Saturday, September 28, 2013

அற்றகுளத்து அறுநீர்ப்பறவை


ரண்டு கட்டெறும்புகள் சேர்ந்து என் கண்களை உருட்டிப் போவது போன்ற கனவுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பாவும் கூட வந்திருந்தார். தனியான பயணங்களில் நான் அப்பாவை எவ்வளவோ வெறுத்திருந்தாலும், அருகில் இருக்கையில் எனக்கு அவர் மேல் கோபமே வந்ததில்லை. யாருக்குமே அவரைப் பார்த்தால் கோபம் வராது. பிறவியிலேயே அப்படி ஒரு முகம் அவருக்கு.

  
    போகும் போது அப்பா சவலைப் பிள்ளையைப் போல என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். வாரம் ஒரு முறை தவறாது வந்து பார்ப்பதாக திரும்பத் திரும்பச் சொன்னார். விடைபெறும் போது வாடிக்கையாக அவர் சொல்கின்ற நிரந்தரப் பொய் அதுவென்று இருவருக்கும் தெரிந்தே இருந்தது.

     பாதுகாப்பு பரிசோதனைகள் முடித்து எல்லாரும் ஒன்றாக உள்ளே நுழைந்தோம். வானுயர்ந்த மதிற்சுவர்களுக்குள் சிறைப்பட்ட பெரும் பருந்தொன்று இறக்கையை விரித்திருப்பது போல ஒரு கட்டிடம் எங்களை பிரம்மாண்டமாக வரவேற்றது. பாதைகளில் நட்டிருந்த பூச்செடிகள் உற்சாகத்துடன் தங்களை கட்டிடத்தின் கண்ணாடிகளில் அழகுபார்த்து பெருமைப் பட்டுக்கொண்டன. அது அந்த கட்டிடம் முழுவதும் பூக்களால் நிரம்பியிருப்பதைப் போன்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தியது. 

     ட்ரெயினிங்கில் சேர்ந்தவர்களுக்கான ஹாஸ்டல் அறைகள் ஒதுக்கப்பட்டன. அன்று முழுக்க மாலை மாலையாக கதைகள், சரம் சரமான  அறிமுகங்கள். ட்ரெயினிங் பற்றி ஒவ்வொருக்கும் பல அனுமானங்கள், அபிமானங்கள். லட்சம் பேருக்கு மேல் பணியில் அமர்த்தியிருக்கும் இத்தனை பெரிய நிறுவனத்துக்கு, மாயச் சிறகின் ஆயிரக்கணக்கான நுண்மயிர்கள் கணக்கில் அத்தனை விமர்சனங்கள். 

    சுவையற்ற உரையாடல்களுக்கு மத்தியில் என் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் ஒரு நண்பன் அறிமுகமானான். அதிர்ந்து பேசாதவனாகவும் பழகுவதற்கு இனிமையானவனாகவும் இருந்தான். அவன் பெயர் செல்வா என்பதை என் அறைத் தோழியின் முலமாகத் தெரிந்து கொண்டேன். முதல் உரையாடல் ஒரு அகால மரணத்தைப் பற்றியதாக இருந்தது. மூன்று மாதத்திற்கு முன் முப்பத்தி நான்காம் ப்ளாக்கில் ஒரு பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்த தகவலை மிகவும் ரகசியமாகப் பகிர்ந்து கொண்டான். ஏற்கனவே ட்ரெயினிங்கில் இருக்கும் அவன் அதே அறையில் தங்கியிருப்பதை சலனமின்றி சாதாரணமாகவே என் அறைத் தோழியிடம் சொன்னான். இதற்கு முன்னும் ட்ரெயினிங்கில் தேராமல் போனவர்கள் பலர் ஹாஸ்டல் அறையிலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும் அவ்வளவு சிரமம் நிறைந்ததாக ட்ரெயினிங் இருக்கும் என்றும் வருத்தப்பட்டான். என் அறைத் தோழியான பெங்காலிப் பெண் மிகவும் கலவரப்பட்டாள். தனியறைப் பெண்களே அதிகம் தற்கொலைக்கு முயற்சிப்பதால் நிர்வாகம் இனி பெண்களுக்கெல்லாம் டபுள் ரூமும் பசங்களுக்கு மட்டும் ஸிங்கில் ரூமும் ஒதுக்குவதாக முடிவெடுத்ததையும் எடுத்துக் காட்டினாள். அவள் பேசிய தொனி இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக நானோ அவளோ தூக்கில் தொங்கப்போவது போன்று இருந்தது. நைலான் தூக்குக் கயிறு ஒன்று நினைவில் கோரமாக ஆடியபடி தொங்கியது.

    ட்ரெயினிங்கில் இருபத்தியெட்டு நாட்கள் கழிந்திருந்தன.
   
