'அன்பே' என்று ஆரம்பிக்கக்கூட அச்சமாக இருக்கிறது, அது ஆல்கஹால் வீச்சமெடுக்கும் அசிங்க வார்த்தையென்று நீ சொன்ன பிறகு. ஏதோவொரு கடிதத்தில் உடல்முழுதும் இரை தேடும் விஷக் கொடுக்குகள் முளைத்த கொடூர மிருகமொன்றை வரைந்து அதற்கு 'அன்பு' என்று பெயரிட்டு பிறகு அதை ரா முழுதும் கொஞ்சம் கொஞ்சமாகக் கிழித்து காற்றில் உயர எறிந்திருக்கிறேன். எத்தனை முறை, திறந்த பேனாவுடன் விடிய விடிய விளக்கெரித்து விட்டு வெற்று வெள்ளைக் காகிதங்களை மனப்பிறழ்வோடு கசக்கிக்கிழித்திருக்கிறேன். வெறுமையாக இருந்ததால் அதில் ஒன்றும் இல்லை என்று நீ நினைத்தால் அது உன் சபிக்கப்பட்ட அறியாமையே. வடிக்கப்படாத வார்த்தைகளின் வன்மம் நீ அறிய முடியாது. வார்த்தைகளால் புறக்கணிக்கப்பட்ட வெள்ளைக் காகிதத்தின் ஓலம் உன் காதுகளில் நுழையாது. மொத்தக் கடிதங்களிலும் அந்தக் கடிதங்களே மிகவும் துயரமானவை.