Wednesday, December 8, 2010

கொண்டாட்டம்

'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' - இருக்கும்ல ! பயலுக்கு(நம்ம முருகன் தான் !) மொத மொத கல்யாணம் நடந்த இடம்ல அதுனால கொண்டாட்டமா தான் இருக்கும். பின்னாடி அவரு வள்ளினு ஒரு 'ஷாமியோவ்' டிக்கட்ட கரெக்ட் பண்ணி சைடுல சேர்த்துக்கிட்டது தனி கதை. சாமி செஞ்சா தப்பில்லையாம், ஆசாமி செஞ்சா தப்பா ? சொல்லுங்கண்ணே தப்பா... ?

Sunday, October 17, 2010

நெகிழிக் கோப்பைகள் - கவிதை


"குளிர்காலத்தில் இது 
உடம்புக்கு நல்லதுப்பா !"

"எப்பவாச்சும் எடுத்துக்கிட்டா தப்பில்லையே !"

"அப்பப்போ சேர்த்துக்கிட்டா
இதயத்துக்கு நல்லாதாம்ல !",

போன்ற சப்பைக்கட்டுகளுடனே
பெரும்பாலான நேரங்களில் நாம் அதை
விலை கொடுத்து வாங்குகிறோம்
கூடவே ஓரிரு நெகிழிக் கோப்பைகளையும்...

ஆரம்பத்தில் அளவு சரி பார்த்து
கோப்பைகளில் பரிமாறப்படுகிறது
சந்தோச துக்க தருணங்கள்...

புலனறியாத பொழுதுகளில்
மயக்கும் மன்மத நீர்மம்
குருதியுடன் புணர்ந்த பின்னர்
அளவுகளைத் தொலைத்து 
எக்குத் தப்பாய் நிறைத்து 
வழியவிடுகிறோம் கோப்பைகளை...

நிலவை நாலாய் மடித்து 
அதனோரத்தில் நட்சத்திரங்கள் தெளித்த
சிவப்புப் பூ ஒன்றை ஒட்டிப் பரிசளிக்கிறோம்
அவர்களின் கூந்தல்முடி கலைந்ததற்கு 
காற்றுடன் கத்திச் சண்டை போடுகிறோம்
நாய்களின் பூனைகளின்
பெயர் வைத்தழைத்து சிரித்துக் கொள்கிறோம்
ஒரு நொடி பிரிந்தாலும் உயிர்விடுவேனென்று 
பரஸ்பரம் பிதற்றிக் கொண்டு அலைகிறோம்...

சலித்துத் தீர்ந்த நொடியில்
மறுப்பேதுமின்றி அமைதியாக எழுந்து 
தெளிந்த சிந்தையுடன் கைகுலுக்கி
ஒருவரையொருவர் திரும்பிப் பாராமல்
வேறு வேறு திசையில் நடக்கிறோம்...

போகிற வழியில் இருவரும் 
சர்வ சாதாரணமாக
கசக்கி எரிகிறோம்
அந்த நெகிழிக் கோப்பைகளை,
நட்பென்ற பெயரில்
நாம் பழகித் திரியும்
சில காதல்களைப் போல...!
-
அவனி அரவிந்தன்

Saturday, October 16, 2010

அவர்களுக்குத் தெரியாதது - கவிதை


உச்சிவெயிலின் போது கண்பட்டையில் 
முள்ளிறங்கியதைப் போல ஒரே வலி
இடது காதுக்கடியில்
கீழ்த்தாடைக்கும் கழுத்துப்பகுதிக்கும் சமீபமாக
ஓரிரு கீறல்கள் முளைத்திருந்தன...

தொய்யும் மனதினூடே
பெருங்குன்றின் பாரமேறி
எச்சிலை விழுங்குவதற்கு
எப்போதும் சற்றுச் சிரமமாக இருக்கிறது...

இரண்டாவது காதலியுடன்
ஆற்றங்கரையில் கரைந்த கணங்களையும்
மருக வைக்கும் ஈரமணலின்
நாசியை விட்டகலாத சுகந்தத்தையும்
அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்...

என்னைச் சுற்றிலும்
உயரச் சுதந்திரம் 
சீராக மறுக்கப்பட்ட சிறுபுற்கள்
வட்டப் பாதையில் நட்ட
அலங்காரச் செடிகளில்
ஒழுங்கற்று வளர்ந்த பூவினங்கள்
அதன் மத்தியில் 
சிற்ப வேலைப்பாடுகளில்
சிறை கொண்டிருந்த பீடத்தில்
வெற்றுக் காகிதமும் வெறுங்கையுமாக
வீற்றிருக்கிறேன்...

என் மேல்
சனக்கூட்டம் மிதமிஞ்சிய சாலையின்
குழப்பம் பூசிய முகங்கள்
மொய்த்துப் பின் நழுவி விலகுகின்றன...