    நான் தூங்கிவிட்ட பின்னிரவில் பலமுறை அம்மா அலைபேசியில் கூப்பிட்டிருந்தாள். திரும்ப நான் அழைக்கவில்லை. வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு தோழியரின் பெற்றோர் வந்து போனார்கள். ஒவ்வொருவரும் போகும் போது எங்கள் எல்லாருக்கும் பொதுவாக இனிப்புகளையும் எனக்கு மட்டும் பெரும் ஏக்கத்தையும் கொடுத்துச் சென்றார்கள்.

    வார இறுதியில் காஃபி ஷாப்புக்கு சென்று அதனருகில் அளவாக வெட்டியிருந்த குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தேன். ஆரஞ்சு நிறத்தில் கொழுத்து வளர்ந்திருந்த மீன் கூட்டங்கள் எனது வருகையைப் பற்றிய செய்தியை ஒன்றுக்கொன்று துள்ளலோடு பகிர்ந்து கொண்டன. எனது காஃபியை எடுத்துக் கொண்டு வருகையில் செல்வாவும் அங்கிருப்பதைப் பார்த்தேன்.

    "என்னங்க குளத்தில் ரெண்டு மீன் குறையுதே. நீங்க எடுத்தீங்களா ?", என்று புறக்கணிக்க முடியாத சினேகமான சிறு புன்னகையுடன் அருகில் வந்து கேட்டான்.

    "என்னைப் பார்த்தா மீன் திருடுறவ மாதிரி இருக்குதா என்ன ?", இது பொய்க் கோபம் காட்டி நான்.

    "உங்க கண்களைப் பார்த்தா அப்படித் தான் தெரியுது"

    "ஒரு காஃபி வேணும்னா கேளுங்க வாங்கித் தரேன். அத விட்டுட்டு எதுக்கு இப்படி பொய் பேசுறீங்க, அழகா ?", என்றேன்.

    "அடடா அவசரப்பட்டு நான் ஆர்டர் பண்ணிட்டனே...", என்று கண்கள் சுருக்கி கவலைப் படுவதாக நடித்தபடி கேட்டான், "நீங்க ஊருக்குப் போகலை ? உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் போயாச்சு போல"

    அவன் காஃபி வந்தது. "அடுத்த வாரம் எக்ஸாம் இருக்குல்ல அதான் போகலை. அடிக்கடி இங்க வருவீங்களா ?", காஃபியில் சர்க்கரையை சத்தம் வராமல் கிண்டிக் கொண்டே என் கேள்வியை உதிர்த்தேன்.

    "ஆமாங்க. இந்த மீன் குஞ்சுகளை எண்ணுறதுக்காக அடிக்கடி வருவேன்"

    இப்படியாக நீண்ட உரையாடலில் அவனுடைய குடும்பத்தைப் பற்றியும் கொஞ்சம் பேசினான். பிறகு எதிர்பாத்தபடி என் குடும்பத்தைப் பற்றி கேட்டான். அப்பா வங்கி மேலாளர், அம்மா இல்லத்தரசி என்ற மட்டில் சொல்லிவைத்தேன்.

பேச்சை மாற்றும் விதமாக, "உங்களுக்கு ட்விட்டரில் அக்கவுண்ட் இருக்கா ?", என்றேன்.

    யோசனையுடன், உறிஞ்சிய காபியைக் குடித்துவிட்டு , "ஏங்க நேர்ல பேசுறத விட பேஸ்புக், ட்விட்டர் தான் பாதுகாப்புன்னு நினைக்கிறீங்களா ?", இப்படிக் கேட்டான்.

    "எனக்குத் தெரிஞ்ச பசங்க சிலர் நெட்ல கவிதை எழுதுவாங்க. நீங்க வேற லேசா தாடி வச்சிட்டு கார்ப்பரேட் கம்பர் மாதிரி இருக்கீங்களே அதான் ட்விட்டர்ல கவிதை எதுவும் எழுதுவீங்களோன்னு நினைச்சேன்"

    "அப்படிப் பார்த்தா என்னை விட பெரிய தாடி வச்சிட்டு ஆயிரம் கவிதைகளுக்கு மேல ட்விட்டருக்காக எழுதின ஒருத்தரை எனக்குத் தெரியும். உங்களுக்கு கூட கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். திருவள்ளுவர்னு பேரு", என்று சொல்லி கையில் எழுத்தாணி வைத்து எழுதுவதாக பாவனை செய்து காட்டினான்.

    எனக்கு சிரிப்பை அடக்க முடியலை. இருந்தாலும் கொஞ்சம் கட்டுப்படுத்திட்டு,"ஓ தெரியும் தெரியும். இவ்வளவு நாளா அவரு அவர் கைல வச்சிருந்தது எழுத்தாணின்னு நெனச்சிட்டு இருந்தேன். இப்போ தான் அது ட்ச் ஸ்க்ரீனுக்கு யூஸ் பண்ற ஸ்டைலஸ்னு புரியுது", என்றேன்.

    என் பதிலைக் கேட்டவுடன் குடித்த காபி புரையிலேற வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தான். பிறகு இருவரும் சேர்ந்து கிளம்பினோம். என் அறை வரை வந்து விட்டுவிட்டுப் போனான். பிரியும் நேரம் அலைபேசி எண்களைப் பகிர்ந்துகொண்டோம்.

