Sunday, June 14, 2009

நீரும் நெருப்பும்

"முல்லைத் தெருவுல தண்ணியடிச்சிட்டு பத்து நிமிசத்துல வந்துடறேன் கொஞ்சம் புள்ளைய பாத்துக்கோங்க"

"என்ன காலங்காத்தாலயேவா ? ம்ம் நாங்க அடிச்சா மட்டும் தப்பு. உங்களுக்கு ஒரு ஞாயம் ஊருக்கு ஒரு ஞாயம். ம்ம்... சரி போய்ட்டுவா பாத்துக்கிட்டு மட்டும் தான் இருப்பேன். தூங்கற வரை பரவால்ல, எந்திரிச்சு அழுவ ஆரம்பிச்சதுன்னா நம்மளால முடியாதும்மா"

"சந்தடி சாக்குல அப்புடியே பெருசா ஞாயம் பேசிடுவீங்களே. தண்ணிக்கும் சீரெட்டுக்கும் மட்டும் எம்புட்டு செலவாகுது தெரியுமா ? ஆனா பச்சை புள்ளைக்கு மாத்து துணி எடுக்க கூட கணக்கு பாப்பீங்க"

"சரி சரி ரொம்ப பேசாத, போ போ போய் தண்ணியெடுத்துட்டு வா.."

இப்பிடிதான் பொழுது விடிஞ்சதுல இருந்து அடையற வரை எதுக்காச்சும் பொலம்பிக்கெடக்குறதே பொழப்பாப் போச்சு. இன்னிக்கெல்லாம் சொல்லி மாளாது.

"இந்தா பெரியவனே, அம்மா தண்ணி பிடிச்சு வச்சிருக்கேன். எல்லா கொடத்தையும் தட்டு வச்சி மூடி வய்யி", பெரியவன் பேரு முத்து. முத்துச்சாமின்னு அவங்க தாத்தா பேரு. அவரு சாடை தான். ஒண்ணாப்பு தான் படிக்கிறான்.

"அம்மா பாப்பா அழுவுது. நான் எடுத்து ரொட்டி ஊட்டவா ?", பாப்பா பொறந்து மூணு மாசந்தான் ஆவுது. பொழுதன்னிக்கும் அழுவுறதால என்னை மாதிரின்னு அவரு மட்டும் சொல்லுவாரு. பேரு மாரீஸ்வரி.

"வேணாண்டா, ஒனக்கு தூக்கத் தெரியாது. பாப்பாக்கு இன்னும் கழுத்து கூட நிக்கல. இன்னும் கொஞ்ச நாள் ஆவட்டும் அப்புறம் நீதான மாரிக்கு எல்லா வெளாட்டும் சொல்லித் தர போற"

"அடியே சீராட்டுனது போதும்டீ... சோத்தப் போடு. சோலிக்கு நேரமாச்சுல", பூகம்பமே வந்தாலும் இவருக்கு சாப்பாடு வச்சிட்டு தான் நான் இந்த மண்ணோட மடிஞ்சு போவணும். இல்லாட்டி அப்பாருல ஆரம்பிச்ச்சு அண்ணன், தம்பி, ஒண்ணு விட்ட சித்தப்பான்னு எல்லாரையும் வீதிக்கு இழுத்து வம்பு பண்ணிட்டு தான் விடுவாரு.

"அம்மா டிவில அந்த அக்கா எல்லாம் ஏன் இம்புட்டு கம்மியா சொக்கா போட்டுருக்காங்க ?"

"வாயிலயே போட போறேன் பாரு"

"இந்தாங்க பொழுதன்னிக்கும் இந்த கருமத்த தான் பார்க்கணுமா ? வளர்ற புள்ளை கெட்டு போயிட போறான். இப்பல்லாம் சும்மாவே எல்லாம் பிஞ்சுலயே பழுத்துருதுங்க. இதுல இது வேறயா ?"

