மின் திரையின்
அம்புக்குறித் தீண்டலில்
கலங்கிக் கலைகிறதென்
கனவுகளின் கன்னித்தன்மை
விரல்களைக் குதறியெடுத்து
விரைந்தோடும் எலிகளை
விரட்டிப் பிடித்து
பொறிக்குள் அடக்குமுன்
தட்டச்சிய எழுத்துகள்
வார்த்தைச் சட்டங்களில் இருந்து
தாவிக் குதித்து மறைகின்றன
சொல்நஞ்சுகள் துருத்தியபடி கிடக்கும்
மென்பஞ்சு இருக்கையில்
புரையோடிக் கிடக்கின்றன
காயங்கள் புசித்த நுண்ணுயிரிகள்
குளிர் ஊடுருவும் தேகத்தில்
தூண்டிலின் உறுத்தல்களோடே
ஆழத்தில் நீந்திக் கொண்டிருக்கிறேன்
உறவுகளின் உடைந்த மிச்சங்களுக்கிடையில்
பின்னிரவுத் தேநீரின்
பித்த மயக்கத்தில்
ஒரு மந்திரக்காரனின் புறாவாக
இறகுகளின் படபடப்பில்
எனது சுதந்திரத்தை
உதிர்த்துக் கொண்டிருக்கிறேன்
அகழ்ந்தெடுத்த தரவுகளின் குவியலில்
அவை குப்பையாய் விழுந்து மரிக்கின்றன !
- அவனி அரவிந்தன்
No comments:
Post a Comment
கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.