காதைக் கொடுங்கள் 
அவர்களுக்குத் தெரியாததொன்றை
உங்களுக்கு மட்டும் 
ரகசியமாகச் சொல்கின்றேன்
நூற்றாண்டுக் கால மனிதர்களை
அவதானித்துக் கொண்டிருந்தாலும்
இந்த நடுச்சந்தியில் எனது இருப்பின் 
உணர முடியா வெறுமையைப் பதிவு செய்யவே
நான் சிலையாகச் சமைந்திருக்கிறேன்...
-
அவனி அரவிந்தன்

Wednesday, July 7, 2010

தூண்டிலைத் தின்னும் மீன்கள் - கவிதை
ந்து வருடத்துக்கு முன்பான 
நிழல் நீண்ட ஒரு மாலைப் பொழுதி்ன்
வெள்ளி முளைத்த வேளையில்
தூக்கு மாட்டிக் கொண்ட அந்த இருவரைத் தவிர
வேறெவரும் அறிந்திராத
அந்த அரையிருட்டு அறையில்
அவர்களின் இறுதி சந்திப்பு
நிகழ்ந்து கொண்டிருக்கிறது நித்தமும்
எப்பொழுதும் அவனே முதலில் மௌனத்தை அறுப்பான்

"
தூண்டிலைத் தின்னும் மீன்கள் பெண்கள் !"

"
என்ன தான் உனக்குப் பிரச்சினை ?"

"
எல்லாமே தான்"

"
நானும் தானே ?"

"
நீ மட்டுமில்லை"

"
வேற என்னல்லாம் ?

"...."

"
பதில் சொல்ல மாட்டியா ?"

"
சொல்லத் தெரியலை"

"
அப்போ என்னதான் தெரியும் ?"

"
இல்லாததை உருவாக்குவேன்
இருப்பதை அழகாக்குவேன்"

"
இதுதான் உன்னோட பிரச்சினை !"

"
இதுவே தான் முன்பு உனக்குப் பிடித்திருந்தது""

"
உனக்கு சொன்னா புரியாது. நான் போறேன்"

"
நாளைக்கும் வருவாயா ?"

"
தெரியலை"

"
பத்திரமாக வீட்டுக்குப் போனதை மறக்காமல்
எனக்குத் தகவல் சொல்வாயா ?"

"
உன்னிடம் எப்படிச் சொல்வது ?"

"
வீட்டில் ஜன்னல் இருக்கிறதில்லையா ?"

"
ம்ம் இருக்கு அதுக்கென்ன ?"

"
ஜன்னலுக்கு வெளியே
கூட்டுக்குத் திரும்பிச் செல்லும்
ஏதோ ஒரு பெயர் தெரியாத பறவையிடம்
தகவல் சொல் போதும்"

"
நீ திருந்தவே மாட்ட...."

அவள் போன பின்பும்
அவள் சுவாசம் அவள் வாசம்
அவள் கோபம் அவள் குரல்
அவள் பார்வை அவள் தேவை எல்லாமும்
அவனது நிழலுடன் சேர்ந்து
விளக்கு எரியாத அந்த அறையின்
கருந்துளை இருளில் கலந்திருந்தது
பெயர் தெரியாத ஜன்னல் பறவையின்
தகவலுக்காக வேண்டி
அவனது தவம்
தொடர்ந்து கொண்டிருக்கும்
காலங்களைக் கடந்து....!
-
அவனி அரவிந்தன்

Saturday, June 5, 2010

கண்ணாடிச் சிதறல்கள் - கவிதை 
 
வீட்டின் முன்பகுதில் நட்டிருந்த மூங்கில்கள்
பூவிட்டிருந்த ஒரு அதிகாலைப் பொழுதில்
கிரணங்கள் தீட்டிய சித்திரம் போல நீ வந்திருந்தாய்
என்னைத் தவிர மற்ற அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்த
உன்னைப் பிரதியெடுக்க பிரயத்தனப்பட்டன...
என் வீட்டின் நிலைக் கண்ணாடிகள் அனைத்தும்
ஆனால் கையலம்பும் குழாய்க்கு மேலே தொங்கும்
பழைய கண்ணாடிக்கு மட்டுமே அன்று யோகம் போல
உனக்கு அந்தக் கண்ணாடியை
நினைவிருக்குமா எனத் தெரியவில்லை
பச்சை நிறத்தில் சட்டம் கட்டியிருக்கும்
ஓரங்களில் லேசாக உப்புப் படிந்திருக்கும்
நேற்று முன்தினம் அந்தக் கண்ணாடி
அதை மாட்டி வைத்திருந்த
ஆணியில் இருந்து கழன்று
கீழே விழுந்து தெறித்தது !
இத்தனை நாட்களாக
உன் முகத்தை
நினைவுகொள்ள முயன்று
தோற்றதால் இருக்கலாம்...
சிதறிக் கிடந்த சில்லுகள் ஒவ்வொன்றையும்
உற்றுப் பார்க்கிறேன் - அவை
உன்னைத் தவிர வேறு எதையெதையோ
பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன...!
-
அன்புடன் அவனி அரவிந்தன்.
வெளியிட்டதற்கு நன்றி காட்சி !

