Thursday, December 31, 2009

பழைய வீடு -- கவிதை


வசியம் இல்லாவிடினும்
மாதம் ஒரு முறையாவது
தவறாமல் செல்கிறேன்
தேரடி வீதியில்...

குடுகுடுப்பைக்காரனுக்குப்
பயந்து ஓடிய
குறுக்குத் தெரு கூட
முகமறந்த நண்பனைப் போல
என்னைக் குறுகுறுவென்று பார்க்கிறது...

மிதிவண்டியிலிருந்து
விழுந்த தடம்,
ஊர்திகள் விரையும்
இந்தத் தார்ச்சாலைக்கு அடியில்
எங்கோ புதைந்து கிடக்கிறது...
முழங்கைத் தழும்பை
தடவிக்கொள்கிறேன்...

போகுமுன் பதியனிட்ட மாமரம்
வாசலை ஒட்டி
இருபதடிக்கு வளர்ந்திருக்கிறது...
அதன் நிழலில்
யாரோ ஒருத்தி
கைக்குழந்தையுடன் நிற்கிறாள்...
அந்த நிழல்
எனக்குச் சொந்தமில்லை...

அளவுக்கு அதிகமாக
அரிதாரம் பூசிக்கொண்டு
ஒரு அடிகூட நகராமல்
அதே இடத்தில்
மாறுவேடம் பூண்டு நிற்கிறது,
கடனுக்கு முங்கிப் போன
எங்கள் பழைய வீடு...!

வெளியிட்ட சென்னை ஆன்லைனுக்கு நன்றி !
http://tamil.chennaionline.com/literature/poem/newsitem.aspx?NEWSID=7f6ce5eb-00ea-4d71-83de-84e36deda464&CATEGORYNAME=kavi

Monday, December 21, 2009

வன்மழை - கவிதை
ருப்புநிறக் களிறுகளாக
கார்முகில்கள் ஒன்றுகூடி
வாரியிறைக்கும் வான்மழை
இல்லை இல்லை
இது வன்மழை !

கண்ணிவெடியும் காலராவும்
தின்று போட்ட மிச்சத்தை
வென்று விழுங்கும் ஆசையில்
அடாது பெய்யும் விஷத்துளிகள்
ஈரங்களற்ற மண்ணில்
ஒட்டாமல் விழுகின்றன...


வியர்வையிலும் குருதியிலும்
நனைந்த துணிகளுக்கு
மழைத் தண்ணீரை
அடையாளம் தெரியவில்லை
ஆனாலும் கேள்வியில்லாமல்
நனைந்துகொண்டன...


தாரிச்சிட்டுகளை
விரட்டித் திரிந்த குட்டிகளின்
குண்டுக் காயங்களில் கலந்து,
தார்ப்பாய் முகாம்களை திசைபிரித்து
சீழ்ரத்தத்துடனும் சீற்றத்துடனும்
ஓடும் மழைநீரில்
காகிதக் கப்பலொன்று
அனாதியாய் முங்கிக் கிடக்கிறது...


கனமழை ஓய்ந்துவிட்டது
அங்கு கன்னங்களெல்லாம்
இன்னும் நனைந்தபடியே...

வெளியிட்டதற்கு நன்றி யூத்புல் விகடன்:
http://youthful.vikatan.com/youth/Nyouth/arvind19102009.asp

Wednesday, December 9, 2009

ஆதாம் ஏவாள் - உரையாடல் கவிதைப் போட்டிக்காக

யாதுமற்ற வெளியில்
ஆடைகள் களைந்த
அழகின் நிர்வாணம்...

வெட்கம் பாராட்டாத ஒளி
மேனியெங்கும்
திரையாகப் படர்ந்தது...

உச்சிப் பொழுதுகளில்
பரிமாறிக்கொண்ட
மதுமோகப் பார்வைகள்
அந்திவேளைகளில்
வண்ணம் பெற்றுப்
பரவசமாகின்றன...

ஆயுள் பத்திரிக்கையின்
முதல் பக்கம்
இந்தக் காதலைக் கொண்டே
அச்சடிக்கப்பட்டிருக்கிறது...

மொழியும் ஒளியும்
ஓய்வெடுக்கும்
சாமத்தின் நிலவறையில்
ஒவ்வொரு இரவும்
பிழையின்றி நிகழ்கிறது
ஒரு கோடி கூடல்கள்
விழாக்கால விருப்பத்துடன்...

நிலை மறந்து
மிதந்து செல்லும்
மனமயக்கப் பயணத்தின் நீட்சியில்
அதிகரித்துப் போகிறது
பல கோடி ஊடல்கள்
கடுங்குளிரின் நடுக்கத்துடன்...

குடை ராட்டினத்தில்
சுற்றிக்கொண்டிருப்பதால்
ஒருவரை ஒருவர்
விலகிச் செல்ல
ஒருவழியுமில்லை...

இந்தக் காவியத்தின்
கடைசி வரி
துரிதகதியில் கொதிக்கும்
உயிர்த்திரவம் தொட்டு
எழுதப்படுகிறது...

ஆவி நோக
அழுது தீர்த்த
ஆழிவந்து சூழ
யுகம் யுகமாய்த் தீட்டிய
ஓவியத்தின் வண்ணங்கள்
தடயமின்றிக்
கரைந்து போகிறது
காற்று மட்டுமே சாட்சியாக...

முதலைத் தொடங்கியவர்களே
முடித்தும் வைக்கிறார்கள்...
வானமே ஆதாம்
பூமியே ஏவாள்...!