Sunday, September 19, 2021

கிழித்த கடித்ததுக்கு தலைப்பெதற்கு ?


'அன்பே' என்று ஆரம்பிக்கக்கூட அச்சமாக இருக்கிறது, அது ஆல்கஹால் வீச்சமெடுக்கும் அசிங்க வார்த்தையென்று நீ சொன்ன பிறகு. ஏதோவொரு கடிதத்தில்  உடல்முழுதும் இரை தேடும் விஷக் கொடுக்குகள் முளைத்த கொடூர மிருகமொன்றை வரைந்து அதற்கு 'அன்பு' என்று பெயரிட்டு பிறகு அதை ரா முழுதும்  கொஞ்சம் கொஞ்சமாகக் கிழித்து காற்றில் உயர எறிந்திருக்கிறேன். எத்தனை முறை, திறந்த பேனாவுடன் விடிய விடிய விளக்கெரித்து  விட்டு வெற்று வெள்ளைக் காகிதங்களை  மனப்பிறழ்வோடு கசக்கிக்கிழித்திருக்கிறேன். வெறுமையாக இருந்ததால் அதில் ஒன்றும் இல்லை என்று நீ நினைத்தால்  அது உன் சபிக்கப்பட்ட அறியாமையே. வடிக்கப்படாத வார்த்தைகளின் வன்மம் நீ அறிய முடியாது. வார்த்தைகளால் புறக்கணிக்கப்பட்ட வெள்ளைக் காகிதத்தின் ஓலம் உன் காதுகளில் நுழையாது. மொத்தக் கடிதங்களிலும் அந்தக் கடிதங்களே மிகவும் துயரமானவை.

கிழிக்கப்பட்ட ஒவ்வொரு கடிதமும் முடியாத பாலைவனத்தில் மணலால் கட்டமைக்கப்பட்ட பெருவழிப்பாதைகள். குறுக்கும் நெடுக்குமாக ஒன்றை ஒன்று வெட்டிச் சென்றாலும் எதையுமே கடக்க உதவாதது  அந்தப் பாதைகள். பாலையின் மணற்குன்றுகள் நகர்ந்து கொண்டே இருக்கும் தன்மை உடையது என்று நீ கேள்விப்பட்டிருக்கிறாயா ? அட்டைகள் கிழிந்த ஒரு இணைப்புப் புத்தகத்தில் வாசித்திருக்கிறேன். அதன்படி ஒரு பாலைவனம் முழுதையும் ஒரே ஒரு மணற்குன்றில் நடந்தே கடந்து விடலாம் என்று  நான் ஆசைப்பட்டிருக்கிறேன். எனது வாழ்க்கை முழுதையும் ஒரே ஒரு காதலைக் கொண்டே கடந்து விடலாம் என்று எண்ணியிருந்தேன். அதனால் தான் ஓரத்தில் மடித்த அக்கடிதத்தை ஒரேயொரு வார்த்தையைக் கொண்டு எழுதியிருந்தேன்.

இந்தக் கடிதத்தையும் கிழிப்பதற்காகவே எழுதுகிறேன். தட்டச்சு செய்து மின்னஞ்சலில் அனுப்பினாலும் படிக்காமலேயே பெர்மனெண்ட் டெலீட் செய்யப்படும் கடிதத்தை உனக்கு அனுப்புவதால் எந்த சமூக மாற்றமும் நிகழப் போவதில்லை. கடிதங்களை எழுதும் போது மரணத்தை சந்திப்பதைப் போல நடுங்கும் விரல்கள் கிழிக்கும் போது புது ரத்தம் திரட்டி விறைப்பாகி விடுகின்றன.  நாற்பத்து எட்டாவது கடிதத்தைத் தொடங்கியதில் இருந்து எனக்கு ஒருமனக்காட்சி ஓடுகிறது. உருவமற்று காற்றில் அலைந்து கொண்டிருக்கும் சுதந்திர வார்த்தைகளை பேனாவினால் குத்திக் கொலை செய்து காகிதத்தில் சடலமாகக் கிடத்துவதாக. எந்தக் காகிதத்தைத் தொட்டாலும் பிணவறையில் விபத்தில் இறந்து அழுகிய உடல்களை, ரணச்சீழோடு தடவுவதைப் போலத் தோன்றுகிறது. அதனால் தான் ஒவ்வொரு முறை கடிதத்தை கிழித்த பிறகும் கைகளை நன்றாக துடைத்து, நகங்களின் இடுக்குகளில் ஒட்டியிருக்கும் காகிதத்துகள்களையெல்லாம் சுத்தமாக கழுவிய பின்னரே உறங்கச் செல்வேன்.

நினைவுகள் சுகம் என்று எந்த மடையன் சொன்னது ? காதலி இல்லையென்றாலும்  காதலியின் நினைவே போதும் என்று எந்த வக்கற்றவன் சொன்னது ? உன் நினைவுகள் எதுவுமே எனக்கு மகிழ்வளிப்பதாக இல்லை. நீ விஷம் தடவி விட்டுச்சென்ற  வெறுப்பினை மட்டும் தான் பரிசுக்காகிதத்தில் சுற்றி மிகவும் பத்திரமாக  வைத்திருக்கிறேன்.அதை  யாருக்கும் கொடுக்கக்கூட மனமில்லை எனக்கு.

 நாம் பிரிந்ததை ஜன்ம விடுதலையாக நீ அறிவித்த போது நம் காதலிடையில் நாம் உருவாக்கியிருந்த புனைவுப்படிமங்கள் அனைத்தும் தசை கிழிந்து குமட்டலேற்படுத்தும் குருதியாகக் கசிந்தன. உன் நினைவுச்செல்களில் ஒன்றாகக் கலந்து விட்ட என்னை  நீங்குவது அப்படி ஒன்றும் சுலபமில்லை என்றுனக்குத் தெரியாதா ? வெகு தூர இடைவெளிக்காக நீ ப்ரயத்தனப்பட்டு செயல்பட்டதைக் கேள்விப்பட்டபோது அலுவலகித்திலேயே அதிர அதிரச் சிரித்திருக்கிறேன்.  அலுவலகத்தின் பயன்படுத்தப்படாத சுவற்று மூலைக்குப்பைகளும் என்னுடன் சேர்ந்து எக்காளமிட்டன. பிறகெப்போதும் சந்திக்கவே போவதில்லை என்றானபின் நீ  சுவிட்சர்லாந்தில் இருந்தாலென்ன ஒரு சுவற்றுக்கப்பால் இருந்தால் என்ன ? பிரிவுக்கு தூரக்கணக்கு இல்லை. காலக் கணக்கு மட்டுமே உண்டு. ஆரம்பமும் முடிவுமற்ற அண்டப் பெருவெளியில் காலம்  நமக்காக உறைந்திருக்கிறது. அது உருகும் நேரம் ஆழிப்பெருவெள்ளம் அனைத்தையும் நிறைக்கும், மனத்தையும் நிறைக்கும்.

அன்பின் முதிர்வு காதல் என்று கணக்கிட்டால் அதன் முடிவு சாதல் என்று தான் விடை வரும். அதற்காக நான் ஒருபோதும் தற்கொலை  செய்து கொள்ளப் போவதில்லை. காத்திருத்தலை தவம் என்று ஏற்றுக்கொண்ட பின் நான் இறப்பிற்கு காத்திருக்கத் துவங்குகிறேன். இறப்பதற்காகவே வாழும் தவம் என்னுடையது.

No comments:

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.