    பேஸ்புக்கில் பழகிய முகமறியா நண்பர்களிடம் இப்போதெல்லாம் சரிவர பேசுவதில்லை. 'லீவுக்கு அங்க போவோம் இங்க போவோம். வாய்க்காலில் விளையாடுவோம். ஆத்துல ஓடுவோம்' என்று அடிக்கடி அவன் ஊரைப் பற்றியும் சொந்தங்களுடன் உறவாடும் விதங்களையும் கதை கதையாக சுவாரசியமாச் சொல்லுவான். கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கும். செல்வாவுடன் நேரம் போவதே தெரியாமல் பேசுவது வழக்கமானது. ஒரு வாரத்தில் திரும்ப வந்து பார்க்கிறேன் என்று சொன்ன அப்பா வரவேயில்லை. இந்த ஒரு வருடத்தில் அம்மாவிடம் நான் பேசியது இரண்டு முறை இருக்கலாம். அதுவும் சில சர்ட்டிபிகேட்டுகளை அனுப்பச் சொல்லி பேசினேன். பின் ஒருமுறை ஒரு இழப்புச் செய்தியைத் தெரிவித்தாள். எங்கள் இருவரையும் அது நியாயமான அளவில் பாதிக்கவில்லை. பேருக்கு இருந்த உறவொன்று உதிர்ந்தது.

    ட்ரெயினிங் நல்லபடியாக முடிந்தது. குறிப்பாக யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. நான் உட்பட. இரண்டு மாதம் பெஞ்சில் இருந்தபின் ஆளாளுக்கு ஒரு ப்ராஜக்டில் தூக்கிப் போட்டார்கள். இணையத்தில் மின்-வாழ்த்தட்டை வடிவமைத்து பரிசளிக்கும் ஒரு நிறுவனத்திற்கான வலைத்தளத்தை பராமரிக்கும் ப்ராஜக்ட் எனக்கு. துவக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு அந்த வலைத்தளத்தின் செயல்பாட்டைப் பற்றி ஏற்கனவே அதில் வேலை பார்ப்பவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.

    பொதுவாக மேனேஜர்கள் தங்களை அறிவாளி என்று காட்டிக்கொள்ள பிரயத்தனப்படுவார்கள். ஆனால் எனக்கு வாய்த்தது உண்மையிலேயே விசயஞானம் உள்ளவர். அவருடைய ஆளுமை அசரவைக்கும். போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி என்பதை எந்த இடத்திலும் காட்டிக்கொள்ள மாட்டார்.  அவர் மீது எனக்கு பெரிய ஈர்ப்பும் ஆழ்ந்த மரியாதையும் ஏற்பட்டது.

    மூன்று மாதங்களில் செல்வாவுக்கு வேறு ப்ராஜக்ட் எதுவும் கிடைக்காததால் என் மேலாளரிடம் கேட்டு அவனையும் என் ப்ராஜக்டுக்கு எடுக்க வைத்தேன். பணி வரிசையில் நான் முடித்த வேலையை சரிபார்த்து உறுதி செய்வது அவன் விதி. என் வேலையைப் பற்றி சொல்ல வேண்டும். வித்தியாசமானது தான். மின்வாழ்த்தட்டைகளில் அவரவர்களுக்கு பிடித்த வாழ்த்து செய்தியை இணையத்திலேயே எழுதும் போது அதில் ஆபாச வார்த்தைகள் அடித்தால் நீக்குவது என் முதல் பணி. பாதாள சாக்கடைப் பின்னலைப் போல ஒரு நீண்ட பட்டியலை எனக்கு கொடுத்தார்கள். முழுவதும் காது கூசும் வார்த்தைகள். அவற்றை எல்லாம் மின்வாழ்த்தட்டையில் அடித்துப் பார்த்து தானாக நீக்கப்படுகிறதா என்று சரிபார்த்து அனுப்புவேன். செல்வா எல்லா வாழ்த்துக் குறிப்புகளையும் வாசித்து எந்த அசிங்கமும் இல்லை என்று உறுதிபடுத்த வேண்டும். அவ்வப்போது ஏதாவது வார்த்தைகளை தவறவிட்டாலும் வேண்டுமென்றே அவனைத் திட்டுவதற்காக அப்படிச் செய்கிறேன் என்று என்னை எப்போதும் கேலி செய்வான். ஏதோ இத்தனை நாள் இல்லாத சுவாரசியம் ஈரக்காற்றாக மனதில் சேர்ந்து கொண்டது.