"சரிதான் சும்மா பொலம்பாதடீ. இந்த தொரை வாய் பேசுறதுக்கு நாந்தான் காரணமா ? நீ எந்த எழவு சீரியல பாத்து தொலைக்கிறியோ ?
ஆனந்தி அக்கா கிட்ட சண்டை போட்டதுக்காக விக்ரம் மாமாவ கொன்னுட்டாங்களே நீயும் அது போல சண்டை போட்டா அப்பாவ கொன்னுடுவியான்னு கேட்டான்ல. புள்ளைங்கள வீட்டுல இருக்கிறவ தான் சொல்லி வளக்கனும். சும்மா இப்பவும் ராசா தங்கம்னு கொஞ்சிட்டு இருந்தா இப்புடி கேக்காம வேற எப்புடி கேப்பான் ?".

நான் அவஸ்தையோட மாலையிட்ட இந்த மவராசனுக்கு, எத எடுத்தாலும் என்னைய சாடலைன்னா தூக்கம் வராது. அவரு எது செஞ்சாலும் அதுக்கு ஒரு காரணம், ஒரு விளக்கம். நான் செஞ்சா மட்டும் அத்தாகுத்தம் ஆகிப்போகும். ஒரு சொல்லு சொல்ல நீதியிருக்கா இந்த வீட்டுல. என்னத்த சொல்ல நம்ம பொறப்பு அப்பிடி.

"அம்மா, கலர் கோழி விக்குதுமா தெருவுல வாங்குவோமா ?"

"உங்களுக்கு பண்டுவம் பாக்கவே இங்கன வழியக் காணோம். கோழி ஒண்ணுதான் கொறச்சல்"

"போம்மா, எத்தன கலரு தெரியுமா ? நாலு மட்டும் வாங்குவோம். பால்ரோஸ் கலரு பாப்பா, சேப்பு கலரு நானு, மஞ்சக் கலரு நீ, கருப்புக் கலரு அப்பா. அதுக்கு மிச்ச சோறு இல்ல பழைய கஞ்சி புழிஞ்சு வச்சா கூட போதுமாம். முட்டையெல்லாம் போடும்ல, அத வித்து நாம் பாப்பாக்கு புது சொக்கா வாங்கலாம்மா"

இப்பிடியெல்லாம் இவன் பேசும் போது. இந்த வீட்டப்புடிச்ச தரித்திரமெல்லாம் வெலகி வெளிச்சம் வாராப்புல இருக்கு. இப்பவே வளர்ந்து நிக்க மாட்டானான்னு தோணுது. இவன் தலயெடுத்தா தான் சுபிட்சமாகும். ஆனா இப்போ வெளிய விக்கிற கோழி முட்டை போடாதே. அரிசி பருப்பெல்லாம் நெறஞ்ச பாக்கியமா இருக்கு. எங்கிட்டு கலர் கோழி வாங்குறது. ஒண்ணு மாத்தி ஒண்ணு சொல்லி எப்பவும் போல சமாளிச்சிட்டேன். ரொம்ப நேரமா மாரி அழுதுட்டு இருக்கா. கேப்பைய கரைச்சு ஊட்டணும்.

வெளில வெள்ளி முளைச்சிடுச்சு. இந்த முத்து எங்கன போய்த் தொலைஞ்சான். தாத்தா கடைல தீப்பெட்டி வாங்கியாரச் சொல்லி எம்புட்டு நேரமாச்சு. சன்னல் வழியா எட்டிப் பார்த்தேன். அதென்ன வேப்ப மரத்துக்கு பின்னாடி நெழல் தெரியுது. கங்கு எரியிறாப்புல வேற இருக்கே. யாரா இருக்கும். ரெண்டரை அடி ஒசரம் தான் உருவம்.

"டேய் முத்து, அங்கன என்னா பண்ற. தீப்பெட்டி கொளுத்தி போடுறியா ?"

