காதீங்க.

"என்னடா மாப்ள பார்த்து எம்புட்டு வருசம் ஆச்சு. மெட்ராஸ்ல இருக்கிறதா யாரோ சொன்னாங்க. எப்பிடிடா இருக்க. கெரங்கி போய்ட்டியேடா. வேலை அதிகமோ ?", கண்ணடிச்சிட்டே ரெண்டு அர்த்தத்துல கேட்டான்.

"அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லடா. நீ எப்புடி இருக்க. உங்கப்பா இன்னும் உன்ன கெட்ட வார்த்தைல தான் கூப்புடுறாரா ?"

"அவய்ங்கள விடுடா. ஆளு கொஞ்சம் கலராகிட்டியேடா. ஏ.சி.ல தான் வேலையோ. ஏண்டா கம்ப்யூட்டர் படிச்சா ஒரு லட்சமெல்லாம் சம்பளம் குடுப்பாய்ங்களாம்ல அப்புடியாடா ?"

"அதுக்கெல்லாம் அனுபவம் அதிகம் வேணும்டா", இதுக்குள்ள பேசிட்டே ரொம்ப தூரம் கூட்டிட்டு வந்துட்டான்.

"வண்டிய எங்க நடுரோட்டுல கொண்டாந்து ஓட்டுற ஆளு நடக்குறோம்ல. வுட்டா இதுல ஏரோப்பிளேனே ஓட்டுவீய்ங்களே"

"ஆ அடுத்த திருவிழாக்கு வாங்கிட்டு வந்து ஓட்டுரேன் பிளேனு, இப்ப நீ மொத ஓரத்துல போடா"

"எலேய் சிக்குன சின்னாபின்னமாய்டுவடியேய்"

"டேய் அடங்குடா அவன் போய் அரைமணி நேரம் ஆச்சு", சும்மா போன வண்டிக்காரன சத்தாய்ச்சாச்சு. கொட்டுச்சத்தம், கோலாட்டம், ஒட்டகம், ஒயிலாட்டம் எல்லாம் தாண்டி பல சின்ன சின்ன சந்துகள கடந்து ஒரு டீக்கடைல வந்து உக்கார வச்சிட்டான்.

"அண்ணே ஒரு டீ. உனக்கென்னடா ?"

"எனக்கு பால் தான்டா"

"இன்னும் நீ டீ குடிச்சு பழகலையாடா ? 23 வயசானாலும் இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கியேடா. சரி அதவிடு எனக்கும் அப்புடியே உங்க ஆபீஸ்ல ஒரு வேலை வாங்கிக் குடுடா. நெறையா குட்டியெல்லாம் குட்டி குட்டி டிரெஸ் போட்டு திரிவாய்ங்களாம்ல. நாங்களும் அப்புடியே உன்ன மாதிரி காதுல எல்லாம் மாட்டிட்டு அலும்பு குடுப்போம்ல"

"எங்க ஆபீஸ்ல அனுபவம் கேட்பாய்ங்கடா. செரமம்"

"போட்டுக்க சும்மா அஞ்சு வருசம்னு. அதான் டுட்டோரியல்ல ஓட்டுனேன்ல"

எனக்கு செம கடுப்பு. ஏற்கனவே என் ஆள பாக்க விடாம கூட்டிட்டு வந்துட்டான். இதுல நாய்க்கு நக்கலு, நையாண்டி வேற.

"சரி சரி மொறைக்காத. பிசினஸ் ஏதாச்சும் பண்ணலாம்னு இருக்கேன். ஐடியா குடு. உனக்கு தான் எல்லாம் தெரியுமே", இப்புடிதாங்க நம்மள உசுப்பேத்தி விட்டு, ஒசாமா பின் லேடன் எங்கன ஒழிஞ்சிருக்கான், கஞ்சா எல்லாம் எப்புடி கடத்துறாய்ங்க, எதுத்த வீட்டு தாத்தா எத்தனை நாளுல செத்துப் போவாருன்னு கேணத்தனமா கேப்பாய்ங்க. நான் என்ன எமனுக்கு எஸ்.எம்.எஸ் பண்ணியா கேக்க முடியும்.

