Thursday, January 6, 2011

சில ரணங்கள், சில கேள்விகள்


வானொலியில் யாம்வளர்த்த
வான்தமிழே வந்தெங்கள்
வதைப்பட்ட வஞ்சியரின்
வேதனையைக் கேட்பாயா ?


கருத்தினிலே வீற்றிருக்கும்
கதிர்காமத் திருமுருகா
கற்பழிந்த கன்னியரின்
கண்ணீரைப் பார்ப்பாயா ?

வன்னியிலே விதைத்திருக்கும்
கண்ணியிலே விழுந்திடலாம்
கள்ளப்பயல் சிங்களவனனின்
கைகளிலே விழலாமா ?

கூவியழைக்கும் தூரத்திலே
கூடியிருக்கும் எம்தமிழர்
கூப்பிட்டால் வருவாரென
காத்திருந்த எம்மக்கள்
கதறிக்கதறி அழுவதுங்கள்
காதுகளில் விழவில்லையா ?

பெற்றதாய் பிணமாக
உற்றவளும் உரமாக
மானமுள்ள நானிந்த
மண்ணோடு போயேனோ ?

சமராட களமுமில்லை
காப்பாற்ற சனமுமில்லை
பயனற்ற பிறவியிங்கு
இருந்தென்ன மிச்சம் ?
இறந்தென்ன நட்டம் ?

- ஈழத்தில் பிழைத்துக் கிடக்கும் ஒரு(ஒரே) தமிழன்.

ஈழத்தில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலையில் அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட கொடுரத்தை சாட்சிப்படுத்தியிருக்கும் புகைப்பட ஆவண நூல் 9-1-2011 அன்று சென்னை தி.நகரில் உள்ள செ.தெய்வநாயகம் பள்ளி வளாகத்தில் மாலை 3 மணி அளவில் வெளியாகிறது. நூலைப்பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள். இதனை உலகத்தில் மனசாட்சி உள்ள மனிதர்கள் அத்தனை பேரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்.

தோழமையுடன்,
அவனி அரவிந்தன்.
+919791143693.

Wednesday, December 8, 2010

கொண்டாட்டம்

'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' - இருக்கும்ல ! பயலுக்கு(நம்ம முருகன் தான் !) மொத மொத கல்யாணம் நடந்த இடம்ல அதுனால கொண்டாட்டமா தான் இருக்கும். பின்னாடி அவரு வள்ளினு ஒரு 'ஷாமியோவ்' டிக்கட்ட கரெக்ட் பண்ணி சைடுல சேர்த்துக்கிட்டது தனி கதை. சாமி செஞ்சா தப்பில்லையாம், ஆசாமி செஞ்சா தப்பா ? சொல்லுங்கண்ணே தப்பா... ?

Sunday, October 17, 2010

நெகிழிக் கோப்பைகள் - கவிதை


"குளிர்காலத்தில் இது 
உடம்புக்கு நல்லதுப்பா !"

"எப்பவாச்சும் எடுத்துக்கிட்டா தப்பில்லையே !"

"அப்பப்போ சேர்த்துக்கிட்டா
இதயத்துக்கு நல்லாதாம்ல !",

போன்ற சப்பைக்கட்டுகளுடனே
பெரும்பாலான நேரங்களில் நாம் அதை
விலை கொடுத்து வாங்குகிறோம்
கூடவே ஓரிரு நெகிழிக் கோப்பைகளையும்...

ஆரம்பத்தில் அளவு சரி பார்த்து
கோப்பைகளில் பரிமாறப்படுகிறது
சந்தோச துக்க தருணங்கள்...

புலனறியாத பொழுதுகளில்
மயக்கும் மன்மத நீர்மம்
குருதியுடன் புணர்ந்த பின்னர்
அளவுகளைத் தொலைத்து 
எக்குத் தப்பாய் நிறைத்து 
வழியவிடுகிறோம் கோப்பைகளை...

நிலவை நாலாய் மடித்து 
அதனோரத்தில் நட்சத்திரங்கள் தெளித்த
சிவப்புப் பூ ஒன்றை ஒட்டிப் பரிசளிக்கிறோம்
அவர்களின் கூந்தல்முடி கலைந்ததற்கு 
காற்றுடன் கத்திச் சண்டை போடுகிறோம்
நாய்களின் பூனைகளின்
பெயர் வைத்தழைத்து சிரித்துக் கொள்கிறோம்
ஒரு நொடி பிரிந்தாலும் உயிர்விடுவேனென்று 
பரஸ்பரம் பிதற்றிக் கொண்டு அலைகிறோம்...

சலித்துத் தீர்ந்த நொடியில்
மறுப்பேதுமின்றி அமைதியாக எழுந்து 
தெளிந்த சிந்தையுடன் கைகுலுக்கி
ஒருவரையொருவர் திரும்பிப் பாராமல்
வேறு வேறு திசையில் நடக்கிறோம்...

