வழமையாகக் கழியும் தினங்களில்
கரியைத் தோய்த்தது
வானவிழ்த்த நீர்த்திரைகள்
நனைந்த மேனிகளை விட்டு
நழுவிக் கலைந்தன
சில ஆழ்ரகசிய நிறங்கள்
விளக்கணைத்த
வீட்டுக் கதவுகள் வழியாக
சிதறிய திரவத்திவலைகளை
எதனுடன் உருவகப்படுத்துவதென
தீர்க்கமாக யோசிக்கிறது
ஒவ்வொரு வாசலிலும்
விழுந்துறங்கிக் கொண்டிருக்கும் வீதி
பாதையோரப் பள்ளங்கள்
குவித்த நீரில்
பதுங்கியபடி துரத்துகிறது
புசித்த பின்னும்
மீதமிருக்கும் பசியையொத்த
எனது பாதி பிம்பம்
சிறு சாரல் மழையின்
சங்கேத முணுமுணுப்புகளுக்கு
இருசெவிகளையும்
இரவல் கொடுத்தவாறு
ஒத்தையாய் ஊர்கிறது
நெடிய இரவு
சந்தடி மிகுந்த
சாலையைக் கடக்கும்.
ஓடற்ற நத்தையைப் போல !
- அவனி அரவிந்தன்
No comments:
Post a Comment
கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.