"இல்லம்மா வேப்பம் பழம் இருக்கான்னு குச்சி கொளுத்தி பார்த்தேன்"

ரொம்ப பழக்கமான, கொஞ்சமும் பிடிக்காத, எப்பவும் எரிச்சல் ஏற்படுத்துற நெடி அடிக்குதே. சந்தேகமா இருக்கு.

"முத்து இங்க வா", கடவுளே அப்பிடி இருக்கக் கூடாது.

முத்து மொகத்துல மூணு விரலயும் நல்லா பதிச்சிட்டேன்.

"ஏன்டா, மொளச்சு மூணு இலை விடல அதுக்குள்ளார அப்பன் புத்தி தப்பாம வந்திருச்சேடா ஒனக்கு.அந்தாளுக்கு தான் வளர்ப்பு சரியில்லாம இப்பிடி ஆயிட்டாருன்னா ஒனக்கென்ன கேடு ?"

"....."

"முழிக்கிறத பாரு. ஓடாதடா இங்க நில்லு, நில்லுங்கறேன்ல. என்னையெல்லாம் எங்க ஆத்தா பஞ்சாரத்துல அடைச்சி போட்டு கதிரறுக்க போயிடும். காட்டு மரமாட்டம் தானா வளர்ந்தேன். உங்கள கோழி அடைகாத்த மாதிரி பொத்தி பொத்தி வளக்கும் போதே இப்பி துண்டு பீடி பொறுக்கி.....ச்சே"

விசிறிக்கட்டை சரல் சரலா பிஞ்சிது. நல்லா வரி வரியா இழுத்துட்டேன். ஆனாலும் மனசு மட்டுப்படலை. அந்தாளு வரட்டும் இன்னிக்கு.

"என்னாடி ரொம்ப தான் பேசிட்டே போற. என்னாது கேன்சர் வருமா எனக்கு. அதுக்கு தான என்ன கட்டிக்கிட்ட. வரட்டும்டி, வரட்டும். ஆனா ஒண்ணுமட்டும் சொல்றேன். எனக்கு என்னா சீக்கு வந்தாலும், சிறுக்கி நீ பாக்க மட்டும் நான் படுத்துக் கெடக்கமாட்டேன்டீ. அப்பிடி பொழச்சுக்கெடக்கிறதுக்கு அரளிய அரைச்சுக் குடிச்சிடுவேன்"

சொர்க்கமோ நரகமோ மனுசன் சொல்லுல தான் இருக்கு. அவரோட ஒவ்வொரு சொல்லும் என்னை தீயில வச்சு வாட்டுச்சு. அவரு பங்குக்கு மீதியிருந்த விசிறிக்கட்டைய பிச்சிட்டு வெளிய போயிட்டாரு. நான் நல்லதுக்கு சொன்னாலும் பொல்லாப்பா தான் போகுது. முத்து அடிக்கு பயந்து அக்கா வீட்டுக்கு போய்ட்டான். போய் கூட்டியாரணும்.

"என்னடி ஆச்சு, உன் புருசன் இங்கன வந்து சலம்பிட்டு போறான். பேச்சு சொகமில்ல. நிம்மதியில்ல. மருந்தக் குடிப்பேன். அது இதுன்னு சொல்லிட்டு போறான்"

"அத வேற ஏன் கேக்குற விடு. முத்து எங்க அவன கூப்புடு"

உள்ளங்கைல அடங்குற பிஞ்சு மொகம் அழுது அழுது வீங்கிப்போய் இருந்தது. முகத்துல இன்னும் கை தெரிஞ்சது. தவமிருந்து பெத்த என் கொல தெய்வத்த நானே போட்டு செதச்சிட்டேன்.

"என்னடா ராசா வலிக்குதா ? இனிமே அம்மா சாவுந்தட்டிக்கும் நீ இப்பிடி செய்யக்கூடாது. நானும் உன்ன அடிக்க மாட்டேன் சரியா ?", பேசும் போதே எனக்கு அழுகை முட்டிக்கிச்சு.