"எனக்கென்னடா தெரியும். நம்ம முருகன் கிட்ட கேக்கலாம்ல"

"அவன் கிட்ட கேட்டுட்டேன்டா. சரி வா பெங்களூரு போய் யாவாரம் எப்புடி பண்ராய்ங்கன்னு பாத்துட்டு வரலாம்னு கூட்டிட்டு போனான்டா. வீட்டுல 5000 கறந்துட்டு போனோம். ரெண்டு பேரும் சுப்பன் பார்க்கு, லாலு பார்க்கு, அப்புறம் விதான்னு என்னமோ சொன்னாய்ங்க, மேல கொடியெல்லாம் பறந்துச்சு. அங்கெல்லாம் போய்ட்டு சாயந்திரம் ஃப்போரோ, பைவ்வோ ஏதோ ஒரு கடைக்கு கூட்டிட்டு போனான். அது பெரிய பலசரக்கு கடையாம். குண்டூசில இருந்து காரு வரை எல்லாம் விப்பாய்ங்களாம். உள்ளாரவே சினிமா கூட பாக்கலாம்னு சொன்னாய்ங்க. வரும்போது பக்கோடால கோழிய பொரிச்சா மாதிரி ஒரு கருமத்த வாங்கி சாப்பிட்டு வந்தோம்"

"கலக்குற போ. உலகம் சுற்றும் வாலிபன் ஆகிட்ட", என்னா சொல்றதுன்னு தெரியாம என்னவோ சொன்னேன்.

"உன்கிட்ட கேட்க வந்ததே வேறடா. அங்கன ஒரு எடத்துல கட்டையெல்லம் அடுக்கி பந்துருட்டி வெளாண்டுக்கிட்டு இருந்தாய்ங்க. முருகன் கூட ஆடுனான். இங்கனயும் அதே போல இருந்தா நானும் ஆடலாம்னு பார்த்தா எங்க இருக்குன்னு தெரியல. யாருகிட்ட கேட்க்குறது. கழுத அது பேரு கூட என்னன்னு தெரியல"

"அது பேரு ஸ்நோ பவுலிங்டா. மதுரைல கெடையாது. இவ்ளோ ஆர்வமா இருக்கேல நீயே ஒண்ணு ஆரம்பிச்சிடு. நீயும் ஆடுனாப்புல இருக்கும். பிசினஸ் பண்ணாப்புலயும் இருக்கும். என்னா ஒரு 50 லட்சம் ஆகும்", பழிக்குப் பழி :)

"பார்த்தியா கடைசி ஆட்டைக்கடிச்சி, மாட்டைக்கடிச்சி கடைசி என்னையே மாட்டிவிட பாக்குற", அமவுன்ட்ட கேட்டு பய கொஞ்சம் ஆடிப்போயிட்டான்.

"மாப்ள நீ ஒண்ணும் கவலப்படாத. நான் ஐடியா தாரேன். கே.கே.நகர், அண்ணா நகர் பக்கமா ஒரு எடத்தப் பாத்து எல்லாம் செட் பண்ணிரு. அங்கனதான் காச வச்சிக்கிட்டு என்னா பண்றதுன்னு தெரியாம நாய்க்கு பிரியாணி வைக்கிறது, பைவ் ஸ்டார் ஊட்றதுன்னு நெறயா பேரு இருக்காய்ங்க. பிசினஸ் பிக்கப் பண்ணிடலாம்"

"இதெல்லாம் நடக்குற காரியமாடா. நான் பன்னெண்டு படிக்கிறதுக்குள்ளாரவே பன்னெண்டு தடவை டவுசர் கிழிஞ்சிடும் போல. நான் எப்பிடிடா ?"

