Thursday, September 16, 2021

உயிர்க்கொல்லி


 

16-04-2020

டங் டங்கென்று அவனுக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட சத்தம். அவசரமில்லாத சீரான தாளகதியில் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் சம்மட்டி அடித்துக்கொண்டிருந்தனர். பாலத்தின் மேல் விரையும் வாகனங்களின் சீரற்ற இரைச்சல். இந்த இரண்டும் இல்லையென்றால் தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக்கொள்வான். சம்மட்டி ஒலி இதயத்துடிப்பென்றால், வாகன இரைச்சல் நுரையீரல் சத்தம். சக்காரியா பட்டறையில் இன்று 35 ட்ரம்களை உடைத்தே ஆக வேண்டும். என்ன நிறமென்று கணிக்க முடியாத கசங்கிய சட்டையைக் கழற்றி ஒரு ஆணியில் தொங்கவிட்டு நைந்து போன கைலியை இறுக்கி தூக்கிக் கட்டிக்கொண்டு 20 ஆண்டுகளாக தனக்கு மனப்பாடமான வேலையைத் தொடங்கினான்.

அதிகமாக யோசித்து அளவெடுத்து எல்லாம் பார்க்க வேண்டியதில்லை. பழைய தார் ட்ரம்களை அடுக்கி வைத்திருப்பார்கள். மேல் மூடியையும் அடிப்பாகத்தையும் ஜாஃபர் அறுத்து வைத்திருப்பான். எடுத்துப் போட்டு முகடு இல்லாமல் சொட்டை விழாமல் தட்டுவது மட்டுமே இவன் வேலை. இங்கே இருக்கும் 13 பட்டறைகளிலும் மாதச் சம்பளத்துக்கு ஆள் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அத்துக்கூலி தான். எங்கே வேலை இருக்கிறதோ அங்கு பார்த்துக்க வேண்டியது. புதுப் பையன்கள் வருவார்கள் போவார்கள் ஒரு வாரம் பத்து நாளைக்கு மேலே தாக்குப்பிடிக்க மாட்டான்கள். கூலி 600 ரூபாய்க்கு ஆசைப்பட்டு வருவது பின் ‘கைப்பிடிச்சிக்கிச்சு, கால் பிசகிருச்சு’ எனக் காரணம் சொல்லி நின்று விடுவார்கள்.

நான்காவது ட்ரம்மை எடுத்துப் போட்டு பயாஸ் ஒரு பக்கமும் இவன் மறுபக்கமும் தட்டத் தொடங்கினார்கள். சரியாக ஒவ்வொருத்தருடைய சம்மட்டி இறங்கி ஏறும் இடைவெளியில் இருவரும் பேசிக்கொள்வார்கள். மற்ற யாருக்கும் கேட்காது.

“மாமிக்கு ஒடம்பு சவுரியமா இருக்கா ? காசு கீசு குடுப்பியா”, எனக்கேட்ட பயாசிடம்

“எங்க மாப்ள குடுக்குறது, அனிஷாக்கு குடுக்கவே பத்தல”, என்றான்.

“அவா அம்மா வீட்ல தான இருக்கா எதுக்கு காசு குடுக்குற. பெத்தவளுக்கு குட்றா”

“அதுக்குன்னு குடுக்காம இருக்க முடியுமா, நானும் அங்க தான திங்கிறேன் தூங்குறேன்”

“அது இருக்கு இருந்தாலும் மாமிக்கு வயசு என்ன ஆகுது. ஒத்த ஆளா காய விக்க, கீரய விக்கன்னு அதும் அல்லாடுது”

“ரெண்டு மாசத்துல (நடுவில் இருமிக்கொள்கிறான்) வீடு பார்த்துடலாம்னு அனிஷாவ இங்க கூட்டிட்டு வந்தேன். ஒன்ற வருசம் ஆச்சு”

“சரி சரி வீட்டப் பார்த்துட்டு மாமியவும் இங்க வரச்சொல்லிரு”

“ஆமா மாப்ள லீலாவதி கல்யாண மண்டபம் பக்கத்துல ரெண்டு ரூம்பு ஒரு சமையக்கட்டு வீட்டுலயே பாத்ரூம்பு இருக்கமாதிரி பாத்திருக்கேன். அட்வான்சும் அதிகமில்ல சுருக்கமா முடிச்சிடலாம்”

“பெறவு என்ன ஒடனே முடிச்சிற வேண்டியது தான ?”

