Sunday, June 14, 2009

நீரும் நெருப்பும்

"முல்லைத் தெருவுல தண்ணியடிச்சிட்டு பத்து நிமிசத்துல வந்துடறேன் கொஞ்சம் புள்ளைய பாத்துக்கோங்க"

"என்ன காலங்காத்தாலயேவா ? ம்ம் நாங்க அடிச்சா மட்டும் தப்பு. உங்களுக்கு ஒரு ஞாயம் ஊருக்கு ஒரு ஞாயம். ம்ம்... சரி போய்ட்டுவா பாத்துக்கிட்டு மட்டும் தான் இருப்பேன். தூங்கற வரை பரவால்ல, எந்திரிச்சு அழுவ ஆரம்பிச்சதுன்னா நம்மளால முடியாதும்மா"

"சந்தடி சாக்குல அப்புடியே பெருசா ஞாயம் பேசிடுவீங்களே. தண்ணிக்கும் சீரெட்டுக்கும் மட்டும் எம்புட்டு செலவாகுது தெரியுமா ? ஆனா பச்சை புள்ளைக்கு மாத்து துணி எடுக்க கூட கணக்கு பாப்பீங்க"

"சரி சரி ரொம்ப பேசாத, போ போ போய் தண்ணியெடுத்துட்டு வா.."

இப்பிடிதான் பொழுது விடிஞ்சதுல இருந்து அடையற வரை எதுக்காச்சும் பொலம்பிக்கெடக்குறதே பொழப்பாப் போச்சு. இன்னிக்கெல்லாம் சொல்லி மாளாது.

"இந்தா பெரியவனே, அம்மா தண்ணி பிடிச்சு வச்சிருக்கேன். எல்லா கொடத்தையும் தட்டு வச்சி மூடி வய்யி", பெரியவன் பேரு முத்து. முத்துச்சாமின்னு அவங்க தாத்தா பேரு. அவரு சாடை தான். ஒண்ணாப்பு தான் படிக்கிறான்.

"அம்மா பாப்பா அழுவுது. நான் எடுத்து ரொட்டி ஊட்டவா ?", பாப்பா பொறந்து மூணு மாசந்தான் ஆவுது. பொழுதன்னிக்கும் அழுவுறதால என்னை மாதிரின்னு அவரு மட்டும் சொல்லுவாரு. பேரு மாரீஸ்வரி.

"வேணாண்டா, ஒனக்கு தூக்கத் தெரியாது. பாப்பாக்கு இன்னும் கழுத்து கூட நிக்கல. இன்னும் கொஞ்ச நாள் ஆவட்டும் அப்புறம் நீதான மாரிக்கு எல்லா வெளாட்டும் சொல்லித் தர போற"

"அடியே சீராட்டுனது போதும்டீ... சோத்தப் போடு. சோலிக்கு நேரமாச்சுல", பூகம்பமே வந்தாலும் இவருக்கு சாப்பாடு வச்சிட்டு தான் நான் இந்த மண்ணோட மடிஞ்சு போவணும். இல்லாட்டி அப்பாருல ஆரம்பிச்ச்சு அண்ணன், தம்பி, ஒண்ணு விட்ட சித்தப்பான்னு எல்லாரையும் வீதிக்கு இழுத்து வம்பு பண்ணிட்டு தான் விடுவாரு.

"அம்மா டிவில அந்த அக்கா எல்லாம் ஏன் இம்புட்டு கம்மியா சொக்கா போட்டுருக்காங்க ?"

"வாயிலயே போட போறேன் பாரு"

"இந்தாங்க பொழுதன்னிக்கும் இந்த கருமத்த தான் பார்க்கணுமா ? வளர்ற புள்ளை கெட்டு போயிட போறான். இப்பல்லாம் சும்மாவே எல்லாம் பிஞ்சுலயே பழுத்துருதுங்க. இதுல இது வேறயா ?"

"சரிதான் சும்மா பொலம்பாதடீ. இந்த தொரை வாய் பேசுறதுக்கு நாந்தான் காரணமா ? நீ எந்த எழவு சீரியல பாத்து தொலைக்கிறியோ ?
ஆனந்தி அக்கா கிட்ட சண்டை போட்டதுக்காக விக்ரம் மாமாவ கொன்னுட்டாங்களே நீயும் அது போல சண்டை போட்டா அப்பாவ கொன்னுடுவியான்னு கேட்டான்ல. புள்ளைங்கள வீட்டுல இருக்கிறவ தான் சொல்லி வளக்கனும். சும்மா இப்பவும் ராசா தங்கம்னு கொஞ்சிட்டு இருந்தா இப்புடி கேக்காம வேற எப்புடி கேப்பான் ?".

