Wednesday, May 5, 2010

பதில்களற்ற மடலாடல் - கவிதை


முந்தைய குளிர் இரவின்
தனிமை ஏற்றிவிட்ட கனத்தை
கரைத்துவிடும் குறிக்கோளுடன்
சாலையில் போவோர் வருவோர்
அனைவரைப் பார்த்தும் சிரிக்கிறான்
முறைப்புகளைப் பொருட்படுத்தாமல்
சலாம் வைக்கிறான்
அவ்வப்போது கொஞ்சம்
பாலிதீன் காகிதங்களையும்
அவன் கடித்துக் கொள்கிறான்

சுண்ணாம்பும் கரியும் கொண்டு
வரையப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதி
தார் தரையில்
அருள் பாலித்துக் கொண்டிருக்க
நடந்து செல்லும் பக்தரெல்லாம்
கன்னத்தில் போட்டபடியே
கடந்து போகிறார்கள்
சாலையின் சரிவில் புரளும்
கால்களற்ற ஓவியனின்
வர்ணம் இழந்த கண்களை
நேர்கொண்டு பார்க்கும் போது
சட்டைப்பையில் சிறைப்பட்ட சில்லறைகளை
தடவிப் பார்த்துக் கொண்டே
மறைந்து போகிறார்கள்

மாராப்பை பூமிக்குத்
தாரை வார்த்துவிட்டு
வளைந்து நெளிந்து
பிரம்மாண்டமாய் நிற்கும் அழகியின்
பட்டுத் துணி மூடிய
பாகங்கள் குறித்த கற்பனையில்
பல விதமான கண்கள்
குத்திக் கிடக்கின்றன
விழிகளை விட்டுச் சென்றவர்கள்
அவற்றை மீண்டும் எடுத்துக் கொள்ள
மறந்து போகிறார்கள்

மரணத்துடன்
மடலாடிக் கொண்டிருக்கும்
மூதாட்டியின் சுருங்கிய கண்வழியே
விரியும் இந்த சாளரத்து உலகம்
எந்தப் பார்வைகளைப் பற்றிய
பிரக்ஞையும் இன்றி
தன் போக்குக்கு
சுழித்து ஓடிக் கொண்டிருக்கிறது

"பாட்டி உங்களுக்கு
மேல் வார்டுக்கு மாத்திருக்கு போலாமா ?"
செவிலிப் பெண்ணொருத்தியின் குரலுக்கு
மூச்சை ஆழமாக உள்ளிழுத்தபடி
சாளரத்துக்கு வெளியில்
வேடிக்கை பார்த்துக் கொண்டே
"ஆகட்டும்", என ஆயத்தம் ஆகிறாள்
அப்போது சாளரத்தின் திரைச்சீலை
காற்றில் மெலிதாகப்
பிரண்டு கொண்டிருந்தது!
-
அன்புடன் அவனி அரவிந்தன்.

வெளியிட்டதற்கு நன்றி உயிர்மை !

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2553

4 comments:

Ashok D said...

நல்லாயிருக்குங்க :)

கமலேஷ் said...

ரொம்ப நல்லாருக்குங்க....

அவனி அரவிந்தன் said...

கருத்துகளுக்கு நன்றி இராமசாமி, அசோக், கமலேஷ்

suganya said...

kaalai nerathil thendral theendiya sugam ... ungal kavithai.

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.