Thursday, September 16, 2021

சில்வியாவின் கடிதம்

 

 உன்மத்த அன்பு கொண்ட அர்வினுக்கு, கீழ்த்திசையின் தொலைவில் எப்போதாவது சின்னதாய் மினுங்கும் துயர நட்சத்திரமொன்றிலிருந்து சில்வியா எழுதுகிறேன். எத்தனை நாள் இந்த நட்சத்திரமென்று தெரியவில்லை. முதலில் இங்கு நாட்களே இல்லை. ஒரு விண்மீனிலிருந்து மற்றொன்றுக்கு நீந்திக்கொண்டே இருக்கிறேன். ஒரே நேரத்தில் தென்கிழக்கிலும், மேற்கிலும் இருக்கிறேன், பிறகு அனைத்து நட்சத்திரங்களிலும் ஒரே சமயத்தில் இருக்கிறேன். இந்த ஒழுங்கின்மை எனக்குப் பிடித்திருக்கிறது அர்வின். 

             பூமியின் இருட்டு இங்கு இல்லை. கண்களை எரிக்கும் வெளிச்சம். அங்கே வெளிச்சத்தில் மட்டுமே நீங்கள் எதையும் பார்க்கிறீர்கள். இங்கு வெளிச்சத்தில் வெளிச்சத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. ஒளியை விழுங்கும் ஒளி. நட்சத்திரங்களுக்கு இடையிலான இருள் தான் எனக்கு ஆசுவாசமாக இருக்கிறது. நிக்கலசை இங்கு நான் சந்திக்கவில்லை. இறந்தவர்கள் அனைவரும் எங்கு உறைகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு அவசியமுமில்லை. எந்தப்பற்றுகளும் கட்டுகளுமற்ற தனிமையில் மிதக்கிறேன். என் கவிதைகள் எதுவும் எனக்கு ஞாபகமில்லை. பெரும்பாலான என் நினைவுகள் அழிந்துவிட்டன. சொற்பமாக மீந்திருப்பவைகளும் மறைந்துவிட்டால் சுகமாகக் கரைந்துவிடுவேன் ஒரு கருந்துளையில்.

             நான் என் வீட்டுக்கு வருவதேயில்லை அர்வின். நிக்கலசைப் போல உனக்கும் ஒரு கசப்புக்காபியைத் தயார் செய்வதற்கு அங்கு குவளைகள் இல்லை. பாஸ்டனில் இருக்கும் கசப்புக்கு எத்தனை குவளைகள் இருந்தாலும் போதாது. அங்கே பனியின் பொழிவும் கசக்கும், இலையின் அசைவும் கசக்கும். நான் எனது மகனுக்கு அளித்த ஒரே பரிசு எனது மரணம். அதை விட அழகான ஒன்றை என்னைத் தவிர வேறு யார் பரிசளிக்க முடியும் அவனுக்கு ? என்னது அவனும் தற்கொலை செய்து கொண்டானா ? நீ சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது. அது குறித்து எனக்கு எந்தப்புகாரும் இல்லை. அவனுடைய மரணத்தை ஆற்றில் நெளியும் சிறு மஞ்சள் மீனுக்கு அவன் இரையாகக் கொடுத்திருக்கலாம். உன்னைத் தவிர வேறு யாரும் எனக்கு எழுதுவதில்லை.  அர்வின் எனக்கு நீ எழுதிய இந்தக் கடிதம் மட்டுமல்லாமல் எழுத நினைத்த அனைத்தையும் நான் வாசித்து வருகிறேன்.

            சாவின் அனுபவத்தை அறிய உனக்கிருக்கும் அதீதப் ப்ரயாசையை நான் நன்கு அறிவேன். தற்கொலையைப் பற்றிய கவிதைகள் ஒவ்வொன்றும் அர்த்தமற்றவை என்பதை நான் இப்போது உணர்கிறேன். மரணம் என்பது மரணம் அவ்வளவு தான். அதில் எந்த கவித்துவமும் இருக்கவில்லை. வாழமுடியாமைக்கான சமரசம் தான் மரணம். அங்கே நானிருந்த ஒவ்வொரு நொடியும் பெருங்கற்பாறைகள் என் உணவுக்குழாயிலும் இதயத்தின் ரத்தநாளங்களிலும் சிக்கியிருந்தன. அதை வெளியேற்றும் என் முயற்சியைத் தான் தற்கொலை என்று அவர்கள் அழைத்தார்கள். 

             உனக்கொன்று தெரியுமா அர்வின் ? நான் இறுதியில் எழுதியவை எதுவும் கவிதைகளில்லை. அவை வார்த்தைகளின் வன்முறை. எண்ணங்களின் கோர முகம். உள்ளிருந்து என் நரம்புகளையும் எலும்புகளின் மையங்களையும் அரித்துக் கொண்டிருந்த எழுத்துக்களையும், சீழ்பிடித்த என் ரத்தத்தின் ஓடுபாதைகளில் தேங்கியிருந்த சொற்களையும் சதைகிழித்து பிரித்தெடுத்து அடுக்கியிருந்தேன். அவற்றை நான் ஒருமுறை கூட வாசித்தது கிடையாது. 

             அன்று அடுப்பில் நான் முகம்புதைத்த போது அழுதுகொண்டிருந்தேன் அர்வின். அப்போது வெளிப்பட்ட இளஞ்சூட்டு எரிவாயு எத்தனை ஆதரவாக இருந்தது. தாயின் கர்ப்பச்சூட்டை ஏகாந்தமாக உணர்ந்தேன். வெகு நிதானமாக பதற்றமில்லாமல் கார்பன் மோனாக்சைடை சுவாசித்தேன். அதுவரை பாரமேற்றிய பெருங்கற்பாறைகள் அப்போது கரைவதை என்னால் நன்றாக உணர முடிந்தது. கடைசி மூச்சை இழுத்து முடித்தப்பின்னும் நான் அங்கேயே தான் வெகு நேரம் இருந்தேன். அடுப்பு மேடையில் சரிந்த என் சாப உடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். பிதுங்கிய விழிகளின் ஓரங்களில் கசிந்த ரத்தம் என் முகத்தில் அதி சௌந்தர்யமான ஒரு செவ்வியல் ஓவியத்தை வரைந்திருந்தது. 


No comments:

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.