நான் அவஸ்தையோட மாலையிட்ட இந்த மவராசனுக்கு, எத எடுத்தாலும் என்னைய சாடலைன்னா தூக்கம் வராது. அவரு எது செஞ்சாலும் அதுக்கு ஒரு காரணம், ஒரு விளக்கம். நான் செஞ்சா மட்டும் அத்தாகுத்தம் ஆகிப்போகும். ஒரு சொல்லு சொல்ல நீதியிருக்கா இந்த வீட்டுல. என்னத்த சொல்ல நம்ம பொறப்பு அப்பிடி.

"அம்மா, கலர் கோழி விக்குதுமா தெருவுல வாங்குவோமா ?"

"உங்களுக்கு பண்டுவம் பாக்கவே இங்கன வழியக் காணோம். கோழி ஒண்ணுதான் கொறச்சல்"

"போம்மா, எத்தன கலரு தெரியுமா ? நாலு மட்டும் வாங்குவோம். பால்ரோஸ் கலரு பாப்பா, சேப்பு கலரு நானு, மஞ்சக் கலரு நீ, கருப்புக் கலரு அப்பா. அதுக்கு மிச்ச சோறு இல்ல பழைய கஞ்சி புழிஞ்சு வச்சா கூட போதுமாம். முட்டையெல்லாம் போடும்ல, அத வித்து நாம் பாப்பாக்கு புது சொக்கா வாங்கலாம்மா"

இப்பிடியெல்லாம் இவன் பேசும் போது. இந்த வீட்டப்புடிச்ச தரித்திரமெல்லாம் வெலகி வெளிச்சம் வாராப்புல இருக்கு. இப்பவே வளர்ந்து நிக்க மாட்டானான்னு தோணுது. இவன் தலயெடுத்தா தான் சுபிட்சமாகும். ஆனா இப்போ வெளிய விக்கிற கோழி முட்டை போடாதே. அரிசி பருப்பெல்லாம் நெறஞ்ச பாக்கியமா இருக்கு. எங்கிட்டு கலர் கோழி வாங்குறது. ஒண்ணு மாத்தி ஒண்ணு சொல்லி எப்பவும் போல சமாளிச்சிட்டேன். ரொம்ப நேரமா மாரி அழுதுட்டு இருக்கா. கேப்பைய கரைச்சு ஊட்டணும்.

வெளில வெள்ளி முளைச்சிடுச்சு. இந்த முத்து எங்கன போய்த் தொலைஞ்சான். தாத்தா கடைல தீப்பெட்டி வாங்கியாரச் சொல்லி எம்புட்டு நேரமாச்சு. சன்னல் வழியா எட்டிப் பார்த்தேன். அதென்ன வேப்ப மரத்துக்கு பின்னாடி நெழல் தெரியுது. கங்கு எரியிறாப்புல வேற இருக்கே. யாரா இருக்கும். ரெண்டரை அடி ஒசரம் தான் உருவம்.

"டேய் முத்து, அங்கன என்னா பண்ற. தீப்பெட்டி கொளுத்தி போடுறியா ?"

"இல்லம்மா வேப்பம் பழம் இருக்கான்னு குச்சி கொளுத்தி பார்த்தேன்"

ரொம்ப பழக்கமான, கொஞ்சமும் பிடிக்காத, எப்பவும் எரிச்சல் ஏற்படுத்துற நெடி அடிக்குதே. சந்தேகமா இருக்கு.

"முத்து இங்க வா", கடவுளே அப்பிடி இருக்கக் கூடாது.

முத்து மொகத்துல மூணு விரலயும் நல்லா பதிச்சிட்டேன்.

"ஏன்டா, மொளச்சு மூணு இலை விடல அதுக்குள்ளார அப்பன் புத்தி தப்பாம வந்திருச்சேடா ஒனக்கு.அந்தாளுக்கு தான் வளர்ப்பு சரியில்லாம இப்பிடி ஆயிட்டாருன்னா ஒனக்கென்ன கேடு ?"

"....."

"முழிக்கிறத பாரு. ஓடாதடா இங்க நில்லு, நில்லுங்கறேன்ல. என்னையெல்லாம் எங்க ஆத்தா பஞ்சாரத்துல அடைச்சி போட்டு கதிரறுக்க போயிடும். காட்டு மரமாட்டம் தானா வளர்ந்தேன். உங்கள கோழி அடைகாத்த மாதிரி பொத்தி பொத்தி வளக்கும் போதே இப்பி துண்டு பீடி பொறுக்கி.....ச்சே"

விசிறிக்கட்டை சரல் சரலா பிஞ்சிது. நல்லா வரி வரியா இழுத்துட்டேன். ஆனாலும் மனசு மட்டுப்படலை. அந்தாளு வரட்டும் இன்னிக்கு.