“ஒனக்குத் தெரியாததா, கைல காசா வச்சிருக்கேன். சாயந்திரம் போல சக்காரியாட்ட ஐயாயிரம் கேக்கணும்”

“அவன் சின்னப்பையனாச்சே குடுப்பானா ?”

“வேற என்ன செய்ய அவங்கப்பாரு இப்ப பட்டறப்பக்கமே வர்றது இல்ல. வேணும்னா கேட்டுத்தான் ஆவணும்”

சம்மட்டியைத் தூக்கி முதுகுக்குப் பின் கொண்டு போய் ஓங்கி அடிக்கும் நேர இடைவெளியில் இப்படி ஒன்றிரண்டு வரிகளில் பேசிக்கொள்ளலாம். பயாசுக்கும் இவனுக்குமான திறமை இது. இவனுக்கு இப்போதெல்லாம் முன்பைப் போல வேலை செய்ய முடியவில்லை. உடல் வலிமை அதிகம் தேவைப்படும் பணி இது. எப்படிப்பட்ட உடல்வாகாக இருப்பினும் இரவெல்லாம் வலி இருக்கும். மது இன்றி உறக்கம் வராது. இந்தப் பாலத்தின் கீழ் ட்ரம் அடித்துப் பிழைக்கும் யாதொரு ஜீவனும் இதற்கு விதிவிலக்கல்ல.

வழக்கத்தை விட சீக்கிரமாகவே அன்றைய இலக்கான 35 ட்ரம்களை அடித்து அடுக்கிவிட்டு சக்காரியாவுக்காக காத்திருந்தான். எட்டரை மணிக்கு மேலே தான் சக்காரியா வந்தான். கூட 3,4 நண்பர்களையும் அழைத்து வந்திருந்தான். பட்டறைக்குள் அவர்கள் ஆளுக்கொரு ஸ்டூலைப் போட்டு பட்டறையைப் போட்டுக்கொண்டிருந்தனர். அட்வான்ஸ் கேட்க வேண்டும். ஆனால் இவனுக்குத் தயக்கமாக இருந்தது. நூறு இருநூறு வாங்குவான் மறுநாள் கூலியில் கழித்துக்கொள்வார்கள். 15 வருச பழக்கந்தான். ஆனால் சக்காரியா அப்பாவிடம் கேட்கலாம். இவன் சின்னப்பையன் என யோசித்துக்கொண்டே பேச்சுக் குடுத்தான்.

“தம்பி வேலயல்லாம் முன்னவே முடிஞ்சது. நாளைக்கு இன்னும் 5 ட்ரம் சேர்த்துக்கூட அடிக்கலாம்”

சக்காரியா சிரித்துக்கொண்டே, “இன்னும் அஞ்சு ட்ரம்மா ? நீ அடிப்ப, ஆனா ஆர்டர் வேணுமே. எப்பவும் 20, 30 அடிக்கவே அலுத்துக்குவ இன்னும் சேர்த்து அடிக்கிறேன்ற”

“ஒன்னு கேட்கணும். கொஞ்சம் இப்படி வர்றியா ?”

கேலியும் கிண்டலுமாக சுவாரசியமாக தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த சக்காரியா அந்த உரையாடலின் உற்சாகம் மாறாமல் கடைக்கு வெளியே வந்து என்ன என்பது போல பார்த்தான்.

“ஒனக்கே தெரியும் ஒன்ற வருசமா மாமியா வீட்டுல தான் இருக்கேன். பக்கத்துல வீடு பார்த்திருக்கேன். சிக்கனமா தான் தேடினேன். ஒரு ஐயாயிரம் அட்வான்ஸ் போடணும். தினம் முந்நூறு பிடிச்சிக்க”

சட்டென உற்சாகம் குறைந்து முகம் மாறியது சக்காரியாவுக்கு,”அம்பது நூறு கேளு அத்தாவுக்குத் தெரியாம தர்றேன். ஐயாயிரம்லாம் அவர்ட்ட தான் கேட்கணும். அடுத்த வாரமெல்லாம் ஆர்டர் வருமான்னே தெரியல. பட்டறயே திறக்கலாமா வேணாமானு யோசிச்சிட்டு இருக்கென். சரி அத்தாட்ட நைட்டு கேட்டு வைக்கிறேன். நாளைக்கு பதில் சொல்லவா ?”, என்றபடி ஐநூறை எடுத்து நீட்டினான்.