போகிற வழியில் இருவரும் 
சர்வ சாதாரணமாக
கசக்கி எரிகிறோம்
அந்த நெகிழிக் கோப்பைகளை,
நட்பென்ற பெயரில்
நாம் பழகித் திரியும்
சில காதல்களைப் போல...!
-
அவனி அரவிந்தன்

Saturday, October 16, 2010

அவர்களுக்குத் தெரியாதது - கவிதை


உச்சிவெயிலின் போது கண்பட்டையில் 
முள்ளிறங்கியதைப் போல ஒரே வலி
இடது காதுக்கடியில்
கீழ்த்தாடைக்கும் கழுத்துப்பகுதிக்கும் சமீபமாக
ஓரிரு கீறல்கள் முளைத்திருந்தன...

தொய்யும் மனதினூடே
பெருங்குன்றின் பாரமேறி
எச்சிலை விழுங்குவதற்கு
எப்போதும் சற்றுச் சிரமமாக இருக்கிறது...

இரண்டாவது காதலியுடன்
ஆற்றங்கரையில் கரைந்த கணங்களையும்
மருக வைக்கும் ஈரமணலின்
நாசியை விட்டகலாத சுகந்தத்தையும்
அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்...

என்னைச் சுற்றிலும்
உயரச் சுதந்திரம் 
சீராக மறுக்கப்பட்ட சிறுபுற்கள்
வட்டப் பாதையில் நட்ட
அலங்காரச் செடிகளில்
ஒழுங்கற்று வளர்ந்த பூவினங்கள்
அதன் மத்தியில் 
சிற்ப வேலைப்பாடுகளில்
சிறை கொண்டிருந்த பீடத்தில்
வெற்றுக் காகிதமும் வெறுங்கையுமாக
வீற்றிருக்கிறேன்...

என் மேல்
சனக்கூட்டம் மிதமிஞ்சிய சாலையின்
குழப்பம் பூசிய முகங்கள்
மொய்த்துப் பின் நழுவி விலகுகின்றன...

காதைக் கொடுங்கள் 
அவர்களுக்குத் தெரியாததொன்றை
உங்களுக்கு மட்டும் 
ரகசியமாகச் சொல்கின்றேன்
நூற்றாண்டுக் கால மனிதர்களை
அவதானித்துக் கொண்டிருந்தாலும்
இந்த நடுச்சந்தியில் எனது இருப்பின் 
உணர முடியா வெறுமையைப் பதிவு செய்யவே
நான் சிலையாகச் சமைந்திருக்கிறேன்...
-
அவனி அரவிந்தன்

Wednesday, July 7, 2010

தூண்டிலைத் தின்னும் மீன்கள் - கவிதை




ந்து வருடத்துக்கு முன்பான 
நிழல் நீண்ட ஒரு மாலைப் பொழுதி்ன்
வெள்ளி முளைத்த வேளையில்
தூக்கு மாட்டிக் கொண்ட அந்த இருவரைத் தவிர
வேறெவரும் அறிந்திராத
அந்த அரையிருட்டு அறையில்
அவர்களின் இறுதி சந்திப்பு
நிகழ்ந்து கொண்டிருக்கிறது நித்தமும்
எப்பொழுதும் அவனே முதலில் மௌனத்தை அறுப்பான்

"
தூண்டிலைத் தின்னும் மீன்கள் பெண்கள் !"

"
என்ன தான் உனக்குப் பிரச்சினை ?"

"
எல்லாமே தான்"

"
நானும் தானே ?"

"
நீ மட்டுமில்லை"

"
வேற என்னல்லாம் ?

"...."

"
பதில் சொல்ல மாட்டியா ?"

"
சொல்லத் தெரியலை"

"
அப்போ என்னதான் தெரியும் ?"

"
இல்லாததை உருவாக்குவேன்
இருப்பதை அழகாக்குவேன்"

"
இதுதான் உன்னோட பிரச்சினை !"

"
இதுவே தான் முன்பு உனக்குப் பிடித்திருந்தது""

"
உனக்கு சொன்னா புரியாது. நான் போறேன்"

"
நாளைக்கும் வருவாயா ?"

"
தெரியலை"

"
பத்திரமாக வீட்டுக்குப் போனதை மறக்காமல்
எனக்குத் தகவல் சொல்வாயா ?"

"
உன்னிடம் எப்படிச் சொல்வது ?"

"
வீட்டில் ஜன்னல் இருக்கிறதில்லையா ?"

"
ம்ம் இருக்கு அதுக்கென்ன ?"

"
ஜன்னலுக்கு வெளியே
கூட்டுக்குத் திரும்பிச் செல்லும்
ஏதோ ஒரு பெயர் தெரியாத பறவையிடம்
தகவல் சொல் போதும்"

"
நீ திருந்தவே மாட்ட...."