    ஒருமுறை ப்ராஜக்ட் பார்ட்டிக்காக பக்கத்தில் ஒரு மலை வாசஸ்தலத்திற்கு பயணப்பட்டோம். புறப்படும் போது நல்ல மழை. வருவதைப் பார்ப்பதாக செல்வாவுக்கும், கடந்ததை கவனிப்பதாக எனக்கும் எதிர் எதிர் ஜன்னலோர இருக்கைகள். கூச்சலுக்கும் கும்மாளத்துக்கும் கூடுதல் ஊட்டமாக குளிர்ந்த காற்று அடித்தது. அலறும் இசைக்கேற்ப, எதன் மீதோ வெறி கொண்டு ஆடிக் கொண்டிருந்தார்கள் எல்லோரும். என் மேனேஜர் கூட சீட்டில் அமர்ந்தபடியே தாளத்துக்கேற்ப கையை ஆட்டிக் கொண்டும் விசில் அடித்துக் கொண்டும் வந்தார். அவரைப் பார்க்கையில் எனக்குச் சிரிப்பாக வந்தது. ஒரு விதத்தில் பாவமாகவும் இருந்தது. வெளியில் வானம் தெளிந்து மழை ஓய்ந்திருந்தது. செல்வா வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தான்.

"என்ன செல்வா சைலன்ட்டா இருக்க ? ஓடிப்போன லவ்வர் கூட ஏற்கனவே போன டூர் ஞாபகம் வந்திருச்சா ?"

    என் கேள்விக்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. எனக்கு மேற்கொண்டு என்ன கேட்பதென்று புரியவில்லை. பிறகு அவனே ஜன்னலுக்கு வெளியியே கையை நீட்டி பச்சை மலைமுகடுகளில் படர்ந்து நின்ற மேகக் கூட்டத்தை காட்டி, "அங்க பார்த்தியா ? மேகம் எப்படி நிக்குது. சின்ன வயசுல நான் ஸ்கூல் விட்டு வீட்டுல தனியா இருப்பேன். மில்லு வேல விட்டு நைட்டு தான் அம்மா வருவாங்க. அப்போ அவங்க மேல இப்படி தான் பஞ்சு பஞ்சா ஒட்டியிருக்கும். சேலையெல்லாம் தூசி வாடை அடிக்கும். அம்மா தூக்கும் போது எனக்கு தும்மலா வரும்", என்றான்.

    இரவு விடுதியில் வெளியில் போடப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருந்தோம். பக்கத்தில் அடங்காத குளிரால் பட்டுப்போக இருக்கின்ற ஒரு மரத்தில் மிச்சமிருக்கும் ஒற்றை பச்சை இலை இசைக்கு தலையசைப்பதைப் போல தனித்து ஆடிக்கொண்டிருந்தது. அங்கிருந்து பார்க்கையில் அடிவாரம் தெரிந்தது. மலையுச்சியில் இருந்து பார்க்கையில் மின்விளக்குகள் படர்ந்த அடிவாரம், விண்மீன்கள் விரித்த கருவானத்தின் குழந்தையைப் போலத் தோன்றுகிறது. அவனுக்கு எனக்கும் இடையில்  பேரிரைச்சலின் ஒற்றனாக மௌனம் நிலையில்லாமல் அலைந்து கொண்டிருந்தது. பயணத்தின் போது பேசியது மன அலைச்சலை கொடுத்துக் கொண்டிருந்தது எனக்கு. சிலுவைகள் என்னிடம் நிறைய இருந்தன. அவைகளை பரிசாகக் கொடுக்கத் தான் ஆளில்லை.

    "என்னைப் பத்தி என்ன நினைக்கிற செல்வா ? மனசில இருக்கிறத  மறைக்காம சொல்லுவியா ?", அமைதியை சலனப்படுத்துவதாக என் கேள்வி இருந்தது.

    என் கண்களில் மீது சில கண நேர குழப்பம் தோய்ந்த பார்வையைப் பதித்து விட்டு, "உண்மையைச் சொல்லணும்னா இப்போ என் எதிரில் இருக்கிற அஸ்மிதாவை ஒரு வருஷமா என்னோட வேலை பார்க்கிற ஒரு நல்ல ப்ரெண்டா தெரியும். வேற எதையும் நீ என்கிட்ட ஷேர் பண்ணதும் இல்ல. உன் கண்கள் எதையோ என்கிட்ட சொல்லத் துடிக்கிறதை நிறைய தடவை கவனிச்சிருக்கேன். இப்போ சொல்லுவியா ?"

    "சொல்றேன் செல்வா. யாருகிட்டயும் சொன்னதில்லை. இப்போ கூட என்னைப் பத்தி எல்லாத்தையும் நான் சொல்லப் போறதில்லை. என்னன்னு தெரியல. ஒண்ணு ரெண்டு விசயங்களயாவது பேசணும்னு எனக்கு இப்போ படபடக்குது. சின்ன வயசுல இருந்தே சொந்தகாரங்க, தெரிஞ்சவங்கன்னு யாரும் அவ்வளவா எங்க வீட்டுக்கு வந்ததில்லை. ஏன்னு எனக்கும் ரொம்ப நாளா தெரியாது.", சொல்லி நிறுத்தியதும் இடையில் ஒரு சௌகரியமற்ற மௌனம் ஊறி வழிந்து கொண்டிருந்தது. உருத்தலாக எதுவும் பேசாமல் நான் தொடர்வதற்காக காத்துக்கொண்டிருந்தான்.