வாங்குவதா வேணாமா ஐயாயிரத்துக்கு ஐநூறைக்குடுத்து சரிக்கட்டுகிறானா என்று யோசித்த படி, “இருக்கட்டும் நாளைக்கு வாங்கிக்கிறேன்” என்று நடக்க ஆரம்பித்தான். சக்காரியாவின் தாத்தாவும் இவனுடைய அத்தாவும் ஒன்றாகவே இந்த ஊருக்கு வந்தார்கள். ஒரு வகையில் தூரத்து சொந்தம். அதைத் தூக்கி இதில் போட்டு இதை எடுத்து அங்கே விற்று என்று அவர்கள் குடும்பம் மேடேறிவிட்டது. இவன் அத்தா எப்படி வந்தாரோ அதே நிலையில் தான் இவன் இன்னும் இருக்கிறான்.

பாலம் முடிந்து சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்தான். எவ்வளவு வாகனங்கள். ஆட்கள் எத்தனை பேர் நின்றாலும் அவை வேகம் குறைப்பதில்லை. கையைப் போட்டு உயிரைக் கையில் பிடித்துத் தான் கடக்க வேண்டும் ஒவ்வொரு நாளும். சின்ன மகளுக்கு கலர் படம் வரையும் புத்தகம் வாங்க வேண்டும். வரும் ஜூனில் அக்கம் பக்கம் எங்காவது ப்ரி.கே.ஜி. சேர்க்கணும். அதுக்கு மாமனாரிடம் கொஞ்சம் கேட்டுக்கலாம். ஏதோ ஒரு நினைவில் கூலியே வாங்காமல் வந்துவிட்டான். திரும்ப அதே வாகன நெரிசலைக் கடந்து வேக வேகமாக பட்டறையை அடைப்பதற்குள் சென்று சக்காரியாவிடம் 250 ரூபாய் மட்டும் கேட்டான். சக்காரியாவும் பேச்சு சுவாரசியத்தில் மறந்துவிட்டிருந்தான். கூலியோட சேர்த்து மொத்தமாக 750 ரூபாய் கொடுத்தான். 250 மட்டும் போதுமென்று வாங்கிக்கொண்டு முதலில் கலர் பட நோட்டு. நோட்டை கை நீட்டு வாங்கும் போதே தோள்களில் விண்ணென்று வலி. பிறகு கலர் குவார்ட்டர் பாட்டில் வாங்கி அங்கேயே ஓரத்தில் தண்ணீர் பாக்கெட், டிஸ்போசபிள் டம்ளர், மிக்சர் சகிதம் அடித்துவிட்டு 4 பரோட்டா ஆம்லெட் சாப்பிட்டு மாமியார் வீட்டுக்குச் சென்றான்.

சின்னக்குட்டி கலர் பட நோட்டை வாங்கிக்கொண்டு குதியாட்டம் போட்டது. அனிஷா ஏதோ பேச வந்தாள். இவன் வீடு பார்த்திருப்பதையும் அட்வான்ஸ் கேட்டிருப்பதையும் உளரி உளரி இருமி இருமி சொல்லியபடி தூங்கிப்போனான்.

சீக்கிரமே விடிந்தது போலத் தோன்றியது அவனுக்கு. மணி 9.45 அடித்துப்பிடித்து முகம் மட்டும் கழுவிக்கொண்டு குளிக்காமலும் காலை உணவு உண்ணாமலும் பட்டறைக்குப் போனான். மிகவும் குறைவான வாகனங்களே சாலையில் பார்க்க முடிந்தது. அங்கங்கு போலிஸ் வேறு. பெரிய தலைவர்கள் யாரும் இறந்து போனார்களோ என்று நினைத்தான். பாலத்துக்கு சைடில் செல்லும் போதே அனைத்துக் கடைகளும் அடைத்திருப்பது தெரிந்தது. பட்டறை இருக்குமா ? அங்கிருந்து பார்த்தால் அடைத்திருப்பது போலத் தான் இருந்தது. இருந்தாலும் சும்மா சாத்திக்கொண்டு உள்ளே பயாஸ் பீடி அடித்துக்கொண்டிருக்கக்கூடும். பூட்டே போட்டிருந்தது. இன்றைக்குத் தான் பட்டறையின் பூட்டையே பார்க்கிறான். எப்போதும் திறந்த பின் வந்து அடைக்கும் முன் கிளம்பிவிடுவான்.

