Saturday, September 28, 2013

நட்சத்திரங்களின் மீளாவுறக்கம்



பனிப்புகையடர்ந்த கானகத்து 
வித்திலைத் தாவரங்களின்
கூரிய இலைகள் உரசும் இடைவெளியில்
பச்சைக் கேள்விகள் மலிந்த
நம் உரையாடல் பிரசவிக்கின்றது
வாதங்கள் குறுகி நுழையும்
பாறைகளின் இடுக்கில்
உருவற்ற நம் எண்ணப் படிமங்கள்
வைகறை வானத்துடன்
நிறம் மாறிக் கொண்டிருக்கின்றன
திசை பிரிவதற்கான ஒத்திகையை முடிக்குமுன்
விடுபட்டுப் பறந்த வார்த்தைகள்
கருநீல வெளியைக் கிழித்துப் பாயும்
ஒளிக்கற்றைகளிடமிருந்து ஒளிந்து தப்பி
நிழலைத் தேடித் திரியும்
எதிர்பாராத ஒரு நொடியில்
சட்டென்று 
நிசப்தத்தின் ஓர் அலையிலேறி
நட்சத்திரங்களின் 
மீளாவுறக்கத்தில் சாய்ந்துவிடுகின்றன
இணக்கத்தைத் தொழுது நிற்கும்
வேர்விட்ட கண்கள் பற்றிய சலனமின்றி !


- அவனி அரவிந்தன்.

No comments:

Post a Comment

கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.