"சாமி சத்தியமா செய்ய மாட்டேம்மா", விக்கி விக்கி பதில் சொன்னான். எப்பவுமே நான் அழுதா அவனும் அழுதுடுவான்.

ரெண்டு தெரு தாண்டியிருப்போம்,"அம்மா, அப்பா பாவம்மா".

சின்னப்புள்ளை கிட்ட என்னத்த சொன்னாருன்னு தெரியலயே.

"அதெல்லாம் அப்பா சும்மா தான் சொல்லிருப்பாரு. நீ ஒண்ணும் நெனைக்காத, ஒழுக்கமா பள்ளிக்கூடம் போ, வெளாடு அம்புட்டுதான்", என்னமாவது சொல்லி சமாளிக்கலாம்னு பாத்தேன்.

"இல்லம்மா, அது பிடிக்கும் போது தொண்டையெல்லாம் எம்புட்டு எரிஞ்சது தெரியுமா ? அப்பா நெதமும் எம்புட்டு பிடிக்கிறாரு. ரொம்ப எரியும்ல. அப்பா பாவம்மா"பி.கு: இந்த சிறுகதை 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

சின்னஞ் சிறுகதை

சங்கர் Weds ஷாலினி.

கல்யாணத்திற்கு வந்தவர்கள் ஒவ்வொருவராக விடை பெற்று சென்றனர்.

மேடையில் ஜோடியாக நிற்க வைத்து பெரியவர்கள் ஆசீர்வதித்து நண்பர்கள் பரிசு கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மங்கல மெட்டி அணிந்தாள்.

மேள தாளம் முழங்க, மந்திரம் ஓதப்பட சுபயோக வேளையில் தாலி கழுத்தில் ஏறியது.

ஷாலினி குமாரின் நினைவோடு, ஐந்து நிமிடம் தாமதமாக படபடப்புடன் பட்டுப் புடவையில் வந்திறங்கினாள்.

"அடக் கடவுளே ! என்ன நடக்குது இங்க ?", குழப்பத்தில் குமார்.

கற்பனைக் கதையை கஷ்டப்பட்டு படிச்சிட்டீங்களா ? பள்ளிக்கூடத்துல படிக்கும் போதெல்லாம் நல்லா தாங்க இருந்தேன். ஒழுக்கமா எல்லா நோட்டு புக்கும் எடுத்துட்டு போவேன். இந்த காலேஜ்ல சேர்ந்ததுக்கு அப்புறம் தான் றெக்கை மொளைச்சிடுச்சு(சில பேரு வாலுன்னு சொல்லுவாங்க கண்டுக்காதீங்க). புக்கு நமக்கு எதுக்கு. கையில பை எடுத்துட்டு போனா கெத்து கொறஞ்சிடும்ல. நோக்கம் போல ஏதாச்சும் ரெண்டு நோட்டு எடுத்துட்டு போறது, எந்த பாடத்துக்கு எந்த நோட்டுனு பாக்குறதில்ல. அப்போ ஆரம்பிச்சது இந்த கெட்ட பழக்கம். என்னடா இவன் கதைங்கற பேர்ல என்னத்தயோ எழுதி வச்சிட்டு பத்தாக்கொறைக்கு என்னமோ உளரிட்டு இருக்கானேன்னு பாக்றீங்களா ? அந்த கெட்ட பழக்கம் என்னவென்றால் ஒரு பாடத்த நோட்டுல முன்னாடி இருந்து எழுதுறது. இன்னொரு பாடத்த நோட்டு கடைசி பக்கத்துல இருந்து பின்னாடி எழுதுறது. அந்த ஞாபகத்துல கதையும் பின்னாடி கடைசி வரில இருந்து எழுதிட்டேன். கோச்சுக்காம கடைசி வரில இருந்து மேல்நோக்கி மறுபடியும் படிங்க.