Wednesday, May 5, 2010

பதில்களற்ற மடலாடல் - கவிதை


முந்தைய குளிர் இரவின்
தனிமை ஏற்றிவிட்ட கனத்தை
கரைத்துவிடும் குறிக்கோளுடன்
சாலையில் போவோர் வருவோர்
அனைவரைப் பார்த்தும் சிரிக்கிறான்
முறைப்புகளைப் பொருட்படுத்தாமல்
சலாம் வைக்கிறான்
அவ்வப்போது கொஞ்சம்
பாலிதீன் காகிதங்களையும்
அவன் கடித்துக் கொள்கிறான்...

சுண்ணாம்பும் கரியும் கொண்டு
வரையப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதி
தார் தரையில்
அருள் பாலித்துக் கொண்டிருக்க,
நடந்து செல்லும் பக்தரெல்லாம்
கன்னத்தில் போட்டபடியே
கடந்து போகிறார்கள்
சாலையின் சரிவில் புரளும்
கால்களற்ற ஓவியனின்
வர்ணம் இழந்த கண்களை
நேர்கொண்டு பார்க்கும் போது
சட்டைப்பையில் சிறைப்பட்ட சில்லறைகளைத்
தடவிப் பார்த்துக் கொண்டே
மறைந்து போகிறார்கள்...

மாராப்பை பூமிக்குத்
தாரை வார்த்துவிட்டு
வளைந்து நெளிந்து
பிரம்மாண்டமாய் நிற்கும் அழகியின்
பட்டுத் துணி மூடிய
பாகங்கள் குறித்த கற்பனையில்
பல விதமான கண்கள்
குத்திக் கிடக்கின்றன
விழிகளை விட்டுச் சென்றவர்கள்
அவற்றை மீண்டும் எடுத்துக் கொள்ள
மறந்து போகிறார்கள்...

மரணத்துடன்
மடலாடிக் கொண்டிருக்கும்
மூதாட்டியின் சுருங்கிய கண்வழியே
விரியும் இந்த
சாளரத்து உலகம்,
எந்தப் பார்வைகளைப் பற்றிய
பிரக்ஞையும் இன்றி
தன் போக்குக்கு
சுழித்து ஓடிக் கொண்டிருக்கிறது...

செவிலிப் பெண்ணொருத்தியின்
"பாட்டி உங்களுக்கு
மேல் வார்டுக்கு மாத்திருக்கு
போலாமா ?", என்ற குரலுக்கு,
மூச்சை ஆழமாக உள்ளிழுத்தபடி
சாளரத்துக்கு வெளியில்
வேடிக்கை பார்த்துக் கொண்டே
"ஆகட்டும்", என்று சொல்லி
ஆயத்தம் ஆகிறாள்
அப்போது சாளரத்தின் திரைச்சீலை
காற்றில் மெலிதாகப்
பிரண்டு கொண்டிருந்தது....!
-
அன்புடன் அவனி அரவிந்தன்.

வெளியிட்டதற்கு நன்றி உயிர்மை !

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2553

Saturday, April 10, 2010

குளிர்ப்படுத்தப்பட்ட குளம்பி


குளிர்ப்படுத்தப்பட்ட
குளம்பி அருந்தும் விடுதியின்
மைய மேசையருகில்
கால் மேல் கால்
போட்டுக் கொண்டு
'ப்ரதர்' என்று சொல்லி
என்னிடம்
பேசிக் கொண்டிருந்த பெண்
அவள் டி- சர்ட்டின்
முன்புறம் எழுதிய
வாசகத்தை மட்டுமே
வெகு நேரமாகப் 
படித்துக் கொண்டிருந்ததாக,
நான் விடை பெற்றபின்
என்னைப் பற்றி
அவள் தோழியிடம்
சொல்லக் கூடும்...!

-
அன்புடன்
அவனி அரவிந்தன்.

வெளியிட்ட கீற்றுக்கு நன்றி
 http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3175:2010-02-06-06-43-43&catid=2:poems&Itemid=88

Thursday, March 25, 2010

நீரில் வளரும் வளையங்கள் - கவிதை


யார் நீரில்
அதிக வட்டங்கள்
ஏற்படுத்துவதென்ற
நமக்கான போட்டி
குளத்துப் படிக்கட்டுகளில்
தாவியிறங்கிக் கொண்டிருந்தது

கூழாங்கற்களுக்கிடையில்
கவிதை வரிகளைத்
தேடியெடுத்து
விட்டெறிந்ததெல்லாம்
என்னுடைய வளையங்கள்...

நீ கண்ணசைத்த
கண நேரத்தில்
யட்சனைப் போல
மழையொன்று வந்து
ஆயிரமாயிரம் வளையங்கள்
போட்டுச் சென்றது...

உன் விழிவழிப்பார்வையினால்
திணைகளும் துறைகளும்
திசை மாறிப் போகுமென்ற
பிரபஞ்சத்தின் சூட்சுமத்தை
நீரில் வளரும் வளையங்களினூடே
அந்தப் பாசி படர்ந்த
படிக்கட்டுகளும் படித்துக் கொண்டன...

-
அன்புடன்
அவனி அரவிந்தன்.