"அஞ்சாப்பு பெயில் ஆனவனெல்லாம் இன்னிக்கு அஞ்சு அபார்ட்மென்ட் வச்சிருக்கான்டா. நம்பிக்கை தான் வாழ்க்கை. நாலு வார்த்தை மட்டும் நாக்குல சூடு வச்சாப்புல இங்கிலீசுல பேசு போதும். பின்ன தலைக்கெல்லாம் இப்புடி எண்ணெய்யே வைக்க கூடாது. ஆரஞ்சு கலரு, மஞ்ச கலரு, இல்ல ரெண்டும் கலந்துன்னு எதையாவது அடிச்சிக்கனும். முடியெல்லாம் கரண்டுல அடிபட்ட காக்கா கணக்கா நட்டுக்கிட்டு நிக்கணும். இந்தா இப்புடி கட்டம் போட்ட சட்டை, கோடு போட்ட சட்டை எல்லாம் போடக் கூடாது. ரவுண்ட் நெக் பனியன் வாங்கி போட்டுக்க. முக்கியமா அதுல 'My Head is COOL, My Dad is FOOL' அப்புடி கிறுக்குத்தனமா என்னமாச்சும் எழுதிருக்கனும். பேண்ட்டுக்கு கார்கோன்னு சொல்லி அங்க அங்க அறுந்து தொங்கும் பாவாடைய நடுவுல புடிச்சு தச்சா மாதிரி ஒண்ணு போட்டுக்க. இப்டிலாம் இருந்தா தான் உன்ன ஸ்நோ பவுலிங் ஓனர்னு நம்புவாய்ங்க"

"பேண்ட், சட்டை எல்லாம் சரி இந்த மூஞ்சி என்னா பண்ணாலும் காட்டிக் குடுத்துருமேடா"

"அதுக்கு ப்ளீச்சிங் பவுடர் போட்டுக்கலாம். ச்சீ ப்ளீச்சிங் பண்ணிக்கலாம். இது மட்டும் பத்தாதுடா. நாலு ப்ளாஸ்டிக் டேபிளு, சேர் எல்லாம் வாங்கிப்போடு. சோடியா வந்து எவ்வளவு நேரம் உக்காந்து என்னா பண்ணாலும் ஒண்ணும் கேக்க கூடாது. பெப்ஸி, கோக் எல்லாம் பத்து ரூவாய்க்கு வெளில வித்தா நீ இருவத்தி அஞ்சு ரூவாய்க்கு விய்க்கணும். அப்போதான் வாங்குவாய்ங்க. பத்தாக்கொறைக்கு பஜார்ல ரெண்டு ஸ்பீக்கர் செட்டு வாங்கி ஒரு மண்ணும் வெளங்காதபடி நாலு பாட்டுங்கள திரும்ப திரும்ப ஓட விடணும். இதெல்லாம் செஞ்சிட்டேன்னு வைய்யி அடுத்த திருவிழாக்கு நீதான் சாமி"

"மாப்ள கேட்கும் போதே சிலிர்க்குதுடா. நீ பேசுறத கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்குடா. நீ சொல்றது மட்டும் நடந்தா கொஞ்ச வருசத்துல ரெண்டு மூணு சங்கத்த கரெக்ட்டு பண்ணி,'இளம் தொழிலதிபர் விருது', 'அடுத்த விடிவெள்ளி', 'தானே வளர்ந்த தானை தளபதி'ன்னு போஸ்டர் எல்லாம் போட்டு அசத்திரலாம்டா. ஒரு கட்சில சேர்ந்து நாலு கட்சி தாவிட்டா எம்.பி ஆகிடலாம். அப்புறம் ஹெல்த் மினிஸ்டர் கேட்டு வாங்கிடலாம்டா"

"மினிஸ்டர் எல்லாம் அப்புறம் ஆகலாம். மொத குடிச்ச டீக்கும், பாலுக்கும் காசக் குடுங்கடா, கடைய அடைக்கணும்", தான் போட்ட டீய விட சூடா கொதிச்சிட்டாரு.