      "அப்போ ஃபோர்த் ஸ்டாண்டர்டு எக்ஸாம் முடிஞ்சு ஹாஸ்டல்ல இருந்து லீவுல வீட்டுக்குச் போயிருந்தேன். ரொம்ப நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால ஜன்னல் கண்ணாடி வழியா எட்டிப் பார்த்தப்போ அம்மா பச்சை கலர் நைலான் கயித்துல சுருக்கு மாட்டிக்கிட்டிருக்கிறது தெளிவில்லாம கலங்கலாத் தெரிஞ்சது. கழுத்தில கயித்தைக் கட்டித் தொங்குற வரை நான் அமைதியா பார்த்துக்கிட்டு மட்டுமே நின்னேன். ஸ்டூலைத் தட்டிவிட்டு கைகால்களை உதறி கண்கள் பிதுங்க துடிச்ச பெறகு தான் அலறணும்னு எனக்கு உறைச்சது. தடதடன்னு யாரோ கதவை உடைச்சு கயித்த வெட்டி அம்மாவை இறக்கினாங்க. மரக்கதவை உடைச்ச சத்தம் என் இதயத்துடிப்போட சேர்ந்து அதிர்ந்து ஒலிச்சது. உயிர் போகலை. கழுத்தில கயிறு இறுக்கிய தடத்தை தடவியபடியே இரவு எனக்கு சோறூட்டினாள். எதுவுமே புரியாம எனக்கு அழுகை வந்துட்டே இருந்தது. ரெண்டு நாள் கழிச்சு வந்த அப்பா ஒரு பெரிய கரடி பொம்மையும், நிறைய சாக்லேட்ஸ் வாங்கிக் குடுத்து லீவு முடியறத்துக்கு முன்னால என்னை ஸ்கூல் ஹாஸ்டலில் விட்டுப் போனது முதல் பிரிவின் முத்திரை. அது இன்னைக்கு வரை என்னை ஊர் ஊரா விடாம தொடர்ந்துகிட்டு இருக்கு. ரொம்ப நாளா அந்த சம்பவத்திற்கான காரணம் எனக்குத் தெரியாது. எதைக் கேட்டாலும் அம்மா அர்த்தமில்லாத சிரிப்பை உதட்டில ஒட்டிக்குவா, பதிலுக்கு சிரிக்கத் தோணாதபடிக்கு."

    "அம்மா அப்பாவுடன் அடிக்கடி எதுக்காகவோ சண்டை போடுவா. சத்தம் போட்டுத் திட்டுறதும் உண்டு. ஒவ்வொரு வாக்குவாதம் முட்டி முடியும் போது அம்மா மொட்டைமாடிக்குப் போய் கிரில் கேட்டை அடைச்சுக்குவா. ஒரு நாள் இரண்டு நாள் கழிச்சு மதியம் ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வருவேன். பெரும்பாலும் அந்த சமயத்துல எங்க வீட்டுக்கு பக்கத்தில உள்ள சீமைக்கருவேல மரப்புதருல இருந்து ஒளிஞ்சிட்டு ஒரு குயில் அனாதையா கூவிக்கிட்டிருக்கும். இரும்புக் கதவைத் திறந்து, வென்டிலேட்டரோட விலகிய ஸ்க்ரீன் வழியாப் பார்த்தா உள்ள அம்மா அமைதியாக அழுதுக்கிட்டிருப்பா", நான் செல்வாவின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு பேசிக்கொண்டிருந்தேன். அவனும் இப்போ என்னைப் பார்க்காமல் டேபிள் மேலிருந்த ஒரு காய்ந்த சருகை கையில் தள்ளிவிட்டுக்கொண்டிருந்தான், கவனத்தை என் பேச்சில் செலுத்தியபடி.

    "நான், அப்பா, அம்மா மூணு பேரும் மாறுபட்ட கிரகங்கள் போல தான் செல்வா. ஒரு நேர் கோட்டில் சேர்றது பல யுகங்களுக்கு ஒருதடவை நடக்கிறது. இதில் அப்பா இனிமேல் சேர மாட்டார்னு தோணுது. அவர் திரும்பி வராதபடிக்கு ரொம்ப தூரம் போயிட்டார்னு கேள்விப்பட்டேன். அதுல எனக்கு பெரிய வருத்தமெல்லாம் இல்லை. சில சமயம் அம்மாவைப் பத்தி நினைச்சாலே ரத்தம் அடர்த்தியாகி இதயம் அடைக்கிறது போல இருக்கும். அப்பாவுக்கு அவள் வெயிலுக்கு மட்டும் தங்கும் ஹில் ஸ்டேஷன் போல அவ்வளவு முக்கியத்துவம் ஒண்ணும் இல்லாத 'துணைவி'ங்கறது எனக்கு புரிய ரொம்ப நாள் ஆனது செல்வா. அப்பா பிரிஞ்ச பிறகு ஒரு வருஷமா நான் ஊருக்குப் போய் அவளைப் பார்க்கவே இல்ல. தனியா இருக்கக் கத்துக்கணும். என்னை நம்பி இருக்காதேனு அடிக்கடி அம்மா தான் சொல்லுவா. இப்போ இங்க வேலைக்கு வந்ததும் நிறைய நினைவுகளை மறந்து கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருந்தேன். ஆனா இப்பவும் அம்மாவோட கண்களை என்னால மறக்கவே முடியாது"