வெளியிட்ட யூத்புல் விகடனுக்கு நன்றி !
http://youthful.vikatan.com/youth/Nyouth/avaniaravindan08122009.asp

Thursday, February 18, 2010

நிழலோவியம் - கவிதை

 

மை தொட்ட ஈரங்கள்
இலையின் நுனிப் பனித்துளிகள்...

இதழ் முத்தத்தின் சத்தங்கள்,
மனத்தோடு பதிந்த
மென்ரகசிய ஒப்பங்கள்...

மகரந்தம் செழித்த
தோட்டத்திலிருந்து
மலர்களை விடுத்து
இலைகளை மட்டும்
பறித்துச் செல்கிறேன்...

கிளைபிரிந்த இலைகளை
உயிரின் சாரம்
தெளித்துப் பராமரிக்கிறேன்...

அலையாக
ஆயிரம் முறை வந்து
வேர் வருடாமல் போனாலும்
மறுபிறவியில்
மழையாகப் பிறந்து வந்து
உச்சந்தலை நனைத்து
முக்தியடைகிறேன்...

உன் விழிப்பறவையிட்ட
எச்சங்களே
என் மீதான வெளிச்சங்கள்...
அது விட்டு வைத்த
மிச்சங்களில் ஒளிந்திருக்கிறது
உனக்கான எனது ஓவியம்
நிழலாக...!

-
அன்புடன்
அவனி அரவிந்தன்.

வெளியிட்ட சென்னை ஆன்லைனுக்கு நன்றி !
http://www.chennaionline.com/tamil/literature/poem/newsitem.aspx?NEWSID=aafc7717-1b34-49e5-b2a5-7926808fa8a7&CATEGORYNAME=kavi

Friday, January 29, 2010

உயிரின் உருவம் - கவிதை


சீறும் எரிமலையாகவும்
சுழன்றடிக்கும் புயல்மழையாகவும்
பிரயத்தனப்படும் பிரளயத்தில்
சிக்கிய தேகம்,
பிரபஞ்சத்தின் ஒரு உச்ச கணத்தில்
மேலே எழும்பி,
உயிர் அதனிடத்தும் பிரிந்துலவி
பின்பு இரண்டும் மீண்டும் கலந்தது...

சுற்றிய சூழ்கொடி இன்னமும்
அறுக்கப்படாமல் கிடக்கிறது,
என் பிண்டத்திலிருந்து பிரிந்த
ஒரு துண்டம்...
என் சிசுவாகிய நீயும்
ஒரு சிறிய அளவு அண்டம் !

உன்னைத் தொட்டு தூக்குகிறேன்
முதன் முறை,
என் தீண்டலின் உணர்ச்சியில்
உனக்குள் ஒரு அதிர்ச்சி
அதைத் தொடர்ந்து சிறு சிணுங்கல்,
நீ அழுவதற்காக
முயற்சி செய்கிறாய்
நான் அழுது விட்டேன் !

கால்களுக்கிடையில் இன்னும்
மரண வலி !
எனையாள வந்த உனக்கோ
அது பிறப்பின் வழி !

முகங்காண முடியாவிட்டாலும்
எங்கோ பார்த்து சிரிக்கிறாய் !
இதழ்குவியும் சிரிப்பும்
முகங்கோணும் அழுகையும்
மொழியாக நிறைந்த உன்னுலகத்தில்
சத்தங்கள் மட்டுமே
சங்கேதக் குறிப்புகள்...

கூரைக்கு வெளியே
வெடித்துச் சிதறும்
கூச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும்
எதிராக ஒலிக்கப் போகும்
உன் உரிமைக் குரலுக்காக
ஒரு இனமே காத்திருக்கிறது
நீ என் உயிரின் உருவம்
ஈனநிலைமாற்ற வந்த
விதியின் வடிவம்...!

அவனி அரவிந்தன்

வெளியிட்டதற்கு நன்றி  கீற்று  !
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1075:2009-11-02-00-21-07&catid=2:poems&Itemid=88

Friday, January 22, 2010

ஆலமரமும் அவரைக்கொடியும் - 'செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்' வழங்கும் பரிசுப் போட்டிக்காக