பி.கு: அதுக்கு அப்புறமும் கதை கருமமா இருக்குன்னு காறித் துப்புறவங்க தயவுசெய்து மானிடரை அசுத்தப்படுத்த வேண்டாம், ரெஸ்ட் ரூமை பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

நாட்டுப்புறப் பாட்டு

நாட்டுப்புற பாட்டுக்குத்தான்
எசப்பாட்டு நான் பாட
அறுத்துவச்ச நெல்லுக்கட்டும்
ஆடியாடி சிரிக்குதடி

எசபாட்டு:
வெட்டுக்கத்தி தூக்கிக்கிட்டு
புல்லறுக்கப் போறவநீ - என்
வெத்துடம்பில் வச்ச கண்ணு
சூடம் சுத்தியும் போகலயே...

எருது ஒண்ணு முன்னே போக
ஏரு ஒண்ணு பின்னே வர
எம்மனசு உன்வீட்டு
வாசவிட்டு கடக்கலையே...

வயக்காட்டு வேலையிலும்
வண்டிமாடு சொல்லுதடி
வாசமான உன்மனசின்
ஆழமான ஆசையத்தான்....

நீ பொறந்த வேளையிலே
அப்பத்தா கிட்ட வந்து
உனக்காக பொறந்தவடா
உசிராக வச்சிக்கன்னா...

நொந்து போன மனசுக்கு - உன்
நெனப்பேதான் கசாயம்
நோகாம உன்னயுந்தான்
நான் வாழவைப்பேனே....

காணாத என்நெஞ்ச
காட்டுக்குள்ள தேடுனனே...
கள்ளச்சிறுக்கி கண்ணுக்குள்ள
மாட்டிக்கிட்டு முழிக்கிறனே...


குத்தவச்ச நாள் மொதலா
குறிச்சேதான் வச்சிருந்தேன்
ஆடிமாசம் கழியட்டுமே
ஆவணில கட்டிக்கலாம்.


பி.கு:
படிச்சுப்புட்டு போறவுக
போகுமுன்ன கீழஉங்க
கருத்துகள தட்டிவிட்டு
போனாலும் தப்பில்ல...

அழகுகள் ஆறு

நம்ம அண்ணாச்சி என்னைய அழகைப் பத்தி எழுத சொல்லிருக்காரு. என்ன அழகுல அத எழுத போறேன்னு தெரியல. நல்ல வேளை கைல எழுத சொல்லல. அப்புறம் என் தலைஎழுத்தோட அழகு ஊருக்கே தெரிஞ்சி போய் சந்தி சிரிச்சிருக்கும். நமக்கு இந்த தலைப்பு குடுத்து எழுத சொல்றது எல்லாம் பள்ளிக்கூடத்துலயே ஆகாது. பத்தாவது படிக்கும் போது கூட க்ரியேட்டிவ் ரைட்டிங்குனு ஒண்ணு வச்சாய்ங்க. அதுக்கு 'ஒரு ஊர்ல பாட்டி பீட்ஸா(லேட்டஸ்ட் வெர்சன்) சுட்டு வித்தாங்க, காக்கா தூக்கிட்டு போச்சு...... அப்புறம் காக்கா மேல கம்ப்ளெய்ன்ட் குடுத்தாங்க'னு தலைய சொரிஞ்சிக்கிட்டே ஒரு மணி நேரம் யோசிச்சு எழுதுனேன்.