சக்காரியாவுக்கு போன் பண்ணலாமென எடுத்தான். பின் பயாசுக்கு முதலில் அடித்துக் கேட்டுக்கொள்ளலாம் என்று அவனுக்குக் கூப்பிட்டான். “பயாசே, என்ன பட்டற பூட்டிக்கெடக்கு ?”

“என்ன மாப்ள நைட்டு மட்டையா ? டிவி கிவி பார்க்குறது இல்லையா ? ஒரு வாரத்துக்கு பந்த்தாம். கட கண்ணி கிடையாது. ரோட்டுல ஆளு நடமாடக்கூடாதாம்”

“அப்டி என்ன பயாசே ஆச்சு. பெரிய தலக்கட்டு யாரையும் போட்டுட்டாய்ங்களா ?”

“யோவ், நாடு முழுக்க இதானாம். ஏதோ நோய் பரவுதாம். நீயும் சுத்திக்கிட்டு கிடக்காம வீடு போய் சேரு. என் பொண்டாட்டி என்ன வெளிய வுட மாட்றா”

இவனுக்கு எதுவும் புரியவில்லை. நாட்டு நடப்பு பற்றி பெரிய அக்கறையெல்லாம் இல்லை. வீட்டைப் பற்றி யோசிப்பானே தவிர்த்து எதுவும் எடுத்துச் செய்ய மாட்டான். நேற்று தான் ஏதோ ஜின் இறங்கியது போல வேலையும் பார்த்து வீடு பிடிக்க அட்வான்செல்லாம் கேட்டு வைத்திருந்தான். திரும்பிப் போனதும் அனிஷா விளக்கமாகச் சொன்னாள். ஏதோ அம்மை போல வைரஸ் பரவுகிறதென. தினமும் குடிப்பானே தவிர வேலைக்குப் போகாமல் இருக்க மாட்டான். ஒரு வாரம் ஓய்வு எடுக்கலாம் தான். அது வரை கூலிக்கும் குவார்ட்டருக்கும் எங்கே போவது ?

வேலைக்கும் செல்லாமல், சொற்பப் பணம் என்றாலும் அதையும் கொடுக்க வழியில்லாமல், வெளியிலும் செல்ல முடியாமல் மாமியார் வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பது மழை மூடிய வலைப்பொந்தை மண்ணுள் இருந்து முட்டிக்கொண்டிருப்பது போல பெரும் ப்ரயத்தனமாகத் தோன்றியது. பார்த்து வைத்திருந்த வீட்டுக்குப் போய்விடலாம் தான். ஆனால் சக்காரியா ஃபோன் எடுக்க வேண்டுமே. ஆர்டர் இருந்தால் தான் அவனும் எடுப்பான். இப்போது அவனிடம் கேட்க முடியாது. பயாசும் அதைத் தான் சொன்னான். அடுத்த வாரம் ஆர்டர் இருக்குமா எனத் தெரியவில்லை என சக்காரியா சொன்னதும் நினைவுக்கு வந்தது. இந்த நேரத்திலா கொரோனா வந்துத் தொலைய வேண்டும். இதையெல்லாம் மறக்கலாம் என்றால் சரக்கும் கிடைக்கவில்லை. ப்ளாக்கில் கிடைக்கிறது குவார்ட்டர் 400, 500 என்கிறார்கள். மூச்சு வாங்கியது. எனினும் மூக்கு முழுவதும் மதுவின் கார வாடையே நிரம்பியிருந்தது.

இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. இரண்டு நிமிடத்துக்கொரு முறை இருமல் வந்த வண்ணம் இருக்கிறது. பொழுது சாய்ந்தால் நிலை கொள்ள மாட்டேன் என்கிறது. இரவு கவிழ கவிழ மதுவைத் பரபரத்துத் தேடியது மனது. உணவு ஒப்பவில்லை. மாடிப்படி ஏறினாலே கால்கள் தள்ளாடுகிறது. காபி குடிக்கும் போது இரண்டு முறை கொட்டிவிட்டான். அதற்கு மேல் முடியாமல் அனிஷாவிடம் அம்மாவைப் பார்க்கப் போவதாக சொல்லி வைத்தான். அதிகாலையில் போனால் போலிஸ் கொஞ்சம் பிடிப்பதில்லை என்று 5.30க்கெல்லாம் கையில் ஒரு கட்டப்பை எடுத்துக்கொண்டு பி.பி.குளத்தில் இருக்கும் தன் அம்மாவின் வீட்டுக்கு கிளம்பினான்.

அம்மாவிடம் சொல்லக்கூட இல்லை. ஆற்றைக்கடந்து வருவது கூட பெரிய விஷயம் கிடையாது. அத்தனை போலிசுக்கும் தினுசு தினுசாகப் பதில் சொல்லி யானைக்கல் பக்கத்தில் வரும் போது பதில் சொல்லும் முன்னே தொடையில் லத்தியடி வாங்கி வந்து சேருவதற்குள் போதும் போதுமென்றானது. வக்கற்ற மகனென்றாலும் இந்த அம்மாக்களுக்கு வாஞ்சை குறைவதில்லை. “வாயா ராசா” என்று வாய் நிறைய அழைத்து, “இந்த நேரத்துக்கு எப்படி வந்த ?” என்றாள். “உன்னப் பார்க்கத் தான்”, என்றபடி பாயை எடுத்துப் போட்டு உறங்கிப்போனான்.

அங்கிருந்தவரை சரியான உறக்கம் இல்லை மாமியார் வீட்டில். அதை விட சின்ன அறை என்றாலும் இங்கே கொஞ்சம் சாவகாசமாகத் தூங்கலாம். இரண்டு மாதம் கூட இருக்கும் பிள்ளையைப் பார்த்து. அப்படியே அங்கேயே இருந்திருவானோ என்று இருந்தவளுக்கு இவன் வந்தது ஆசுவாசமாக இருந்தது. வீட்டில் இருந்த பருப்பை ஊறப்போட்டு வடையும் இட்டிலியும் சுட்டு எழுப்பினாள். எந்திரிக்கும் போதே இருமல் தான் அவனுக்கு. வேலை செய்யும் போது அவ்வளவாக வராது. சும்மா இருந்தால் சும்மாவேணும் இருமிக்கொண்டிருப்பதற்கு தொண்டை பழகிவிட்டிருந்தது. ஆவி பறக்கும் இட்டலியை விண்டு தக்காளி சட்னி தொட்டு புண்ணாகிப் போன தொண்டைக்குள் இறங்கும் போது அதன் வெப்பத்தில் கண்களில் நீர் முட்டி நின்றது. அம்மாவிடம் எப்போ கேட்கலாம் என்று யோசனையாகவே இருந்தது அவனுக்கு. மதியத்துக்கு மேல் கேட்கலாம் என்று இருந்தான்.

ஐயாயிரம் அவளுக்கு பெரிய பணம் தான். ஆனாலும் அந்த சின்ன வீட்டுக்குள் எங்கேனும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்திருப்பாள். ஆயிரம் ரெண்டாயிரம் கையில் இருப்பதைக் கொடுத்தாள் என்றாலும் உதவும். அடக்க முடியாமல் பன்னிரெண்டு மணி வாக்கில் கேட்டே விட்டான். “அம்புட்டுக் காசு என்னத்துக்குப்பா இப்போ ?”, என்று கேட்டாள். வீடு பார்த்த விவரம் சொன்னதும் “அப்டியா ராசா, அல்லா அருளால இப்பவாச்சும் மனசு வந்துச்சே உனக்கு இந்த கெழவியக் கூப்டு போனும்னு”, என்று காலண்டருக்கும் பின்னால், அடுக்கி வைத்த சேலைகளுக்கு இடையில், பருப்பு சம்படத்தில் என பல ரகசிய லாக்கர்களில் தேடி 2700 ரூபாய் எடுத்து விட்டாள். அரிசி கழுவி வைத்திருந்தாள். “வந்து சமைச்சிக்கலாம். மிச்சத்துக்கு வாங்கிடலாம் வா”, என்று அங்கே தெருவில் பழகிய வீடுகளுக்கு எல்லாம் இவனையும் அழைத்துக் கொண்டு போய் கேட்டாள். எப்படியாச்சும் தேத்தி விட்டால் இரவு உறங்கி விட்டு நாளை அதிகாலை இதே போல நடந்து போய் அட்வான்ஸ் போட்டு விடலாம்.