அவள் போன பின்பும்
அவள் சுவாசம் அவள் வாசம்
அவள் கோபம் அவள் குரல்
அவள் பார்வை அவள் தேவை எல்லாமும்
அவனது நிழலுடன் சேர்ந்து
விளக்கு எரியாத அந்த அறையின்
கருந்துளை இருளில் கலந்திருந்தது
பெயர் தெரியாத ஜன்னல் பறவையின்
தகவலுக்காக வேண்டி
அவனது தவம்
தொடர்ந்து கொண்டிருக்கும்
காலங்களைக் கடந்து....!
-
அவனி அரவிந்தன்

Saturday, June 5, 2010

கண்ணாடிச் சிதறல்கள் - கவிதை



 
 
வீட்டின் முன்பகுதில் நட்டிருந்த மூங்கில்கள்
பூவிட்டிருந்த ஒரு அதிகாலைப் பொழுதில்
கிரணங்கள் தீட்டிய சித்திரம் போல நீ வந்திருந்தாய்
என்னைத் தவிர மற்ற அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்த
உன்னைப் பிரதியெடுக்க பிரயத்தனப்பட்டன...
என் வீட்டின் நிலைக் கண்ணாடிகள் அனைத்தும்
ஆனால் கையலம்பும் குழாய்க்கு மேலே தொங்கும்
பழைய கண்ணாடிக்கு மட்டுமே அன்று யோகம் போல
உனக்கு அந்தக் கண்ணாடியை
நினைவிருக்குமா எனத் தெரியவில்லை
பச்சை நிறத்தில் சட்டம் கட்டியிருக்கும்
ஓரங்களில் லேசாக உப்புப் படிந்திருக்கும்
நேற்று முன்தினம் அந்தக் கண்ணாடி
அதை மாட்டி வைத்திருந்த
ஆணியில் இருந்து கழன்று
கீழே விழுந்து தெறித்தது !
இத்தனை நாட்களாக
உன் முகத்தை
நினைவுகொள்ள முயன்று
தோற்றதால் இருக்கலாம்...
சிதறிக் கிடந்த சில்லுகள் ஒவ்வொன்றையும்
உற்றுப் பார்க்கிறேன் - அவை
உன்னைத் தவிர வேறு எதையெதையோ
பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன...!
-
அன்புடன் அவனி அரவிந்தன்.
வெளியிட்டதற்கு நன்றி காட்சி !

Wednesday, May 5, 2010

பதில்களற்ற மடலாடல் - கவிதை


முந்தைய குளிர் இரவின்
தனிமை ஏற்றிவிட்ட கனத்தை
கரைத்துவிடும் குறிக்கோளுடன்
சாலையில் போவோர் வருவோர்
அனைவரைப் பார்த்தும் சிரிக்கிறான்
முறைப்புகளைப் பொருட்படுத்தாமல்
சலாம் வைக்கிறான்
அவ்வப்போது கொஞ்சம்
பாலிதீன் காகிதங்களையும்
அவன் கடித்துக் கொள்கிறான்...

சுண்ணாம்பும் கரியும் கொண்டு
வரையப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதி
தார் தரையில்
அருள் பாலித்துக் கொண்டிருக்க,
நடந்து செல்லும் பக்தரெல்லாம்
கன்னத்தில் போட்டபடியே
கடந்து போகிறார்கள்
சாலையின் சரிவில் புரளும்
கால்களற்ற ஓவியனின்
வர்ணம் இழந்த கண்களை
நேர்கொண்டு பார்க்கும் போது
சட்டைப்பையில் சிறைப்பட்ட சில்லறைகளைத்
தடவிப் பார்த்துக் கொண்டே
மறைந்து போகிறார்கள்...

மாராப்பை பூமிக்குத்
தாரை வார்த்துவிட்டு
வளைந்து நெளிந்து
பிரம்மாண்டமாய் நிற்கும் அழகியின்
பட்டுத் துணி மூடிய
பாகங்கள் குறித்த கற்பனையில்
பல விதமான கண்கள்
குத்திக் கிடக்கின்றன
விழிகளை விட்டுச் சென்றவர்கள்
அவற்றை மீண்டும் எடுத்துக் கொள்ள
மறந்து போகிறார்கள்...

மரணத்துடன்
மடலாடிக் கொண்டிருக்கும்
மூதாட்டியின் சுருங்கிய கண்வழியே
விரியும் இந்த
சாளரத்து உலகம்,
எந்தப் பார்வைகளைப் பற்றிய
பிரக்ஞையும் இன்றி
தன் போக்குக்கு
சுழித்து ஓடிக் கொண்டிருக்கிறது...

செவிலிப் பெண்ணொருத்தியின்
"பாட்டி உங்களுக்கு
மேல் வார்டுக்கு மாத்திருக்கு
போலாமா ?", என்ற குரலுக்கு,
மூச்சை ஆழமாக உள்ளிழுத்தபடி
சாளரத்துக்கு வெளியில்
வேடிக்கை பார்த்துக் கொண்டே
"ஆகட்டும்", என்று சொல்லி
ஆயத்தம் ஆகிறாள்
அப்போது சாளரத்தின் திரைச்சீலை
காற்றில் மெலிதாகப்
பிரண்டு கொண்டிருந்தது....!
-
அன்புடன் அவனி அரவிந்தன்.

வெளியிட்டதற்கு நன்றி உயிர்மை !

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2553