    முடங்கிக் கிடந்த சுவடுகளைத் தாங்கிய, பார்வையிலேயே பாரத்தை  பரிமாற்றும் அவளுடைய கண்கள் என் நினைவுக் கலங்களில் நிழலாடியது. விடிய இன்னும் சில நாழிகைகளே இருந்தன. நீண்டு வளர்ந்த நகத்தினடியில் ஊறும் நிழல் போல இரவின் கடைசி இருள் எங்களைச் சூழ்ந்திருந்தது. பேச்சற்று வெறும் தலையசைப்பில் பிரிந்து அவரவர் அறைக்குத் திரும்பினோம்.

    மறுநாள் பகல் பெரிய மனச் சிக்கல்களைக் கொண்டு வந்தது. செல்வா இனிமேல் என்னை முன்னைப் போல மதிப்பானா ? நேரில் மரியாதையாகப் பேசிக்கொண்டு மற்றவர்களிடம் அசிங்கமாகப் பேசினால் ? என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. விரும்பத்தகாத சில ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அத்தனை உடன்பாடு கிடையாது. ஏன் அப்படிச் செய்தேன் ? சரி முடிந்தது கிடக்கட்டும் இனி செய்வது என்ன ? மனது ஆலைச் சாயம் கலந்த ஆற்று நீர் போல கலங்கியே நகர்ந்தது.

    வேலைக்குத் திரும்பியிருந்தோம். மறுபடி அவனிடம் பேசுவதற்கு கூச்சமாக இருந்தது. முதல் வேலையாக நம்பரை மாற்றிவிட்டேன். ஆனால் செல்வாவை முற்றிலும் ஒதுக்கவும் முடியவில்லை. முடிந்த அளவுக்கு தவிர்த்தாலும் நேரில் பார்த்தால் தவறாமல் பேசிவிடுகிறேன். அவனோ கூடுதல் நெருக்கத்துடன் பழகினான். வேண்டுமென்றே சோர்வாக என்னைக் காட்டிக் கொண்டாலும் அவன் என்னை சந்தோசப்படுத்துவதற்காக செய்யக்கூடிய செயல்கள் என்னை பரிதாபத்தை யாசிப்பவளைப் போன்ற நிலைக்கு என் மனது எடுத்துச் சென்றது. அது போன்ற தருணங்களில் வெறுக்கத்தக்க வாக்குவாதங்களை நான் துவங்க வேறு வழியில்லாமல் அவன் தொடர்வான். இறுதியில் அவன் மன்னிப்பை இரந்து நிற்கும் வரை வெறுப்புகள் தொடரும். மனஸ்தாபங்களுக்கு எப்போதும் விதையை இடுவது நானாக இருந்தாலும் ஒருமுறை கூட நானாக இது வரை மன்னிப்பு கேட்டதில்லை.

    வெடித்த இடத்தில் வெட்டுக் காயமாக என் மேலாளர் என்னிடம் அதிக வேலை வாங்கினார். பட்டியலில் இல்லாத இன்னும் அதிகமான பாலியல் ரீதியான வசைச் சொற்களை அவரே என்னிடம் சொல்லி அவர் முன்னே சரி பார்க்கச் சொல்லுவார். அவர் மீதான என் பிம்பம் களங்கலானது. ஸ்டேடஸ் கேட்கிறேன் என்று அடிக்கடி போனில் அழைத்து தேவையில்லாமல் பேசிக் கொண்டிருந்தார். 

    காரணம் புரியாமல், செல்வாவின் மேல் எனக்கு ஒரு அப்சசெசிவ் வெறுப்பு ஏற்பட்டது. உரையாடலின் போது உண்மையில் அவன் அன்பு சிலிர்க்க வைத்தாலும் தற்சமயம் சுவாரசியம் இல்லாதது போல நடிக்கக் கற்றுக்கொண்டேன். ப்ராஜக்டில் இருந்து ரிலீசாகி வெளியூரில் இரண்டு மாதம் ட்ரெயினிங் போட்டிருந்தார்கள். அதற்கான டிக்கெட் எடுப்பதற்காக பஸ் ஸ்டாண்டு போயிருந்தேன். டிக்கெட் கவுண்ட்டரில் பெரிய வரிசை. அதில் இன்னும் நீட்டும் வகையில் கடைசி ஆளாக சேர்ந்து கொண்டேன். கவுண்ட்டரை நெருங்கும் வேளையில் என் மேலாளர் தொடர்ந்து என் அலைபேசிக்கு அழைத்துக் கொண்டே இருந்தார். சலிப்போடு கூட்டத்தில் இருந்து வெளியே வந்து அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ப்ராஜக்ட்டில் ஏதோ வேலை மிச்சம் இருப்பதாகவும் அதை முடித்துவிட்டே நான் வெளியூர் போக வேண்டும் என்றும் மிரட்டும் தொனியில் கேட்டுக் கொண்டிருந்தார். வரிசை நகர்ந்து கொண்டே இருந்தது. பதிலே சொல்லாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு வரிசைக்குச் சென்றேன். கவுண்ட்டரிலும் பின்வரிசையில் தொடர்பவர்களிடமும் கூர்மையான சாபங்களைப் பெற்றபடியே டிக்கெட்டையும் வாங்கினேன்.

    பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறினேன். செல்வா நின்றிருந்தான். சமீபமாக என் நடவடிக்கைகளில் நிகழ்ந்த மாற்றங்களை செல்வாவும் கணித்திருக்க வேண்டும். நான் வெளியூர் போகிறேன் என்று அவனிடம் சொல்லவில்லை. வேறு யார் சொல்லியிருப்பார்கள் என்று யோசிக்கையில் அவனும் டிக்கெட் எடுப்பதற்காகத் தான் வந்ததாகச் சொன்னான்.

    சந்திப்பை விரும்பாதவளாக, "லேட்டாச்சு நான் கிளம்புறேன் செல்வா", என்று நழுவினேன்.

    "நீ எங்க போற எதுக்கு போறன்னு தான் சொல்லமாட்ட. நான் எதுக்குப் போறேன்னு கேட்கலாமே ?", எனக் கொக்கி போட்டான்.

    "அது எனக்கெதுக்கு. உனக்கு ஆயிரம் வேலையிருக்கும்"

    "அதுல ஒரு வேலையை மட்டும் இப்போ சொல்றேன். ஊர்ல என் அக்காவுக்கு ஆறு வருசமா குழந்தையில்லாம இருந்தாங்க. அவங்களுக்கு இந்த வாரம் குழந்தை பிறக்கப் போவதா சொல்லிருக்காங்க. அதான் போய் பார்க்கலாம்னு இருக்கேன்", உணர்ச்சியில் வார்த்தைகள் துள்ளலாக வெளிவந்தது அவனுக்கு.

    "ஓ ! அப்படியா. சரி அதுக்கு நான் இப்ப என்ன பண்றது ?"

    "ஏன் இப்படி பேசுற. நீன் முன்ன மாதிரி என்கிட்ட பேசுறது இல்லை. இ-க்ரீட்டிங்ல தானே வேலை பார்க்கிற, ஒரு சின்ன வாழ்த்து கூட சொல்ல மாட்டியா ? எவ்வளவு சந்தோசத்தோட இந்த விசயத்தை முதலில் உன்னிடம் தான் சொல்லணும்னு நினைச்சிருந்தேன். உனக்கு ஃப்ரெண்ட்ஸ் அதிகமாகிட்டாங்க. அதான் என்னை மதிக்க மாட்ற. இதே உனக்கு ஒரு சோகம்னாலோ சந்தோசம்னாலோ அதை நீ எவ்வளவு பெரிய தகவலா சொன்னாலும் நானும் வருத்தப்பட்டு, சந்தோசப்பட்டு மனசு நிறைஞ்சு இருந்திருக்கேன்", பெரிய ஏமாற்றத்தை வார்த்தைகளில் வாங்கியவனாக அவன் சலிப்புடம் பேசினான்.

    "உங்க அக்காவுக்கு குழந்தை பொறந்தா என்கிட்ட எதுக்கு சொல்ற. நானா அதுக்கு காரணம் ? முதல்ல உன் மாமனுக்குத் தான் நீ பேசிருக்கணும். சும்மா சும்மா வந்து ஒரேடியா உன் குடும்ப புராணம் படிக்காத என்கிட்ட. எனக்கு ஏற்கனவே ஆயிரம் தலைவலி..."

    "என்ன அர்த்தத்துல பேசுற நீ ? பேசப் பிடிக்கலைனா நேரடியா சொல்லு அத விட்டுட்டு ஏன் என் குடும்பத்தை பத்தி இப்படி அனாவசியமா பேசுற"

    "தப்பு தான் செல்வா குடும்பத்தைப் பத்தி நான் பேசுறது தப்பு தான். ஆனா நல்ல குடும்பத்தில் பிறக்காதது என் தப்பில்லை. ஒத்துக்கிறேன் எனக்கு நாகரிகம் இல்லை தான். எனக்கு க்ரீட்டிங்ல கூட கெட்டவார்த்தை மட்டும் தானே தெரியும்."

    பேச்சில் இருவருக்கும் நிதானம் இழந்தது. எனக்கு அழுகை . உடனே அந்த இடத்தை இடத்தை விட்டு கிளம்பினேன்.

    'அஸ்மிதா  சாரி...!!!' என்று ஓடிக்கொண்டே வந்த, செல்வாவின் குரலும் பஸ்ஸின் இஞ்சின் இசைக்கு ஏற்ற அலைவரிசையில் அமைந்திருந்தது. நான் திரும்பவேயில்லை.

