Saturday, September 28, 2013

மந்திரக்காரனின் புறா

வண்ணப் படிமங்கள் படர்ந்த 
மின் திரையின் 
அம்புக்குறித் தீண்டலில்
கலங்கிக் கலைகிறதென் 
கனவுகளின் கன்னித்தன்மை

விரல்களைக் குதறியெடுத்து
விரைந்தோடும் எலிகளை
விரட்டிப் பிடித்து
பொறிக்குள் அடக்குமுன்
தட்டச்சிய எழுத்துகள் 
வார்த்தைச் சட்டங்களில் இருந்து
தாவிக் குதித்து மறைகின்றன

சொல்நஞ்சுகள் துருத்தியபடி கிடக்கும்
மென்பஞ்சு இருக்கையில்
புரையோடிக் கிடக்கின்றன
காயங்கள் புசித்த நுண்ணுயிரிகள்

குளிர் ஊடுருவும் தேகத்தில்
தூண்டிலின் உறுத்தல்களோடே
ஆழத்தில் நீந்திக் கொண்டிருக்கிறேன்
உறவுகளின் உடைந்த மிச்சங்களுக்கிடையில் 

பின்னிரவுத் தேநீரின்
பித்த மயக்கத்தில்
ஒரு மந்திரக்காரனின் புறாவாக
இறகுகளின் படபடப்பில்
எனது சுதந்திரத்தை 
உதிர்த்துக் கொண்டிருக்கிறேன்
அகழ்ந்தெடுத்த தரவுகளின் குவியலில்
அவை குப்பையாய் விழுந்து மரிக்கின்றன !

- அவனி அரவிந்தன்

No comments:

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.