            அவள் தனது கைப்பையில் மடக்குக் கண்ணாடி இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டாள். எட்டு மணி வண்டியில் சாளரத்துக் குளிர்க் காற்றை ஆழமாக சுவாசித்தவாறு பயணப்பட்டாள். எழுந்ததில் இருந்து ஓடியாடி, கிடந்த வேலைகளை எல்லாம் அரையும் குறையுமாய் முடித்துவிட்டு எட்டு மணி வண்டியை ஒருவழியாகப் பிடித்து விட்டாள். குறிப்பாக அந்த வண்டியில அவளுக்கு கண்மூடித்தனமான ஈடுபாடு. எமனே வந்து அழைத்தாலும் எட்டு மணி வண்டியில் தான் வருவேன் என்று பாசக்கயிற்றைப் பிடித்தபடி முரண்டு பிடிப்பாள். கொஞ்ச காலமாகத்தான் அவளுக்கு இந்த ஆவலாதி. சரியாகச் சொன்னால் மூன்று மாதத்திற்கு முன்னொரு நாள் அரசம்பட்டி விலக்கை அடுத்த ஏரிக்கரையோர ஆலமர நிழல் நிறுத்தத்தில் ஏறிய அவனைப் பார்த்ததில் இருந்து, அவளுக்கு உள்ளுக்குள் சிறு குறுகுறுப்பு, உள்ளங்காலில் வண்டு ஊறுவதைப் போல. அவனப் பற்றி நினைத்தால் சங்கடங்கள் மறைந்து சந்தோசம் முகிழ்வதாக இருந்தது. சில சமயம் வேறு விசயங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலும் அவசரத்தந்தியாக மணி ஒன்று அடித்து 'என்ன அவனைப் பற்றி நினைக்கவில்லையா ?' என்று கேட்கிறது. சரியா தவறா என்று தராசு நிறுத்திப் பார்க்கத் தெரியவில்லை. ஆனால் அவளுக்கு அது பிடித்திருந்தது. வீட்டில் மட்டும் தெரிந்தால் அழிவுகள் அத்தனையும் அவளைச் சுற்றி அரக்கத்தனத்துடன் அரங்கேற்றப்படும்.  
 
      ளம்பச்சை நிறத்தில் அரும்பு விட்டிருந்த அவரைக் கொடியொன்று பந்தலில் படராமல் அதன் போக்குக்குக் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதையொட்டி வளர்ந்திருந்த ஆலமரம் அந்த அவரைக் கொடியைச் சுற்றிக் கொள்ள ஆளாய்ப் பறந்தது. மண்ணோடு கலந்திருந்த தன் வேரைப் பிடுங்கிப் பிரிய வேண்டி கிளைகளை வேகமாக அசைத்துப் பார்த்தது. மார்கழி மாத வாடைக் காற்று இதையெல்லாம், உரசியபடியே ரகசியமாக நோட்டம் விட்டுச் செல்கிறது.

  
    இரவு முழுக்க நிலவில் குளித்த தெருக்களை, அதிகாலைச் சூரியன் மஞ்சள் பூசி அழகுபடுத்திக் கொண்டிருந்தது. அவள் தனது கைப்பையில் மடக்குக் கண்ணாடி இருக்கிறதா இன்று சரிபார்த்துக் கொண்டாள். வாடாமல்லி வண்ணத்தில் சுங்குடிச் சேலையும், நாரையின் இறகு நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். கோட்டுச் சித்திரம் போலக் கச்சிதமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.

    சாளரத்தின் வழியே தெரியும் காட்சிகள் அவளுக்கு தொலைக்காட்சியைப் போல தோன்றியது. அரிதாரம் பூசிய வயல்களையும், வானத்தையும் மேகத்தையும் அதைத் தொடும் மலைமுகடுகளையும் பிரதியெடுத்துச் சிரிக்கும் நீர்நிலைகளையும் அந்த சாளரத்தின் வழியாக ரசித்துக் கொண்டே வந்தாள். தலையை லேசாக வலித்தது. காட்சிகளும் சற்று மங்கியும் தெளிந்தும் தெரிந்தன. காலையில் வெறும் வயிற்றில் மாத்திரைகள் சாப்பிட்டிருக்கக் கூடாது தான். அரசம்பட்டி நிறுத்தத்தை அவளது மனம் எதிர்நோக்கியிருந்தது. அவன் நினைவே அவள் உடல், மனம் முழுதும் வியாபித்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. ஏன் ? எதற்கு இப்படி ? இருபத்தியோரு வருட வாழ்க்கையை கணம் கணமாக அசைபோட்டுக் கொண்டே வந்தாள். அலசிப் பார்த்தால் இது வரை அவளின் ஆசைப்படி எதுவும் செய்ததில்லை; செய்ய விடப்பட்டதும் இல்லை. அவளுக்கு பிடித்தமானதை மற்றவர்களே நிர்ணயித்திருக்கிறார்கள். காற்றின் வீச்சுபலத்தின் பக்கமெல்லாம் செல்லும் பாய்மரப் படகாகவே இத்தனை நாள் வாழ்ந்திருக்கிறாள். அவன் நினைப்பு இவளுக்கு கரையை காட்டுவதாக தோன்றியது. தற்சமயம் வேலைக்குச் செல்வதைத் தான் பெரும் போராட்டத்துக்குப் பிறகு செய்திருக்கிறாள். முன்னர் அவள் வேலைகளை மிகவும் சிரத்தையாகவும் பொறுப்பாகவும் முடிப்பவளாக இருந்திருக்கிறாள். இப்பொழுதெல்லாம் அசமந்தமாக இருப்பதே பிடித்திருக்கிறது. மனது மதமதப்பாகவே இருக்கிறது எல்லா நேரமும். பயணத்தின் ஒரு திருப்பத்தில் சரிந்த கைப்பையை அள்ளியெடுத்து மடக்குக் கண்ணாடி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள்.