     அடுத்த நாள் ஆறுமணியளவில் புதிய அலுவலகத்திற்கு மக்கள் அலையலையாக தம் கூடாரங்களில் இருந்து கிளம்பி வந்து கொண்டிருந்தனர், அலையில் கலந்த ஒரு மழைத்துளியாக நானும். ட்ரெயினிங்காக வெளியூர் சென்ற நான் அங்கேயே ஒரு ப்ராஜக்ட் கேட்டு மாற்றிக் கொண்டேன். புதிய மொபைல் நம்பரைத் தேடி செல்வா பேச முயற்சிக்கும் போதெல்லாம் எனக்கு சொல்ல முடியாத வருத்தத்தை கொண்டுவந்தான். எத்தனை முயற்சிக்கும் நான் பதில் பேசாதது அவனுக்கும் வலித்திருக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தது. செல்வாவை ஏன் அப்படி அலையவிட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. அவன் மேல் பொறாமையா இல்லை சேகரித்த மனவெறுப்பின் சாகரமா ? எதுவாக இருந்தாலும் இந்த உள்ளக்கசப்பை மீறி மீண்டும் அவனிடம் பேசவோ சிரிக்கவோ என் மனம் ஒப்பவில்லை. இரண்டு மாதம் தான் அதற்கு மேல் அவனும் என்னை தொடர்புகொள்ளவில்லை.

    வேலை அதிகம் இல்லாத ஒரு மழைநாளில், கண்ணாடி சாளரத்தின் வழியே ஈரத்தலையுடன் தவறு செய்த குழந்தையைப் போல குனிந்து நிற்கும் பூச்செடிகளையும் அருகில் தேங்கி நிற்கும் நீரில் அவை தம் முகங்களை ரகசியமாகப் பார்த்துக் கொள்வதையும் கவனித்தேன். மழை எத்தனை முறை தரையில் விழுகிறது ? ஓரிரு நிமிடங்கள் தான் மழையின் வித்துகள் பூமியைத் தொடுகிறது. ஈரம் பரவிய பின்னர் விழும் துளிகள் எல்லாம் மழை தன்னையே தீண்டிக் கொள்ளும் சுயஇன்பம் தான் போல. பேரின்பம் என்பது மனதேற்றத்துக்காக சொல்லப்படுகிற பச்சைப் பொய் தானா ? ஒட்டிக் கிடந்த தோலை பிசிறு பிசிறாக உதிர்த்து ஊரும் அரவத்தைப் போல சில நினைவுகளை விட்டு வெகுதூரம் விலகிக் கொண்டிருந்தேன்.

    வானம் வழக்கத்திற்கு அதிகமாக அழுததால் அலுவலகத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறையிட்டிருந்தார்கள். அது வரை ஓய்வின்றி வேலையைத் தேதித்  தேடி செய்து கொண்டிருந்தேன். அலுவலகத்திலேயே பெரும்பாலான நேரத்தை செலவுசெய்வதாக என் தினசரி நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டிருந்தேன். முன்னறிவிப்பின்றி வாய்த்த இந்த அசாதரணமான  தனிமையில் சிந்தனை சிதறிக் குழம்பியதில், களைத்து படுக்கையில் விழுந்து அண்ணாந்து பார்க்கும் போது மின்விசிறியின் உள்ளிருந்து சிவப்பாக ஏதோ திரவம் வழிவதைப் போல பிரமை ஏற்பட்டது. கூடவே காயமுற்ற சிறுபறவை ஒன்று கத்துவதைப் போன்ற ஒலி வந்துகொண்டேயிருந்தது.

    புயல் வெள்ளம் பல மடைகளை உடைத்து எறிந்து கொண்டிருந்த வேளையில் மன உளைச்சலின் உச்சியில் ஒரு முடிவெடுத்தேன். இரண்டு நாட்கள் தேவையான துணிமணிகளை எடுத்துக் கொண்டு ரயில் ஏறினேன். சிகை கலைக்கும் சன்னல் வழியில் முடிந்தவரை தொலைவாக பார்வையை செலுத்தினேன். கரை நிறைத்து சிவந்து ஓடும் ஆற்றின் மேல் கொடி போல படர்ந்திருந்தது பாலம். மீன் பிடிப்பவன் கையில் இருந்து நழுவி கடலில் மறையும் வைர மோதிரத்தைப் போல ஒவ்வொரு கால கட்டத்திலும் உறவுகளை நான் தொலைத்துக் கொண்டே வந்திருக்கிறேன். மொத்தமாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவுக்கு நானாக போன் பண்ணி வீட்டுக்கு வருவதையும், அவள் இனிமேல் என்னோடு மட்டுமே எப்போதும் தங்கியிருக்க வேண்டும் என்றும் பெருகும் கண்ணீர் மொபைலில் வழிய தெரிவித்தேன். பாலத்தின் மேல் விரையும் ரயிலுக்கடியில் நூற்றாண்டுக்கால மனித மனத்தின் மர்மங்கள் சுழல, சர்ப்பமாக சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது நதி.

- அவனி அரவிந்தன்.

No comments:

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.