அழகுன்னு சொன்னதும் சட்டுனு எனக்கு தோணுனத இங்க எழுத முடியாது. அதுனால செத்த நேரம் யோசிச்சு, கண்டது கழியத எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு நம்ம வாழ்க்கைல உண்மையான அழகு எதுல இருக்குனு ஒரு முடிவுக்கு வாரதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். சொல்லப் போனா அழகுங்கறது பார்க்கிற பார்வைல தான் இருக்கு. சில பேருக்கு அழகா தெரியறது சில பேருக்கு சாதாரணமா தெரியும். உதாரணத்துக்கு சொல்லனும்னா கோவை சரளாவுக்கு கோவில் கட்ற கூட்டமெல்லாம் இங்க இருக்கு. அவய்ங்களுக்கு அவங்க அழகு. குழந்தைகள் உலகம் தான் இருக்கறதுலயே ரொம்ப அழகு. அப்புறம் பொதுவா சொன்னா புதுப்பொண்ணு, புது நெல்லு, புது வீடுன்னு புதுசா இருக்கிறது சிலது அழகு. பழைய சாதம், நேத்து வச்ச மீன் கொழம்பு, பழங்கால கோவில்கள்னு பழசும் சிலது அழகு. இதெல்லாம் விட்டுட்டு எனக்குனு தனியா அழகா தெரியற விஷயங்கள பட்டியல் போடப் போறேன்.

1. தனிமை
'இனிது இனிது ஏகாந்தம் இனிது...' - ஒரு சமயம் யாரு பக்கத்துல வந்தாலும் கடிச்சு வைக்கலாம் போல இருக்கும். ஒரு பிரச்சனையா நமக்கு இருக்கு. அமெரிக்கால எவனாவது அடி வாங்குனா இங்கன நமக்கு வாங்காகி போய்டுது. சீரியல்ல வார மாமியார் மருமகள திட்டுனாலும் இங்க நம்மள தான் தாலியறுக்குறாய்ங்க. இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைல எங்கிட்டாவது ஓடிப் போய்டலாம்னு இருக்கும். அப்போல்லாம் தனியா அமைதியா இருக்கிற எடங்களுக்கு போனா பிரச்சனைக்கு தீர்வு கெடைக்காட்டியும், ஏதோ மனசுனாலும் கொஞ்சம் மட்டுப் படும். எரிமலையா எகிறி குதிக்கிற எண்ணங்கள் எல்லாம் தனிமைல தண்ணியடிச்சிட்டு மல்லாந்திரும். எவ்வளவு தான் நாம பெத்தவங்க கூடவும், சொந்தக்காரய்ங்க கூடவும், கூட்டாளிகள் கூடவும் ஒண்ணுமண்ணா பழகுனாலும் சரி கட்ட கடைசி முடிவு பண்றது நாம தான். என்ன தான் எம் பொண்டாட்டி பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டேன்னு வீர வசனம் பேசுனாலும் அவனவன் தனித்தனியா தான் எதயும் யோசிக்கிறான். இதான் உண்மை. இந்த ஞானம் எல்லாம் அப்பப்போ நமக்கு வாரது தனியா உக்காந்து யோசிக்கும் போதுதான். பல உன்னதமான எண்ணங்கள்லாம் அப்போ தான் எனக்கு தோணும். அந்த நேரம் என்ன பத்தி, மத்தவங்கள பத்தி, ஊரு ஒலகத்த பத்தியெல்லாம் யோசிச்சு யோசிச்சு தன்னை மறந்து இந்த ஒடம்புல இருந்து வெலகி எங்கயோ பறந்து திரிஞ்சு திரும்பி வாரது எம்புட்டு அழகுன்னு நெனைக்கிறீங்க :)
கஞ்சா ஏதும் அடிப்பேனோனு சந்தேகப் படாதீங்க மக்களே ! நான் ரொம்ப நல்லவன்.