போன வீடுகளில் பலரும் வாசலிலேயே நிறுத்தி மூக்கு வாயை துணியில் மூடிக்கொண்டே என்ன என்றார்கள். இவன் பேச வாயெடுத்தாலே அடக்க மாட்டாமல் இருமல் வந்தது. தோற்றத்தைப் பார்த்தாலே நோயாளியின் சாயல் வேறு. நான்கு வீடுகளில், “மொதல்ல ஒன் மவன ஆஸ்பத்திரிக்குக் கூட்டுப்போ”, என விரட்டினார்கள். இவனுக்கு மண்டை குடைச்சலெடுத்தது. பணம் குடுக்க மனதில்லாமல் தன்னை நோயாளி என்கிறார்கள் என நினைத்தான். வீட்டுக்கு வரும் வழியிலேயே நான்கைந்து பேர் சேர்ந்து கவுன்சிலரிடம் புகார் செய்து அவரையும் அழைத்து வந்தார்கள். இவனுக்குக் கொரானா இருப்பதாக அவர்களுக்குச் சந்தேகம். சிலர் ஆணித்தரமாக இவனுக்கு பாதிப்பு இருக்கிறது என்று நம்பினார்கள். 108க்கு அழைத்து அரை மணி ஆகியும் வரவில்லை. பொறுமையிழந்து ஒரு வண்டி பிடித்து வலுக்கட்டாயமாக அம்மாவையும் மகனையும் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள்.

மருத்துவமனையில் சோதித்து விட்டு கொரோனா தொற்று இல்லையென்று மாலையில் அனுப்பிவிட்டார்கள். வீட்டுக்கு வரும் வழியில் மீண்டும் இரவு. கை கால் நடுக்கம், அதிக வேர்வை என்று ஆள் மிகுந்த அழுத்தத்தில் இருந்தான். வீடடைந்ததும் உள்ளே இருக்க இயலாமல் வாசற்படியில் உட்கார்ந்திருந்தான். பூனைக்கு கழுத்தில் மணி போல இவன் வந்ததை இருமற் சத்தமே தெருக்காரர்களுக்கு காட்டிக்கொடுத்தது. மருத்துவமனையில் சொன்னதை யாரும் நம்பத்தயாரில்லை. மீண்டும் 108. இப்பவும் வரவில்லை. இதற்கிடையில் யாரொவெல்லாம் வந்து இவனை வசைபாடி, இவன் எழுந்து அடிக்கப் போய் ஒரே கலவரம் ஆகிவிட்டது அந்தப் பகுதி. கவுன்சிலரை மக்கள் மொய்த்து விட்டனர். அவரும் 108க்கு அழைத்துப் பார்த்தார். வேறு வழியில்லாமல் ஒரு குப்பை வண்டியைப் பிடித்து குண்டுக்கட்டாக தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிப்போனார்கள். இப்படியே விட்டால் மறுபடி இங்கே தான் வருவான் என்று கூட்டத்தில் ஒருவன் சொல்லிக்கொண்டே குப்பை வண்டியில் ஏற்றுவதை தனது செல்போனில் வீடியோ எடுத்து, கொரோனா பாதித்த நபரை மருத்துவமனை அழைத்துச் செல்லும் காட்சி என்று போட்டு அந்தப் பகுதியில் வாட்சாப் குழுவில் பகிர்ந்துவிட்டான்.

