Sunday, October 17, 2010

நெகிழிக் கோப்பைகள் - கவிதை


"குளிர்காலத்தில் இது 
உடம்புக்கு நல்லதுப்பா !"

"எப்பவாச்சும் எடுத்துக்கிட்டா தப்பில்லையே !"

"அப்பப்போ சேர்த்துக்கிட்டா
இதயத்துக்கு நல்லாதாம்ல !",

போன்ற சப்பைக்கட்டுகளுடனே
பெரும்பாலான நேரங்களில் 
நாம் அதை விலை கொடுத்து வாங்குகிறோம்
கூடவே ஓரிரு நெகிழிக் கோப்பைகளையும்

ஆரம்பத்தில் அளவு சரி பார்த்து
கோப்பைகளில் பரிமாறப்படுகின்றன 
சந்தோச துக்க தருணங்கள்

புலனறியாத பொழுதுகளில்
மயக்கும் மன்மத நீர்மம்
குருதியுடன் புணர்ந்த பின்னர்
அளவுகளைத் தொலைத்து 
எக்குத் தப்பாய் நிறைத்து 
வழியவிடுகிறோம் கோப்பைகளை

நிலவை நாலாய் மடித்து 
அதனோரத்தில் 
நட்சத்திரங்கள் தெளித்த
சிவப்புப் பூ ஒன்றை ஒட்டிப் பரிசளிக்கிறோம்
அவர்களின் கூந்தல்முடி கலைந்ததற்கு 
காற்றுடன் கத்திச் சண்டை போடுகிறோம்
நாய்களின் பூனைகளின்
பெயர் வைத்தழைத்து சிரித்துக் கொள்கிறோம்
ஒரு நொடி பிரிந்தாலும் உயிர்விடுவேனென்று 
பரஸ்பரம் பிதற்றிக் கொண்டு அலைகிறோம்

சலித்துத் தீர்ந்த நொடியில்
மறுப்பேதுமின்றி அமைதியாக எழுந்து 
தெளிந்த சிந்தையுடன் கைகுலுக்கி
ஒருவரையொருவர் திரும்பிப் பாராமல்
வேறு வேறு திசையில் நடக்கிறோம்

போகிற வழியில் இருவரும் 
சர்வ சாதாரணமாக
கசக்கி எரிகிறோம்
அந்த நெகிழிக் கோப்பைகளை,
நட்பென்ற பெயரில்
நாம் பழகித் திரியும்
சில காதல்களைப் போல !
-
அவனி அரவிந்தன்

Saturday, October 16, 2010

அவர்களுக்குத் தெரியாதது - கவிதை


உச்சிவெயிலின் போது 
கண்பட்டையில் முள்ளிறங்கியதைப் போல 
ஒரே வலி
இடது காதுக்கடியில்
கீழ்த்தாடைக்கும் கழுத்துப்பகுதிக்கும் சமீபமாக
ஓரிரு கீறல்கள் முளைத்திருந்தன

தொய்யும் மனதினூடே
பெருங்குன்றின் பாரமேறி
எச்சிலை விழுங்குவதற்கு
எப்போதும் சற்றுச் சிரமமாக இருக்கிறது

இரண்டாவது காதலியுடன்
ஆற்றங்கரையில் கரைந்த கணங்களையும்
மருக வைக்கும் ஈரமணலின்
நாசியை விட்டகலாத சுகந்தத்தையும்
அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்

என்னைச் சுற்றிலும்
உயரச் சுதந்திரம் 
சீராக மறுக்கப்பட்ட சிறுபுற்கள்
வட்டப் பாதையில் நட்ட
அலங்காரச் செடிகளில்
ஒழுங்கற்று வளர்ந்த பூவினங்கள்
அதன் மத்தியில் 
சிற்ப வேலைப்பாடுகளில்
சிறை கொண்டிருந்த பீடத்தில்
வெற்றுக் காகிதமும் வெறுங்கையுமாக
வீற்றிருக்கிறேன்

என் மேல்
சனக்கூட்டம் மிதமிஞ்சிய சாலையின்
குழப்பம் பூசிய முகங்கள் 
மொய்த்துப் பின் நழுவி விலகுகின்றன

காதைக் கொடுங்கள் 
அவர்களுக்குத் தெரியாததொன்றை
உங்களுக்கு மட்டும் 
ரகசியமாகச் சொல்கின்றேன்
நூற்றாண்டுக் கால மனிதர்களை
அவதானித்துக் கொண்டிருந்தாலும்
இந்த நடுச்சந்தியில் 
எனது இருப்பின் 
உணர முடியா வெறுமையைப் பதிவு செய்யவே
நான் சிலையாகச் சமைந்திருக்கிறேன்
-
அவனி அரவிந்தன்