2. கனவு
கனவுகள் கலர் கலரா வர்றதுக்காகவே அதிக நேரம் தூங்கறவன் நான். சினிமால கூட கனவுப்பாட்டு வச்சி தான் வெளிநாடு எல்லாம் சுத்தி காட்றாய்ங்க. பொரண்டு பொரண்டு படுத்தாலும் தாம்பரத்த தாண்ட மாட்டேங்குது நம்ம கனவு. வாழ்க்கைல நடக்காத சில விஷயங்கள் இல்ல நடக்கணும்னு நாம ஆசைப் படுற விஷயங்கள் தான் பெரும்பாலும் கனவா வருது. நானும் நெனச்சி நெனச்சி பார்க்குறேன் இந்த திரிஷா மட்டும் கனவுல வர மாட்டேங்குது, யாராவது கொஞ்ச(ம்) சொல்லுங்களேன். பறக்கிற மாதிரி, தண்ணில (அந்த தண்ணி இல்ல !) நடக்கிற மாதிரி, பள்ளிக்கூடத்துல சண்டை போட்டவன கனவுல(மட்டும் தான்) போட்டு அடிக்கிற மாதிரி, சில சமயம் மெகா சீரியல் போல மொத நாள் வந்த கனவு மறுநாள், விட்ட எடத்துல இருந்து தொடரும். ஆனா விளம்பரம் எல்லாம் வராதுங்க :) கனவுகள் வாழ்க்கைக்கு வண்ணம் சேர்க்கும். இப்போல்லாம் படுத்து பத்து எண்ணுறதுக்குள்ள தூக்கம் ரொங்குது :)


3. பூக்கள்
பூவ பத்தி எழுதாத கவிஞருங்க எத்தன பேருன்னு எனக்கு தெரியல. அப்பிடி இருந்தா சொல்லுங்க. ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு அழகுங்க. எங்க தோட்டத்துல பிச்சிப்பூ கொடி பரத்திருப்போம். கடந்து போறப்போ நின்னு ரசிக்காம போறவங்க கெடையாது. பொன்னு வைக்கிற எடத்துல பூவ வைக்கலாம்னு சொல்லுவாங்க. எவ்வளவு நகைய அள்ளிப் போட்டாலும் ஒரு முழம் மல்லியோ கனகாம்பரமோ வச்சிட்டு வர்ற அழகு வராது. பூக்கள பார்க்கும் போது சிரிக்கிற மாதிரியே இருக்கும். 'எதுக்குடா கவலைப் படுற ? என்னை பாரு... இத மாதிரி சிரி, எல்லாம் சரியா போகும்'னு சொல்லும். நானும் சரின்னு அடுக்கு செம்பருத்திய பார்த்து சிரிச்சிக்கிட்டே நிப்பேன். தெருல போறவன் எல்லாம் பாவம் இந்த வீட்டுப் பையன் ஒரு மாதிரி போலங்கற மாதிரி பாப்பாய்ங்க. அவங்களுக்கு தெரியாது செம்பருத்தி என்கிட்ட என்னவெல்லாம் பேசும்னு.

4. மழை
புரட்டாசி மாசம் அடை மழை பொரட்டி பொரட்டி எடுக்கும். அப்போல்லாம் பள்ளிக்கூடத்துக்கு திடீர் திடீர்னு லீவு விட்டிருவாங்க. ஒரே ஆட்டம் தான். தினுசு தினுசா கப்பல் செஞ்சு விடுறது. மீன்னு சொல்லி தலப்பெரட்டைய பிடிச்சிட்டு வாரது. வேணும்னே மழைல நனைஞ்சிட்டு அம்மாக்கிட்ட பொய் சொல்றது. எல்லாம் அழகா இருக்கும். வெளில மழை வரும் போது வீட்ல சூடா பஜ்ஜி சுட்டு டீ போட்டு தருவாங்க. மத்த சமயம் அத சாப்பிட அடம் பிடிப்பேன். ஆனா மழைக்காலத்துல அது அமிர்தமா இருக்கும். மழைல நனைஞ்சா உடம்புல மனசுல இருக்கிற அழுக்கெல்லாம் அடிச்சிட்டு போய்டும். அதுக்காக வீட்ல குளிக்காம வானத்தயே வெறிச்சு பார்த்துக்கிட்டு உக்காந்திருக்க கூடாது, போங்க போய் சோப் போட்டு குளிங்க. பாத்தீங்கன்னா இந்த மழைக்காக மாரியாத்தாக்கு பூசையெல்லாம் போடுவாய்ங்க, கழுதைக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி வைப்பாய்ங்க அப்புறம் மழை வந்தா இழுத்து மூடி வீட்டுக்குள்ளார உக்காந்துக்குவாய்ங்க. நமக்கெல்லாம் உச்சில இருந்து உள்ளங்கால் வரைக்கும் நனைஞ்சிடனும் அதான் அழகு.