இம்முறை மருத்துவமனையில் கொஞ்சம் காட்டமாகத் திட்டி அனுப்பிவிட்டார்கள். இருக்கும் நோயாளிகளையே பார்க்க முடியவில்லை. சொல்லி தானே அனுப்பினோம் திரும்பத் திரும்பக் கொண்டு வந்தால் எப்படி. வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொள்ளுங்கள் என்று சில பாதுகாப்பு வழிமுறைகளைச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். வீடிருக்கும் பகுதிக்குள் அவனை நுழையவே விடவில்லை. “இத்தன நாளு எங்க இருந்த அங்கயே போ. நோயப் பரப்பிவிட எங்க ஏரியா தான் கெடச்சதா ?” என அடிக்காத குறையாகத் துரத்தினார்கள். பின்னிரவு நேரம் என்றும் பார்க்காமல் அம்மாவிடம் சொல்லிக்கொள்ளாமல் அப்படியே நடந்து போனான்.

இன்னும் பொழுது விடியவில்லை. பயாசுக்குப் ஃபோன் பண்ணினான். டங் டங்கென்ற சத்தமில்லாத பாலத்தின் கீழ் பட்டறையில் நின்று கொண்டிருந்தான். அரை மணி நேரங்கழித்து தூக்கக்கலக்கத்துடன் பயாஸ் பேசினான். அவன் வீடு அருகில் தான். அங்கேயே இரு வர்றேன் என்று வந்து நின்றான். பயாஸ் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. தனது செல்போன் எடுத்து வாட்சாப் திறந்து காட்டினான். இவனை குப்பை வண்டியில் ஏற்றுவதை பல குழுக்களிலும் பகிர்ந்திருந்தார்கள். இவனைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்குபடியும், உடன் காவல் நிலையத்திலோ மருத்துவமனையிலோ கொண்டு போய் விடுமாறும் நீள நீளமாக எழுதி வைத்திருந்தார்கள். பதில் எதுவும் பேசவில்லை. பயாஸ் கூப்பிடக் கூப்பிட இருமிக்கொண்டும் தள்ளாடியபடியும் வேக வேகமாக நடந்தான். பாலத்தின் முடிவில் இருக்கும் சந்திப்பு ஆளரவமற்றிருந்தது. இப்படி அவன் பார்த்ததே இல்லை. அவ்வளவு வெறுமை.

ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தான். எந்த வழியில் வந்தானென்றும், எத்தனை தூரம் வந்தானென்றும் அவனுக்கு நினைவில் இல்லை. ஏதோ ஊருக்குச் செல்லும் போது பார்த்துப் பழகிய தண்டவாளம் போல நினைவில் வந்தது. வீடுகளும் இல்லை ஆட்களும் இல்லை. இஷ்டம் போல இருமிக்கொள்ளலாம். தூரத்தில் சின்னக்குட்டி தண்டவாளத்தில் அமர்ந்து கலர் பட நோட்டில் கிறுக்கிக்கொண்டிருந்தாள். அனிஷா தண்டவாளத்துக் கட்டைகளுக்கு இடையில் தீ மூட்டி காபி போட்டுக்கொண்டிருக்கிறாள். மயக்கமாக வந்தது. நேற்று பகலில் சாப்பிட்டது. அதற்குப் பிறகு பச்சைத் தண்ணி பல்லில் இறங்கவில்லை. விழுவது போல தடுக்கியபடி தண்டவாளத்தில் நடந்தான். ரொம்ப நேரமாக அதில் நடந்து கொண்டிருப்பான் போல. உடல் பலமில்லாமல் தான் தடுக்கினானே ஒழிய தண்டவாளக்கட்டைகளின் தூரம் அவன் கால்களுக்கு அனிச்சையாகப் பழகிவிட்டிருந்தது. என்னென்னமோ யோசித்தான். பசிக்காமல் இருந்தால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வீட்டில் இருக்கலாம். அதுவும் தனி வீடாக. பணமும் இருந்தால் சமாளிக்கலாம். முக்கியமாக மாலை வேளைகளில் கொஞ்சமேனும் மதுவும் கிடைத்தால் உடல் நடுங்காமல் உறங்கிப்போகலாம். சின்னக்குட்டி, “அத்தா அத்தா சேப்புக் கலர் இல்ல வாங்கிட்டு வர்றியா”, என ஒரு ரயிலின் ஓசையில் அலறினாள். நொறுங்கும் தடதடப்பு. இறுதிச் சிவப்பு. பின் பசியற்ற, பணம் தேவையில்லாத ஒரு அமைதி.

Art by Aphrodite Désirée Navab

No comments:

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.