நாணயத்தின் மறுபக்கம்

உண்மையச் சொல்லனும்னா நம்ம மக்களுக்கு இளைஞர்கள் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை கெடையாதுங்க. ஏன் ? அவங்க அவங்க புள்ளைங்க மேலயே அவங்களுக்கு நம்பிக்கை கெடையாது, அப்புறம் எப்பிடி ஊரான் வீட்டு புள்ளைங்க மேல நம்பிக்கை வைப்பாங்க ? ஒவ்வொரு வீடும் குட்டி நாடு போலத்தான். அதுல ஒவ்வொரு இளைஞனும் மொத்த இளைய சமுதாயத்தோட பிரதிநிதி. 'Charity begins at home' 'Even politics begins at home'.

வெள்ளனமா எந்திரிக்கிறது இல்ல. சாப்பிடறதுக்கு முன்னாடி குளிக்கிறது இல்ல. ஒரு சாமான் உருப்படியா வாங்கத் தெரியாது. வெத்தலை வாங்கியாரச் சொன்னா சுண்ணாம்பும் சேர்த்து வாங்கனும்னு தெரியாது. கால்குலேட்டர் இல்லாம கணக்கு போடத் தெரியாது. ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்றதுக்குள்ள விடிஞ்சு வெள்ளக் கோழி கூவிடும். இதுங்க தான் நாளைக்கு குடும்பத்த காப்பத்த போகுதா ? குடும்பத்தையே காப்பாத்த முடியாதவைய்ங்க எப்பிடிய்யா நாட்டைக் காப்பாத்துவாய்ங்க.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் இதே பொலம்பல் தான். அந்த பொலம்பல்கள மொத்தமா புறந்தள்ளவும் முடியாது. 'காரியக்காரன் காரணம் சொல்ல மாட்டான்'னு சொல்லுவாங்க. நம்ம பயலுக காரணம் சொல்றத மட்டும் கேக்கணுமே.

கே: "ஏண்டா வீட்டுல எல்லாம் மதிய சாப்பாட்டுக்கு உக்கார்ற சமயத்துல எந்திரிக்கிற ?"
ப: "ரெண்டு மாசம் கழிச்சு பரிட்சை வருது அதான் முழிச்சு படிச்சிட்டு இருந்தேன்"
(கிழிச்ச நீ !)

கே: "என்னடா நீ கடைக்கே போறதில்ல, அப்பிடியே போனாலும் சூத்தை கத்திரிக்காயா வாங்கிட்டு வந்திருக்க ?"
ப: "நான் வாங்கும் போது எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு"

கே: "நைட்டு முழுக்க படிச்சியேடா மார்க்கு மட்டும் ஏன் இம்புட்டு கம்மியா இருக்கு ?"
ப: "எனக்கு என்ன தெரியும் எவ்வளவு நல்லா எழுதுனாலும் எனக்கு மட்டும் கம்மியாத்தான் போடுறாய்ங்க. கஞ்சப்பயலுக !"

