Friday, November 20, 2009

முள்ளோடு உறவாடும் பூ!

பிரிந்து விழுந்தும்
பறக்கத் துடிக்கும்
சிறகாகக் காதல்....
விழுந்த சிறகை
எடுத்து விளையாடும்
சிறுமியாக நீ....!

பாட்டி சொன்ன கதைகளில்
கேட்டு ரசித்த
பேரழகு இளவரசிகளும்
தேவலோக மங்கைகளும்
பழைய தாவணி போட்டுக்கொண்டு
பாசி மணி கோர்த்திருந்தால்
உன்னைப் போல் தானடி இருந்திருப்பார்கள்.

என் செல்லக்கிளி
நீயென்று சொல்லி
மறைத்து வைத்த மிளகாயை - உன்
சொக்க வைக்கும் உதடுகளில்
குறும்பாக நான் தேய்க்க
நீ சிரித்துக் கொண்டே சிந்தும்
கண்ணீரோடு சேர்ந்து
நம் காதலும் பெருக்கெடுக்கும்.

பிறந்தது என்னவோ
ஆட்டுக்குட்டி முட்டையிடும்
அழகிய கிராமம்.
படித்ததெல்லாம்
குயில்களும் மயில்களும்
கற்றுத் தந்த பாடம்.
அப்படியிருக்க,
"எங்கு சென்று வாங்கி வந்தாய்,
இதழ்வழிக் கல்வியில்
இளங்கலைப் பட்டம்?"

முறைத்துச் சிரித்து
பூசி மறைத்த விரிசல்களும்,
அடித்துச் செல்லும்
அலைகளையெல்லாம்
தடுத்து நிறுத்தும் கற்கள் போல
அடுக்கி வைத்த நினைவுகளும்
நாம் காதலினால் கட்டிய
அடையாள வீட்டிற்கு
அலங்காரமாக நிற்கின்றன...

மேகத்தினுள்ளே
குடியிருக்கும் மழை நீ....
மோகத்தினூடே
மறைந்திருக்கும் சிலை நீ...
இலையோடு வழிந்திருந்து
விழுகின்ற மழைத்துளி போல்
காதோடு ரகசியமாய்
கதை பேசும்
இதழிசையும் நீ...
முள்ளோடு உறவாடும்
பூவாக நீ இருந்தால்
வண்டாக நான் மாறி
விளையாட மாட்டேனா?

- அன்புடன் அரவிந்தன்.

நன்றி - சென்னை ஆன்லைன்
http://tamil.chennaionline.com/literature/poem/newsitem.aspx?NEWSID=df3ca012-ddb0-466e-a941-42a5d5e76f64&CATEGORYNAME=kavi