    ஒரு தேநீர் விடுதியை ஒட்டி வண்டி நின்றது. அந்த விடுதிக்கு வீடும் கடையும் சேர்ந்தாற்போல ஒரு அமைப்பு. நூறு வருடம் வாழ்ந்த வீடாகத் தோன்றியது. விசாலமான திண்ணையைக் கடையாக்கியிருந்தார்கள். கடையை ஒட்டிய வாசலை சிறுபெண்ணொருத்தி பெருக்கிக் கொண்டிருந்தாள். மேல்த்துணி எதுவும் போடாமல் அரையில் ஊதாவண்ணத்தில் பூப்போட்ட பாவாடை மட்டும் அணிந்திருந்தாள். அதில் அழகான விசயமே அவள் பெருக்கும் பாணி தான். ஆறு வயதுதான் இருக்கும். குப்பை பெருக்குவதைக் கூட அவ்வளவு நேர்த்தியாக ஒரு ஓவியம் வரைவதைப் போல அழகியல் நுட்பத்துடன் செய்து கொண்டிருந்தாள். வண்டி நகர்ந்துவிட்டது. அந்தச் சிறுபெண்ணுடன் அவள் தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டாள். அந்தச் சிறுபெண் பதினைந்து வருடம் கழித்தும் இதே போல நேர்த்தியுடனும் ஆர்வத்துடனும் வேலைகளை செய்வாளா ? இல்லை தன்னைப் போலவே அவளும் மாறிவிடுவாளா ? கேள்விகள் வழியில் கடந்துசெல்லும் புளிய மரக் கொப்புகளில் தொங்கிக் கொண்டிருந்ததன. அந்தக் கேள்விகள் காற்றில் உதிர்ந்து அதன் கீழ் செல்வோரின் உச்சி வழியாக உள்ளங்களில் இறங்கி குழப்பங்கள் உண்டு பண்ணுவதாக தனக்குத் தானே கற்பித்துக் கொண்டாள். மடக்குக் கண்ணாடியை எடுத்து ஒருமுறை முகத்தைப் பார்த்துக் கொண்டாள். கண்களின் இருமருங்கிலும் ரத்தச்சிவப்பில் வேர்விட்டோடியிருந்தது. அது ஒரு சிகப்பு ரோஜாச்செடியின் வேர். அதில் பூக்கும் ரோஜா மலரானது தூக்கத்தை உறிஞ்சிக் கொண்டு மாறாக இனிய மாயக் கனவுகளைக் கொண்டு தரும் வல்லமை வாய்ந்தது.
                                                 *******
    அவள் ஆவலாதியுடன் எதிர்பார்த்த அரசம்பட்டிக்காரன் வந்தே விட்டான். வசீகரப் புன்னகையை வீசிக்கொண்டே அவளைப் பார்க்கிறான். அய்யனார் குதிரையில் இருந்து இறங்கி, அந்த எட்டு மணி வண்டியில் அவன் உருவில் வருவதாக அவள் மனதுக்குள் புனைந்து கொண்டாள். இவளுக்கு பிந்திய இடத்தில் சாளரத்தின் ஓரமே அவனும் அமர்கிறான். அவளுக்கு அவ்வளவு நேரம் இருந்த மதமதப்பும், அமைதியும் சிதறியோடிவிட்டன. பயணத்தின் பாதையில் இருக்கும் மேடுபள்ளங்களில் விரைவாக இறங்கியும் ஏறியும் அலைக்கழிந்தது அவள் மனது. அவள் தனது சிகையைச் சரிசெய்து கொண்டாள். பின்னிலிருந்து அவன் பார்வைக்கு பாவை போலத் தோன்ற வேண்டுமென எண்ணிக் கொண்டாள். ஆனால் அவள் திரும்பி அவன் முகத்தைப் பார்க்கவில்லை. ஏதோ தடுத்தது. இப்படியெல்லாம் நடந்துகொள்வது தவறு என்று ஒரு குரல் அதி ஆழத்திலிருந்து மிகவும் சன்னமாக சக்தியற்று ஒலித்துக் கொண்டிருந்தது. அவள் குனிந்து தன் கைப்பையைத் திறந்து மடக்குக் கண்ணாடியை எடுக்கப் போனாள். அவன் அவளது வலது காது மடலுக்குப் பின்பகுதியிடுக்கில் லேசாக ஊதினான். குளிர்ந்த அந்தக் காற்று அவளுடைய ரோமக்கால்களை சிலிர்ப்படையச் செய்தது. தன்னிலை மறந்தவளாக அவள் அவனுடன் அந்த பச்சை வெளிகளில் இறங்கி உலவ ஆரம்பித்தாள். ஏரிக்கரை ஆலமர விழுதுகளில் தூளிகட்டி அவள் ஆட, அவன் ஆட்டிவிட்டுக் கொண்டிருந்தான். மணம் கமழும் அதே மயக்கும் புன்னைகையை உதிர்த்தவாறே அவன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். அவளுக்கு அது போதை தருவதாக இருந்தது.