நாமல்லாம் 'ரமணா' படத்தைப் பார்த்து சிலுத்துக்குவோம். ஆனா நம்ம வேலைய செய்றதுக்கே வேற ஆள தேடுவோம். 'கப்பல் நெறையா பொண்ணு வருதுன்னு சொன்னா, எனக்கு ரெண்டு என் தம்பிக்கு ரெண்டு'ன்னு சொல்லுவாய்ங்களாம். அது போல இலவசமா எதக் குடுத்தாலும் 'ஈ'ன்னு பல்ல இளிச்சிட்டு வாங்கிட்டு நின்னோம்னு வைங்க, குனிய குனிய கொட்டிட்டே தான் இருப்பாய்ங்க. நாலு எடத்துக்கு போக வர இருந்துக்கனும். நாமளே கேட்டுத் தெரிஞ்சு ஏதும் செய்யனும். சீனத்துல ஒரு பழமொழி இருக்குங்க. 'ஒருத்தன் இரவலா ரெண்டு மீன் கேட்டா அவனுக்கு குடுக்காத. ஆனா மீன் பிடிக்க கத்துக்குடு'. நாம் இரவலுக்கு நிக்க போறோமா ? இல்ல மீன் பிடிக்க கத்துக்க போறோமா ? இம்புட்டு வக்கனையா பேசுறியே நீ என்னத்த கிழிச்சன்னு படிக்கிற பத்துல பதினொரு பேரு கேக்குறது காதுல விழுது. நான் புரட்சியெல்லாம் பெருசா பண்ணல. 2 வீலர் லைசன்ஸ் தான் வாங்குனேன். யாருக்கும் லஞ்சம் குடுக்காம, ஒழுங்கா எட்டு ரெண்டு தடவை போட்டு. ஒரு வருசம் அலைஞ்சு வாங்குனேன். ஆனா லைசன்ஸ் வாங்கிட்டு அப்புறம் நாலு பேருக்கு பார்ம் எழுதிக்குடுத்துட்டு ப்ராசஸ் எல்லாம் எப்பிடி ? ஒரு மாசத்துலயே லைசன்ஸ் எப்பிடி வாங்குறதுன்னு விளக்கமா சொல்லிக்குடுத்துட்டு வந்தேன். ஏன்னா எனக்கு தான் அவைங்க என்ன என்ன நொள்ளை சொல்லுவாய்ங்கன்னு நல்லா தெரியும்.

மொத்தமா சேர்ந்து ஒரு காரியம் பண்ணனும்னா ரொம்ப பக்குவமா பதவிசாத்தான் இருந்துக்கனும். ஒண்ணு பட்டாச கொளுத்துனாப்புல பட படன்னு பேசுறது. இல்லாட்டி வாயில வசம்ப வச்சி தேய்ச்சா மாதிரி திரு திருன்னு முழிக்கிறது. ஒருத்தன் ஒரு கருத்து சொல்லிட்டா போதும். 'ஏன் உங்களுக்கு தான் எல்லாம் தெரியுமோ நாங்கள்லாம் என்ன கேணப்பயலுகலா ?' அப்பிடின்னு கேப்போம். தப்போ, சரியோ எல்லாம் ஏத்துக்கற மாதிரி ஆதாரத்தோட சொல்லலாம். வார்த்தைகள்லயும், எண்ணங்கள்லயும் தெளிவு ஏற்படுத்திக்குவோம். சிந்தனையையும், செயல்திறனையும் வளர்த்துக்குவோம். தலைவன்னு சொன்னா ஆயிரம் பேரு இருந்தாலும் அம்புட்டு பேரையும் ஆட்டி வைக்கவும் தெரியனும், அனுசரிக்கவும் தெரியனும்.

வேகத்தோட விவேகமாவும் இருக்க கத்துக்குவோம். அரசியல்வாதிங்க இருக்காய்ங்களே நாம் கொஞ்சம் யோசிச்சு ஏதாச்சும் கேள்வி கேட்டம்னு வைங்க. ஒடனே கஞ்சா கேஸ்ல போட்டு உள்ள தள்ளிருவாய்ங்க. அதெல்லாம் எப்பிடி சமாளிக்கிறதுன்னு தெரிஞ்சிக்கனும்.

"பல வேடிக்கை மனிதரைப் போலே, நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ?" - பாரதி

பி.கு: இந்த ஒரு பதிவுல உலகத்தை மாத்திடலாம்னு நான் நினைக்கல. தெரிஞ்சவங்களுக்கும் தெரிஞ்சுக்க விரும்பாதவங்களுக்கும் சொல்லத் தேவையில்ல. இது முழுக்க முழுக்க என்னோட கருத்து.