5. மனம்
'அட மனசு தாங்க அழகு'ன்னு சொல்றவங்கலாம் இங்க வாங்க. மழை பெய்ய வைக்கிற ஒண்ணு ரெண்டு நல்ல மனசுக்காரங்க எல்லா ஊர்லயும் இருக்காங்க. அவங்கள சந்திக்கிற வாய்ப்பு கெடச்சா அப்போ தெரியும் மனசோட அழகு. கொஞ்சம் மாறுனா நாம கூட அந்த பட்டியல்ல சேரலாம். மத்தவங்க மனச புரிஞ்சிக்கிட்டு அன்பா ஆதரவா பேசறதுக்கும் ஒரு மனசு வேணும். பஸ்சுல கப்பல் கவுந்தாப்ல கன்னத்துல கை வச்சி உக்காந்திருக்கும் போது, பக்கத்துல இருந்து பெரிசு ஒண்ணு அறுவைய போட ஆரம்பிக்கும். அறுவையா இருந்தாலும், அவங்க மனசு அருமையான அழகு. யாருன்னே தெரியாட்டியும் ஆதரவா பேசணும்னு அவங்களுக்கு மட்டும் தான் தோணும். அடுத்தவன் கீழ விழுந்தா கை குடுத்து தூக்கி விடாம, தாண்டிக் குதிச்சு வேகமா முன்னாடி போகணும்னு நெனக்கிற இந்த ஒலகத்துல மனசு அழகானவங்க சிலர் இருக்கத் தான் செய்றாங்க.

6. நேர்த்தி
அச்சுக் கோர்த்தாப்ல எழுத்து, உயிரோட்டமான ஓவியம், வரிசை தப்பாம அடுக்கி வச்ச மண்பானை, தொட்டா சிணுங்கும் கோவில் சிலை... இப்பிடி மனுசனோட ஒவ்வொரு படைப்புலயும் ஒரு நேர்த்தி(Perfection) இருக்கும் போது அது அழகா மாறிடுது. நாமளே ஏதோ ஒரு பொருள் வாங்கறோம் அதுல இல்லாத ஓரத்துல எல்லாம் கண்ண விட்டு நோண்டி எங்கயாவது ஒரு சின்ன பிசிறு இருந்தா கூட 'என்னா ஓட்டைய குடுத்து ஏமாத்த பாக்குறியா ? வேற குடுய்யா'னு கடைக்காரன ஏசிட்டு, வாங்கிட்டு வருவோம். ரெண்டு நாள்ல அது பரணைல கெடக்குதா, குப்பைத் தொட்டில கெடக்குதான்னு யாரு பாத்தா. வாங்கும் போது நமக்கு அழகா இருக்கனும். பார்க்க அழகா இருந்தா நம்ம ஆளு கை நெறயா கழுதவிட்டையும், பை நெறயா பருத்திக்கொட்டையும் வாங்கிட்டு வந்திடுவான்.

எனக்கு அறிவு கம்மி தான். 'இதெல்லாம் அழகுன்னு யாரு சொல்லுவா ?' அப்பிடினு நெனைக்கிறவங்க 'ஆறு அழகுகள்'னு தலைப்பிட்டு...... கமெண்ட்ல போடுங்க :)