    தூளியில் ஆடியபடியே அவனுடைய சிகையமைப்பைப் பார்த்தாள். அந்த ஆலமரத்தின் உச்சிக் கிளையில் இருக்கும் கரிச்சான் குருவிக் கூடு போலவே அவன் தலைமுடி அமைப்பு தெரிந்தது.

    "என்னத்த மேல இருந்து அப்பிடி பாக்குற ?", அவன் குறுகுறுப்புடன் கேட்டான்.

    கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாள் பின், "ஒங்க தலயப்பார்த்தா குருவிக்கூடாட்டமே இருக்கே, என்ன கரிச்சாங்குருவிக்கு வாடகைக்கு விட்டீகளாக்கும் ? மாசம் பொறந்தா குருவிக எம்புட்டு கொடக்கூலி தருதுக ? ", என்று குறும்பு தளும்பிவழியும் வகையில் பதில் கேள்வி கேட்டாள்.

    "அதுவா ? ஆமாம்புள்ள எனக்கென்ன தோப்பா ? தொரவா ? இல்ல ஆயிரம் ஏக்கரு நெல்லுக்காடா ? எதுவுந்தான் இல்லையே. அதான் தலமயிரு சும்மாத்தான இருக்குன்னு கொடக்கூலிக்கு விட்டுட்டேன். குருவிக ரெண்டும் மாசம் பொறந்தவடம் சரியா தொண்ணுத்தெட்டு லவாப் பழம் குடுக்குதுக. அதுல ஒண்ணு ஒண்ணையும் பாதிக் கடிச்சி ஒனக்குத் தாரேன். பதிலுக்கு எனக்கு நீ என்ன தருவ ?", அவளுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் கேட்டான்.

    "பதிலுக்கு என்ன பானை பானையா பொன்னும் நகையும் குடுப்பாகளாக்கும். ஒண்ணுவிடாம எல்லா பழத்தையும் தின்னுட்டு கொட்டைய வேணா தாரேன்", கேட்ட வினாடியில் பதில் சொன்னாள். சொல்லிவிட்டு இளக்காரமாகப் பார்த்தாள். அவன் அவளை அடிக்க குச்சி தேடி ஓட அவள் தூளியில் இருந்து குதித்து தோட்டத்துப் பக்கம் ஓடினாள். நொச்சிக் கம்பைத் தூக்கிப் பிடித்தபடி அவளைத் துரத்திக் கொண்டு அவனும் ஓடினான். ஓடும் வழியில் துக்கம், சோகம், அடக்குமுறை எல்லாவற்றையும் அவள் கால்களில் மிதித்துக் கொண்டே சென்றாள். இருவரும் அவரைக் கொடிப் பந்தலின் கீழ் இளைப்பாறினார்கள். முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

    சிறிது நேரங்கழித்து உடையில் ஒட்டிய காய்ந்த சிறுபுற்களையும் மண்தூசியையும் தட்டியவாறு எழுந்து வரப்போரம் காலாற நடந்தனர். அவனது வலதுகை விரல்களும் அவளது இடதுகை விரல்களும் மட்டுமே லேசாக உரசின. ஒவ்வொரு உரசலிலும் நுனிநாக்கின் புளிப்பாக அவள் சிலிர்த்துக் கொண்டே நடந்தாள். அவர்கள் ஒரு விவசாயக் கிணற்றை ஒட்டி நின்றனர். அவன் குதித்துக் குளிக்கப் போவதாகச் சொன்னான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அந்தக் கிணற்றையே வெறித்துப் பார்த்தபடி நின்றாள். சதுரமான பெரிய கேணியது. ஏற்றம் கட்டி இறைத்த சுவடு இன்னும் அழியாமல் இருந்தது. தற்பொழுது மின்சாரத்தைப் பயன்படுத்துவதையும் அறிய முடிந்தது. பெரிய இரும்புக் குழாய் ஒன்று பச்சைத் தண்ணீருக்கு அடியில் பயமில்லாமல் இறங்கி நின்றது. கிணற்றின் ஓரங்களில் தென்னை மட்டையும் குப்பைக் காகிதங்களும்  நீரில் மேலும் கீழும் ஆடியபடி மிதந்து கொண்டிருந்தன. அவளுக்கு நீச்சல் தெரியுமா என்று அவன் கேட்டான். தெரியாது என்று சொல்ல அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அதனால் தெரியும் என்று சொல்லிவிட்டாள். அவளுடைய உச்சிப் பொட்டு கலைந்திருக்கிறது என்று அவன் சொன்னான். ஓடிவந்ததில் வேர்வைக்குக் கலைந்திருக்கும் என்று சொன்னாள். திடீரென்று உச்சந்தலையில் ஊசி இறங்குவதைப் போல உணர்ந்த அவள், தனது கைப்பையைத் திறந்து மடக்குக் கண்ணாடியைத் தேடினாள். அந்தச் சமயம் பார்த்து அவன் அவளைக் கிணற்றில் தள்ளிவிட்டான். "ஐயோ மாமா....", என்று அலறியபடி அவள் அந்தப் பச்சைத் திரவத்தில் கற்சிலை போல விழுந்து முங்கினாள். கிணறு அவளை மிகுந்த மனவிருப்பத்துடன் விழுங்கி விரைவாக உள்ளே இழுத்துக் கொண்டது. மேலே எகத்தாளமான சிரிப்புச் சத்தம் மங்கலாகக் ஒலித்தது.