"என்னாடி ரொம்ப தான் பேசிட்டே போற. என்னாது கேன்சர் வருமா எனக்கு. அதுக்கு தான என்ன கட்டிக்கிட்ட. வரட்டும்டி, வரட்டும். ஆனா ஒண்ணுமட்டும் சொல்றேன். எனக்கு என்னா சீக்கு வந்தாலும், சிறுக்கி நீ பாக்க மட்டும் நான் படுத்துக் கெடக்கமாட்டேன்டீ. அப்பிடி பொழச்சுக்கெடக்கிறதுக்கு அரளிய அரைச்சுக் குடிச்சிடுவேன்"

சொர்க்கமோ நரகமோ மனுசன் சொல்லுல தான் இருக்கு. அவரோட ஒவ்வொரு சொல்லும் என்னை தீயில வச்சு வாட்டுச்சு. அவரு பங்குக்கு மீதியிருந்த விசிறிக்கட்டைய பிச்சிட்டு வெளிய போயிட்டாரு. நான் நல்லதுக்கு சொன்னாலும் பொல்லாப்பா தான் போகுது. முத்து அடிக்கு பயந்து அக்கா வீட்டுக்கு போய்ட்டான். போய் கூட்டியாரணும்.

"என்னடி ஆச்சு, உன் புருசன் இங்கன வந்து சலம்பிட்டு போறான். பேச்சு சொகமில்ல. நிம்மதியில்ல. மருந்தக் குடிப்பேன். அது இதுன்னு சொல்லிட்டு போறான்"

"அத வேற ஏன் கேக்குற விடு. முத்து எங்க அவன கூப்புடு"

உள்ளங்கைல அடங்குற பிஞ்சு மொகம் அழுது அழுது வீங்கிப்போய் இருந்தது. முகத்துல இன்னும் கை தெரிஞ்சது. தவமிருந்து பெத்த என் கொல தெய்வத்த நானே போட்டு செதச்சிட்டேன்.

"என்னடா ராசா வலிக்குதா ? இனிமே அம்மா சாவுந்தட்டிக்கும் நீ இப்பிடி செய்யக்கூடாது. நானும் உன்ன அடிக்க மாட்டேன் சரியா ?", பேசும் போதே எனக்கு அழுகை முட்டிக்கிச்சு.

"சாமி சத்தியமா செய்ய மாட்டேம்மா", விக்கி விக்கி பதில் சொன்னான். எப்பவுமே நான் அழுதா அவனும் அழுதுடுவான்.

ரெண்டு தெரு தாண்டியிருப்போம்,"அம்மா, அப்பா பாவம்மா".

சின்னப்புள்ளை கிட்ட என்னத்த சொன்னாருன்னு தெரியலயே.

"அதெல்லாம் அப்பா சும்மா தான் சொல்லிருப்பாரு. நீ ஒண்ணும் நெனைக்காத, ஒழுக்கமா பள்ளிக்கூடம் போ, வெளாடு அம்புட்டுதான்", என்னமாவது சொல்லி சமாளிக்கலாம்னு பாத்தேன்.

"இல்லம்மா, அது பிடிக்கும் போது தொண்டையெல்லாம் எம்புட்டு எரிஞ்சது தெரியுமா ? அப்பா நெதமும் எம்புட்டு பிடிக்கிறாரு. ரொம்ப எரியும்ல. அப்பா பாவம்மா"



பி.கு: இந்த சிறுகதை 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

16 comments:

மணிப்பக்கம் said...

அருமையாக இருக்கிறது! வாழ்த்துக்கள்! ;)

Unknown said...

கதை சூப்பர். வாழ்த்துக்கள்.வட்டார வழக்கு இயல்புடன்
வந்திருக்கிறது.

Thamira said...

வாழ்த்துகள் வெண்ணிலா.!

Kumky said...

வாழ்த்துக்கள்...

வெண்பூ said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் வெண்ணிலா..

ரெஜோ said...

வாழ்த்துகள் நண்பரே ! :-)

Bee'morgan said...

ரொம்ப இயல்பா வந்திருக்கு .. வாழ்த்துகள் நண்பரே :-)

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க

வாழ்த்துகள்.

RRSLM said...

வாழ்த்துகள் வெண்ணிலா!

சீமாச்சு.. said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் அரவிந்தன். கதை நல்ல ஓட்டத்தில் இருக்கிறது. பரிசு பெற மிகத் தகுதியான கதை தான்..

PPattian said...

கதை அருமை. முடிவும் அப்படியே. வாழ்த்துகள்.

"உழவன்" "Uzhavan" said...

பரிசு பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள்

அவனி அரவிந்தன் said...

வாழ்த்திய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்

செந்தில் நாதன் Senthil Nathan said...

அருமயா இருக்குதுயா!!

அண்ணாமலையான் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

aazhimazhai said...

ரொம்ப நல்ல இருக்கு !! வாழ்த்துக்கள்

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.