    அவளுடைய மாமா அவளை அதீத கோபத்துடன் முறைத்துக் கொண்டிருந்தான். வீட்டிற்குள் வராதே என்று கெட்ட வார்த்தை சொல்லி திட்டினான். அவளுடைய அம்மா அவளை முறத்தால் அடித்து ஓய்ந்தாள். அவள் அப்பா உரலைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தார் அவள் தலையில் போடுவதற்கு. அதற்கு மேல் அவள் மயங்கிவிட்டாள்.
                                                                             *******
    ஆலமரத்தடியில் பெரிய கூட்டம் கூடிவிட்டது. அவரைக்கொடிப் பந்தல் மொத்தமாக விழுந்து கிடந்தது. எட்டு மணி வண்டி ஆலமரத்தின் நடுத்தண்டில் மோதி ஏரிக்கரையில் ஒருக்களித்துச்  சாய்ந்திருந்தது. அரிசிக்கடை சண்முகத்துக்குத் தான் தலையில் செமத்தியான அடி. மாட்டுவண்டியில் எடுத்துப் போட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டிருந்தார்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர். ஆண்டவன் புண்ணியத்தில் மற்றவர் யாருக்கும் பெரிய அடி இல்லை. அவள் மட்டும் படிவழியாக ஏரியில் விழுந்திருக்கிறாள். ஊர்க்காரர்கள் அவளை வெளியே எடுத்து தண்ணீரை வெளியே விட்டு முழிக்க வைத்தார்கள். அவளுக்கு நினைவு வந்தது.

    "இந்த ஒத்தப் பனமரத்துக்கு மஞ்ச குங்குமம் வச்சு கும்புடணும்னு தலையாரி சொல்லிக்கிட்டே இருக்காப்ல யாரும் கேக்க மாட்றீயளேயா. இப்பப் பாரு முனியடிச்சிருச்சு. இத்தாம்பெரிய வண்டியையே கவுத்திருச்சேப்பா. ஆளுங்கக்கிட்ட வெளாடலாம், ஆண்டவன் கிட்ட வெளாடலாமா. தை பொறக்குறதுக்குள்ள ஏற்பாடு பண்ணுங்கப்பா அம்புட்டுதேன் நாஞ்சொல்லுவேன்", ஊர்ப்பெரியவர் ஒருவர் ஏதோ கண்டுபிடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

    அவளுக்கு யார் பேசுவதும் கேட்கவில்லை. அவளையறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

    "இந்தப் புள்ளையப் பாருங்கய்யா. எப்புடி அழுவுதுன்னு. ஏத்தா மொத அழுகைய நிப்பாட்டு. ஏதோ மாரியாத்தா புண்ணியத்துல எல்லாம் உசுரு பொழச்சு நிக்கோம். இந்தாக்குல நீ மால மாலையா கண்ணுல தண்ணிவிட்டுட்டு நிக்கிற. ஒங்கண்ணீருல கண்மாயே ரொம்பி வழிஞ்சிரும் போலயே", அறிமுகமில்லாத ஒருவர் ஆதரவாக அவளைத் தேற்றிக் கொண்டிருந்தார்.

    அவளுக்கு நிதர்சனமும் விளங்கலாச்சு. மூன்று மாதத்திற்கு முன் வந்த அரசம்பட்டிக்காரன் அதற்குப் பின் அந்த வண்டியில் இதுவரை வராததும் இன்று கூட மாயவுலகத்தில் தான் அவனுடன் சஞ்சாரித்ததும் அவளுக்கு உரைத்தது. மாமன் ஏசியதும், அப்பனும் ஆத்தாளும் அடிக்க வந்ததும் எல்லாமும் மயக்கம் தானா ? எதற்காக இப்படிக் கனவுகள் ? கேள்விகளைனைத்தும் புளியமரங்களில் கொக்கி போட்டு தொங்கிக் கொண்டிருந்தன, அதன் கீழ் செல்பவர் மீது விழுவதற்கு ஏதுவாக. அவள் நனைந்திருந்த தனது  கைப்பையை வேகமாகத் திறந்து மடக்குக் கண்ணாடியைத் தேடினாள். கண்ணாடி மட்டும் உடைந்திருந்தது. அது அவளுடைய கணவனான மாமன் திருமணத்திற்குப் பிந்திய முதல்த் தைப்பொங்கலுக்குப் பரிசாக வாங்கிக் கொடுத்தது. அவள் இன்னமும் அழுது கொண்டே நின்றிருந்தாள். அந்தக் கண்ணீரில் பெயர் தெரியாத சில சாயங்கள் கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து ஓடிக் கொண்டிருந்தன.

பி.கு. இந்தக் கதை 'செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்' வழங்கும் பரிசுப் போட்டிக்காக எழுதப்பட்டது.